News
Loading...

மறுக்கப்பட்ட பதவி... கைப்பற்றிய தளபதி!

‘மறுக்கப்பட்ட’ பதவி... ‘கைப்பற்றிய’ தளபதி!

‘ஒட்டுமொத்தமான உங்களுடைய கரவொலி, கலைஞர் வீற்றிருக்கும் அவருடைய இல்லம் வரை கேட்கும் என நான் தெரிவித்து, ஸ்டாலின் அவர்களை செயல் தலைவராக இங்கே உரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ - அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இருந்து பேராசிரியர் அன்பழகன் சொன்னார். தன் மகன் வயதுள்ள ஸ்டாலினை வரவேற்று அன்பழகன் பேசினார். அவர், கருணாநிதியைவிட ஒரு வயது மூத்தவர். திருவாரூரில் சாதாரணத் தொண்டராகக் கட்சிப் பணி ஆற்றிவந்த கருணாநிதி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த அன்பழகனை அழைத்துவந்து தனது ஊரில் கூட்டம் பேசவைத்தார். அதே அன்பழகன், இன்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினை, கட்சியின் செயல் தலைவராக 70 ஆண்டுகள் கழித்து முன்மொழிந்துள்ளார். வரலாறு, எப்போதும் ஆச்சர்யம் தருவது. அது பரவாயில்லை. ஆனால் அதிர்ச்சி என்ன என்றால், தனக்குத் தெரியாமல் கட்சிக்குள் துரும்பைக்கூட அசைக்க முடியாமல் இரும்புச் சக்தியாக இருந்த கருணாநிதிக்கு இது தெரியாது.

அன்பழகன் பேசியதும், அதற்கு தி.மு.க தொண்டர்களின் கைத்தட்டலும் கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதிக்கு நிச்சயம் கேட்டிருக்காது. கேட்கும், உணரும் நிலைமையில் அவரது உடல் நிலையும் இல்லை. முதுமையின் காரணமாக, நினைவுகள் தவறிய நிலையில் கருணாநிதி படுக்கவைக்கப்பட்டுள்ளார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் இரண்டாவது வாரத்துக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. படுத்தும் படுக்காமலும், உடல் நலம்பெற்றும் பெறாமலும், தெளிவாகவும் தெளிவு இல்லாமலும்தான் அவரது உடல்நிலையும் சிந்தனையும் மாறிமாறி இருந்தன. மருந்து ஒவ்வாமை காரணமாக அவரது உடல் முழுக்கக் கொப்புளங்கள் வந்தன. பின்னர் அவை குணப்படுத்தப்பட்டன. திடீரென நெஞ்சில் சளி கோத்துக்கொண்டது. அதுவும் குணப்படுத்தப்பட்டது. ஆனால், நினைவு இழப்பு மெள்ள ஏற்பட்டது. அவர் பேசுவது மற்றவர்களுக்குப் புரியவில்லை. மற்றவர்கள் பேசுவதை, அவரால் உணர முடியவில்லை. நாளிதழ்களை உரக்க வாசித்துக்காண்பித்தார்கள். அவர் எழுதிய பழைய கட்டுரைகளைப் படித்துக் காட்டினார்கள். அவர் எழுதிய பாடல்களை ஓடவிட்டார்கள். சில சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன. இவை அனைத்தும் அவரது நினைவை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள். இவை இன்னமும் தொடர்கின்றன. இந்த நிலையில் ஸ்டாலின் ‘செயல் தலைவர்’ ஆக்கப்பட்டுள்ளார். கருணாநிதியே தருவார் என எதிர்பார்க்கப்பட்டது, எதிர்பாராத நிலையில் ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ளது. 

உடல் நிலை சரியில்லாத நிலையில் கருணாநிதியை விமர்சிப்பது அழகு அல்ல என்றாலும், உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஸ்டாலினுக்கு எப்போதோ தரப்பட்டிருக்கவேண்டிய பதவி இது. 1953-ம் ஆண்டு பிறந்த ஸ்டாலினுக்கு, 63-ம் வயதில் இந்தப் பதவி கிடைத்துள்ளது. மிக இளம்வயதில் கோபாலபுரம் தி.மு.க இளைஞர் குழுவைத் தொடங்கியவர். அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டப்படி கைதாகி சிறையில் இருந்தவர்.

80-களில் தி.மு.க-வில் அவருக்காகவே இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால், அன்பகம் ஸ்டாலினுக்குக் கிடைத்தது. தி.மு.க மாநாடுகளில், அவருக்கு ‘தளபதி’ முத்திரை கிடைத்தது. மாநாட்டு ஊர்வலங்களில் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேன்ட்டில் தனி ஆவர்த்தனம் காட்டினார். வணக்கத்துக்கு உரிய சென்னை மாநகரத் தந்தை ஆனார்.  அதன் பிறகு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றினார். அமைச்சர் ஆனார். துணை முதலமைச்சர் பதவியையும் கொடுத்தார் கருணாநிதி.

கட்சியில் இளைஞர் அணிச் செயலாளர் ஆனார்; துணைப் பொதுச்செயலாளர் ஆனார்; பொருளாளர் ஆனார்; இப்போது செயல் தலைவர் ஆகியிருக்கிறார்.

‘மறுக்கப்பட்ட’ பதவி... ‘கைப்பற்றிய’ தளபதி!

தன் மகன் என்பதாலேயே பதவிகளை, பொறுப்புகளை ஆரம்ப காலத்தில் ஸ்டாலினுக்குத் தாரைவார்த்தார் கருணாநிதி. அதே நேரத்தில் மகனாகவே இருந்தாலும் தனக்கு மேல் வளர்ந்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாகக் கட்டையைப் போட்டும்வந்தார். கட்சியில் பொருளாளர் பொறுப்பும், ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவியும் ஸ்டாலினைத் திருப்திப்படுத்தத் தரப்பட்டதே தவிர, கருணாநிதியே மனமுவந்து தந்தவை அல்ல. ஏதோ ஒன்றைக் கொடுத்துத் தட்டிவைக்கவே கருணாநிதி பெரும் முயற்சிகள் எடுத்தார். ‘தி.மு.க-வின் அடுத்த தலைவர் யார்?’ என ‘தினகரன்’ நாளிதழ் நடத்தியதாகச் சொல்லி வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் ஸ்டாலினுக்குத்தான் செல்வாக்கு என அறிவிக்கப்பட்டது. இன்று அல்ல, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அந்தக் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அழகிரி ஆட்கள் ‘தினகரன்’ நாளிதழின் மதுரை அலுவலகத்துக்குள் புகுந்து கொளுத்தினார்கள். மூன்று ஊழியர்கள் பலியானார்கள். அந்தக் கருத்துக்கணிப்பில்கூட அழகிரியைவிட கருணாநிதிதான் அதிகம் கடுப்பானார். அன்று அவர் முதலமைச்சராக இருந்தார். சன் டி.வி-யை அறிவாலயம் வளாகத்தில் இருந்து அனுப்பிவைத்ததும், கலைஞர் டி.வி தொடங்கப்பட்டதும், 2ஜி விவகாரம் வெடித்ததும், ஆ.ராசா கைதும், கனிமொழிக்குச் சிறையும்... அடுத்தடுத்து நடந்த வரலாற்றின் அத்தியாயங்கள்.

இந்தக் களேபரத்தில் இருந்துதான் கருணாநிதி குடும்பத்துக்குள் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூன்று கத்திகள் எப்போதும் தங்களைக் கூர்தீட்டிக்கொண்டே இருந்தன. அழகிரிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி, மத்திய அமைச்சர் பதவி தந்தார். கனிமொழியை மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக்கினார்; மகளிர் அணிச் செயலாளர் பதவியும் கொடுத்தார். அப்பத்தை மூன்று பேருக்குமாகப் பங்கிட்டுக் கொடுப்பதில் கருணாநிதி சமத்தராக இயங்கிவந்தார். ஆனாலும், தலைமை அப்பத்தைத் தனக்கு எனத் தக்கவைத்துக்கொண்டார்.

தலைவர் பதவியைக் குறிவைத்தார் ஸ்டாலின். ‘அவர்தான் அடுத்த தலைவர்’, ‘எதிர்காலத்தில் உங்களை வழிநடத்த இருக்கிற’ என்ற வார்த்தைகளைச் சொல்லியே ஸ்டாலினை அடக்கிவைத்தார் கருணாநிதி. ‘தலைமைப் பதவிக்குப் போட்டி வந்தால், நான் ஸ்டாலினையே ஆதரிப்பேன்’ என்று எல்லாம் சொல்லிப்பார்த்தார். இது அழகிரிக்கு வெறுப்பைக் கொடுத்தது. ‘நானும் போட்டியிடுவேன்’ எனக் குதித்தார் அழகிரி. அவருக்கு வாய்தான் எதிரி. மதுரை விமானநிலையத்திலும் சென்னை விமான நிலையத்திலும் யாரோ அவருக்கு மருந்து வைத்துள்ளார்கள்போல. இரண்டு இடங்களிலும் மைக்கைப் பார்த்ததும் தம்பியை மட்டும் அல்ல, தலைவரையும் பதம்பார்த்தார். இது ஒரு கட்டத்தில் கோபாலபுரத்தில் கைகலப்பாக மாறி, ‘அழகிரி என் மகனே அல்ல’ எனச் சொல்லும் அளவுக்குப் போனது. கட்சியைவிட்டும் அழகிரி நீக்கப்பட்டார். அம்மையப்பனைச் சுற்றிவந்து பழத்தைப் பெறுவதற்கு ஸ்டாலின் திட்டமிட்டார். ஆனாலும் பழம் தர ‘தலைவர்’ தயாராக இல்லை. இனி இவரை நம்புவது வீண் என்று, ‘நமக்கு நாமே’ கிளம்பினார் ஸ்டாலின். தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செய்தார். கட்சியில் இவர்தான் அடுத்த தலைவர் என்பது மட்டும் அல்ல, 2016-ம் ஆண்டு தேர்தலில் இவர்தான் தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் எனப் பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித எண்ணம் பரவியது. தன்னைச் சுற்றினாலும் ஊரைச் சுற்றினாலும் பழம் தரத் தயாராக இல்லை அரசியல் சிவன்.

தானே சுற்றிவர கருணாநிதியின் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. ஆனால், மகன் அலைந்துதிரிந்து தன்னை முதலமைச்சராக ஆக்குவார் என்ற நம்பிக்கையும் இல்லை. பல்வேறு கட்சிகளை அழைத்துவந்து மெகா கூட்டணி அமைக்கத் திட்டமிட்டார் கருணாநிதி. ஸ்டாலின் அதை விரும்பவில்லை. ‘கருணாநிதியை முதலமைச்சர் ஆக்குவது என்பது, அழகிரி மற்றும் ராசாத்தி அம்மாள் கரங்களைத்தான் வலுப்படுத்தும்’ என ஸ்டாலின் ஆட்கள் நினைத்தார்கள். ‘ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும்’ என இவர்கள் சொன்னார்கள். தி.மு.க வெற்றிபெறுமா என்பதைவிட, முதலமைச்சர் நாற்காலியில் உட்காரப்போவது கருணாநிதியா, ஸ்டாலினா என்ற மோதல் உள்ளுக்குள் நடந்தது. ‘உங்கள் கட்சிக்கு யார் தலைவர்?’ என, சட்டமன்றத்திலேயே அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கேட்கும் அளவுக்குச் சண்டை வெளிப்படையாகவே நடந்தது.

‘தலைவர் பதவியை ஸ்டாலினுக்குக் கொடுத்தால், அழகிரி பிரச்னை செய்வார்’ என கருணாநிதி சொன்னார். ‘தருவதற்கு இவருக்கே விருப்பம் இல்லை’ என ஸ்டாலின் நினைத்தார். ‘தம்பிக்குத் தந்துவிடுவாரோ?’ எனப் பயந்தார் அழகிரி. ‘அண்ணனுக்குக் கொடுத்தால் தனக்கான முக்கியத்துவம் தொடருமா?’ என கனிமொழி கவலைப்பட்டார். ‘அவர் இருக்கும் வரை தலைவராக அவர்தான் இருக்க வேண்டும்’ என ராசாத்தி அம்மாள் சொன்னார். இந்தப் பஞ்சபூதங்களின் கிரக நிலையில் தி.மு.க சிக்கியிருந்த நேரத்தில்தான் கருணாநிதிக்கு உடலில் கொப்புளங்கள் வெடித்தன. அது கால், கையில் இருக்கும் வரை, முக்கியப் பிரமுகர்கள்கூட அவரைச் சென்று சந்தித்தார்கள். கழுத்தில் முகத்தில் வந்தபோது அவர் சவரம் செய்யாமல் தாடியுடன் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் அவரால் உணவு உட்கொள்ள முடியவில்லை. இதற்காக மூக்கில் குழாய் பொருத்தப்பட்டது. இப்போது அந்தக் குழாய் வயிற்றில் பொருத்தப்பட்டுள்ளது.

கருணாநிதியால் பொதுக்குழுவுக்கு வர இயலாது எனத் தெரியும். தெரிந்தேதான் `கருணாநிதி தலைமையில் பொதுக்குழு’ எனப் போட்டார்கள். மருத்துவமனையில் இருக்கும்போது பொதுக்குழு நடத்தினால் சரியாக இருக்காது என்பதால், வீட்டுக்கு அழைத்துவந்து பொதுக்குழு நடத்தப்பட்டது. இந்தச் `செயல் தலைவர்’ கோரிக்கை ஒரு மாதத்துக்கு முன்னர் வந்தபோது, பொதுச்செயலாளர் அன்பழகனே தவிர்க்கப் பார்த்தார். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக கருணாநிதியின் நிலைமை சரியில்லை என்றதும், தலைமையை மாற்றிக்கொடுப்பதே கட்சிக்கு நல்லது என அன்பழகனே முடிவுக்கு வந்தார். ‘தலைவர் பதவி விலகினாலோ அல்லது நீண்ட நாட்களுக்கு கழகப் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ, செயல் தலைவரை நியமிக்கலாம். தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள் மற்றும் பணிகளை செயல் தலைவர் ஆற்றுவார்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல் தலைவர் ஆக்கப்பட்டார் ஸ்டாலின். `கருணாநிதி, இதை விரும்பினார்' என நல்லவேளை யாரும் சொல்லவில்லை.

‘இந்தப் பொறுப்பை ஏற்கும் நேரத்தில் என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. அதிகம் பேச முடியவில்லை. பேச விரும்பவும் இல்லை’ என்று சோகம் இழையோட ஸ்டாலின் சொன்னதற்குக் காரணம், கருணாநிதி உடல்நிலைதான்.

‘என்னைப் போற்றினாலும் தூற்றினாலும் `கருணாநிதி' என்ற பெயரைச் சொல்கிறார்கள். அது எனக்குப் பெருமைதான்’ எனச் சொன்ன கருணாநிதியின் இடத்துக்கு ஸ்டாலின் வந்துவிட்டார். இனி போற்றினாலும் தூற்றினாலும் ஸ்டாலின்தான் அதற்குக் காரணம். இதுவரை, ‘என்னிடம் கொடுக்கட்டும். என்னிடம் கொடுக்கட்டும்’ எனச் சொல்லிவந்தார் ஸ்டாலின். இப்போது எடுக்கப்பட்டுவிட்டது. கருணாநிதியின் அல்லதை நீக்கி, கருணாநிதியாக ஸ்டாலின் ஆகவேண்டிய காலம் தொடங்கிவிட்டது.

கருணாநிதி தலைவர் ஆகும்போது அவரை ஏற்றுக்கொள்ளாத எதிரிகள் கட்சியில் அதிகம் இருந்தார்கள். அப்படிப்பட்ட எதிரிகள் இப்போது ஸ்டாலினுக்கு இல்லை. ஆனால், நண்பர்கள் போர்வையில் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதுதான் அதிக ஆபத்து. இவர்களை அவர் அடையாளம் காணவேண்டியதே ஸ்டாலினின் முதல் வேலை. அனைத்து வசதி வாய்ப்புகளும் இருந்த நிலையில் கட்சியைக் கைப்பற்றுவது தளபதிகளுக்குச் சாதாரணமானதுதான். ஆனால், தன்னை நிலைநிறுத்திக்கொள்வது அசாத்தியமானது.

ஸ்டாலின் ‘தளபதி’யாகவேண்டியது இனிமேல்தான்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.