News
Loading...

வழிப்பறி நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதா? : மோடி அரசை சாடும் மக்கள்

வழிப்பறி நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதா? : மோடி அரசை சாடும் மக்கள்

ண்டுக்கு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயை வழிகளில் வாகனங்களை நிறுத்தி வசூலிக்கின்றன டோல்கேட் நிறுவனங்கள். ‘அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் அதிகமாக வசூல் செய்கின்றன’ என்பது உள்ளிட்ட புகார்களுக்கு இடையே, இந்த வழிப்பறி நிறுவனங்களுக்கு மேலும் வாரிக்கொடுத்திருக்கிறது மத்திய அரசு. 

‘கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துகிறேன்’ என்று 500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கினார் பிரதமர் மோடி. அவரது எண்ணம் நிறைவேறியதோ, இல்லையோ... அப்பாவி மக்கள்தான் திண்டாடி வருகின்றனர். வேதனை தரும் உயிரிழப்புகள் ஒரு பக்கம். ஜனாதிபதியே வேதனையோடு குறிப்பிடும் அளவுக்கு பணப்புழக்கம் இல்லாமல் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு இன்னொரு பக்கம். சிறு வியாபாரிகள், தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகள் என அடித்தட்டு மக்கள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். ‘பணமில்லா பரிவர்த்தனை’ என்பதையே முதன்முறையாகக் கேள்விப்படும் பெரும்பாலானோரின் தொழில்கள் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசு சத்தமில்லாமல் ஒரு காமெடியை அரங்கேற்றியிருக்கிறது. பணத் தட்டுப்பாடு காரணமாக நவம்பர் 9-ம் தேதி மதியம் முதல் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு வரை நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அரசு அறிவித்ததால் டோல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இப்படி 24 நாட்களுக்கு டோல் வசூலிக்கப்படாததால் டோல் பிளாஸாவை நடத்தி வரும் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மொத்தமாக 922 கோடி ரூபாயை இவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. ‘அரசின் கொள்கை முடிவுகளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் நஷ்டஈடு தரப்படும்’ என இவர்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது அரசு. ‘நாட்டின் கட்டமைப்புக்காக முதலீடு செய்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த’ இதைச் செய்ததாக அரசு சொல்கிறது.  

டோல் கட்டண வசூலிப்பு மூலம் பெரும் லாபம் பார்த்து வந்த நிறுவனங்களுக்கு 24 நாட்கள் ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு தரும் மத்திய அரசு, தினசரி வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தைவைத்து காலத்தை ஓட்டும் வியாபாரிகளை மறந்தேவிட்டது.

இதுகுறித்து சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் சங்கத் தலைவர் சி.பாபுவிடம் பேசியபோது, “ஏற்கெனவே கார்ப்பரேட்டுகள் சிறு வியாபாரிகள் உற்பத்தி செய்துவந்த அத்தனை பொருட்களையும் சந்தையில் விற்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் எங்களைப் போன்ற சிறு, குறு வியாபாரிகள் நடத்திவந்த மிச்சச் சொச்ச வியாபாரத்தையும் மொத்தமாகப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்கும் விதமாகத்தான் செல்லாக்காசு, பணமில்லா பரிவர்த்தனை போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். இந்த 2 மாதங்களில் மட்டும் சிறு வியாபாரிகள் 60-லிருந்து 70 சதவிகிதம் வரை நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். இவர்களை விடவா இந்த டோல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிட்டன? டோல் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதுபோல ஆயிரம் கோடி இழப்பீடுகூட நாங்கள் கேட்கவில்லை. எங்களின் கடன்களுக்கான வட்டியையாவது இந்த மூன்று மாதங்களுக்கு தள்ளுபடி செய்யலாம். அதற்கான கோரிக்கையை எங்கள் சங்கம் சார்பாக வைத்துள்ளோம்” என்றார்.  

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் தாமஸ் ஃப்ரான்கோ, “இந்த செல்லாக்காசு நடவடிக்கையால் உயிரிழந்த மக்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அரசு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.  

அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும் தொழில்முனைவோருமான ரகுநாதன், “உற்பத்தித் துறை, சேவைத் துறை என பாரபட்சம் இல்லாமல் அனைத்து துறைகளிலும் செல்லாக்காசு நடவடிக்கையால், 20 முதல் 60 சதவிகிதம் வரை வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தினக்கூலியை நம்பி இருப்பவர்கள் மட்டுமே நாட்டில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். பணத்தட்டுப்பாட்டினால் அவர்களுக்குக் கூலி வழங்க முடியாமல் தொழிலும் செய்ய முடியாமல் தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய இழப்புகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக அரசு நடந்துகொள்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார். 

இந்தப் பிரச்னைகள் பற்றி இதுவரை அரசு ஒரு வார்த்தைகூட பேசாமல், டோல்கேட்டுகளுக்கு நஷ்டஈடு வழங்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. சுங்கச் ‘சாவடி’ எனச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இழப்பு கணக்கு!

அக்டோபர் மாத சராசரி வசூல் அடிப்படையில் டோல் பிளாஸாக்களுக்கு இழப்பு வழங்கப்படுகிறது. நாடு முழுக்க மத்திய அரசும் தனியாரும் பங்குதாரராக இணைந்து உருவாக்கிய சாலைகளில் 317 டோல் பிளாஸாக்கள் உள்ளன. இவற்றில் ஒருநாள் சராசரி வசூல் 51.59 கோடி ரூபாய். இதன் அடிப்படையில் 1212 கோடி ரூபாய் இழப்பீடாகக் கேட்டனர். 922 கோடி ரூபாய் கொடுக்கப்போகிறது அரசு. இதுதவிர இந்த  24 நாட்களுக்கான வட்டிச் செலவில் 90 சதவிகிதத்தையும், பராமரிப்புச் செலவை முழுமையாகவும் ஏற்கிறது மத்திய அரசு.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.