News
Loading...

சசிகலா வசமாகுமா எம்.ஜி.ஆர் மந்திரம்?

சசிகலா வசமாகுமா எம்.ஜி.ஆர் மந்திரம்?

‘‘யாருக்கு யார் அடங்கிப்போவது என அ.தி.மு.க-வில் ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறது’’ 

‘‘அ.தி.மு.க-வில் தனக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது என்று சசிகலா காய் நகர்த்தி வருகிறாரே, அதைச் சொல்கிறீரா?’’

‘‘ஆமாம். சசிகலா தனது நேரத்தையும் பொருளையும் இதற்காகத்தான் இப்போது செலவிட்டு வருகிறார். சசிகலாவுக்கு எதிராக முதலில் வெளிப்படையாகப் போர்க்கொடி தூக்கிய நாஞ்சில் சம்பத்தையே மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். சசிகலாவுக்கு ஃபைட் கொடுத்துவரும் தீபாவை வளைக்கவும் பகீரத முயற்சிகள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. அதனால், இப்போது அ.தி.மு.க-வின் அடிநாதமான எம்.ஜி.ஆர் மீது கண் வைத்திருக்கிறார்கள்.’’

‘‘அப்படியா?’’

‘‘எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திரத்தை வசப்படுத்த இப்போது சசிகலா தயாராகிவிட்டார். அதனால்தான் அவர் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அதே பொதுக்குழுவில், 
‘எம்.ஜி.ஆருக்கு தபால் தலை, நாணயம் வெளியிட வேண்டும்’ என்று தீர்மானம் போட்டார்கள். அதோடு எம்.ஜி.ஆரின் உறவுகளை சசிகலாவுக்கு ஆதரவாகப் பேச வைக்கும் வழிகளையும் செய்திருக்கிறார்கள். அதனால்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ராமாவரம் பயணம். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெரும் வெள்ளம் வந்தபோது, அடையாறு ஆற்றோரம் இருக்கும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டமும் சேதம் அடைந்தது. அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

‘எம்.ஜி.ஆரின் இல்லத்தை நான் புதுப்பித்துத் தருவேன். இது எம்.ஜி.ஆருக்கு செய்யப்படும் நன்றிக்கடன்’ என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி, வேலைகள் எல்லாம் நடந்தன. ஒரு வருடமாக எம்.ஜி.ஆர் சிலையும் மூடியே இருந்தது. இப்போது சோதனைகளை சமாளிக்க எம்.ஜி.ஆர் இல்லத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள். அங்கு நடைபெறும் பராமரிப்பு வேலைகளை சசிகலா விசிட்டுக்கு முன்பாக செய்து முடிக்க உத்தரவு போயிருக்கிறது.’’

சசிகலா வசமாகுமா எம்.ஜி.ஆர் மந்திரம்?

‘‘வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டனவா?’’

‘‘வர்ணம் பூசும் பணிகள் அதிகாலை வரை நடந்தன. தோட்டத்தில் மூன்று பக்கங்களுக்கு மட்டும் சுவர் எழுப்பட்டுள்ளது. ஆனால், பின்பக்க சுவர்தான் மிக அவசியத் தேவையாக உள்ளது. அதை விட்டுவிட்டார்கள். பின்புறம்தான் கழிவு நீர் செல்லும் ஓடை உள்ளது. எங்கும் புதர் மண்டிக்கிடக்கிறது. அங்கு பன்றிகள் மேய்கின்றன. கிட்டத்தட்ட 100 மாற்றுத்திறனாளி பிள்ளைகள் இங்கிருக்கும் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கு இங்கு சுற்றுச்சுவர் அவசியம். ஆனால், அதைச் செய்யவில்லை. சசிகலாவை வரவேற்று மட்டும் வழிநெடுகிலும் பேனர்கள் வைத்தார்கள்.’’ 

‘‘திவாகரன், நடராசன் மீது முனுசாமி சீறியிருக்கிறாரே?’’

‘‘சசிகலாவை ஜெயலலிதா நீக்கிய போது, ‘அம்மா பிடித்து வைத்தால் அது பிள்ளையார், இல்லையென்றால் அது வெறும் சாணிதான்’ என்று 2011-ம் ஆண்டு பொதுக் குழுவில் பொங்கியவர் இந்த முனுசாமி. ஜெயலலிதா இறந்த அன்று அப்போலோவுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்று அங்கேயும் சீறினார். இடையில் போயஸ் கார்டன் அழைத்து வந்து அவரை சரிக்கட்டிவிட்டதாக சசிகலா தரப்பிலிருந்து செய்திகள் கசியவிட்ட நிலையில்தான் இப்போது இப்படிப் பேசியுள்ளார். அதை உமது நிருபர்கள் அப்போதே எழுதி இருந்தார்களே!’’

‘‘ஆமாம். இப்போது திவாகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் களம் இறங்கியிருக்கிறார்களே?”

‘‘அதிலும் ஒரு காமெடி நடந்தது. திவாகரனுக்காக ஊர்ப் பாசத்தோடு ஓ.எஸ்.மணியனும் காமராஜும் பேசினார்கள். கே.பி.முனுசாமி வன்னியர் என்பதால் அதே இனத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகமும் முனுசாமிக்கு எதிராக பேட்டி கொடுத்தார். ஓ.எஸ்.மணியனும் காமராஜும் பேசப் போகிறார்கள் என்பதும், என்ன பேசப் போகிறார்கள் என்பதும் கார்டனுக்குத் தெரியும். திடீரென ‘சி.வி.சண்முகம் பேட்டி தருகிறார்’ என்று தகவல் வெளியானதும், ‘இன்னொரு எதிர்ப்புக்குரலா?’ என கலங்கி விட்டார்கள் கார்டனில். அவசரமாக சில நிருபர்களைத் தொடர்புகொண்டு, ‘சண்முகம், சசிகலாவை ஆதரித்து பேட்டி தரப் போகிறாரா? எதிர்த்துப் பேசப் போகிறாரா?’ என விசாரித்தார்கள். ‘முனுசாமியைத் திட்டப் போகிறார்’ என தெரிந்தபிறகே நிம்மதியானார்கள். கார்டன் உத்தரவு வராமலே சண்முகம் ஏன் பேசினார் என்பது பலருக்குப் புரியவில்லை!’’

சசிகலா வசமாகுமா எம்.ஜி.ஆர் மந்திரம்?

‘‘ம்!’’

‘‘கே.பி.முனுசாமி குரல் போல இன்னும் பல குரல்கள் ஒலிக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே பி.ஹெச்.பாண்டியன், தீபாவுக்கு ஆதரவாக இருந்து வருவதாகப் பேச்சு எழுந்துள்ள நிலையில், தீபா தரப்பில் இருந்து இப்போது முனுசாமியை வளைக்க முயற்சி நடக்கிறது.’’

‘‘இதை ஓ.பி.எஸ் எப்படிப் பார்க்கிறார்?”

‘‘அவர் முகத்தை வைத்து அவரின் மனதைக் கணிப்பது சாதாரண விஷயமா என்ன? ஆனால் ஒன்று... முன்பு அடிக்கடி போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் சசிகலாவைச் சந்தித்துவந்த பன்னீர்செல்வம், தற்போது அதைக் குறைத்துக்கொண்டார். தை முதல் நாளன்று (ஜனவரி 14) ஓ.பி.எஸ்-ஸுக்கு பிறந்தநாள். கடந்த சில ஆண்டுகளாக ஓ.பி.எஸ் அந்த தினத்தில் சபரிமலை யாத்திரை சென்றுவிடுவார். ஜெயலலிதா மறைந்ததால் இந்த ஆண்டு அவர் சபரிமலை போகவில்லை. அதற்காக அவர் சென்னையிலும் இல்லை. சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடப் போவதாகக் காரணம் சொல்லி, பெரியகுளம் சென்றுவிட்டார். ஒருவேளை சென்னையில் இருந்தால், மரியாதை நிமித்தமாக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க வேண்டியிருக்கும் என நினைத்தாரோ, என்னவோ! ஓ.பி.எஸ்-ஸுக்கு பிரதமர் மோடி, கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்த செய்தி, வேகமாகக் கசியவிடப்பட்டது. அதன்பிறகு, வேறு வழியில்லாமல் சசிகலாவும் பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் எழுதியதாகத் தகவல் வெளியானது. அதற்கு மறுநாள்தான், சென்னையில் அரசு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பன்னீர்செல்வம் படு உற்சாகமாக இருந்தார். அவரை பண்ருட்டியார் வாழ்த்திப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.’’

‘‘ஏன்?’’

‘‘சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லையோ என்ற சந்தேகப் பட்டியலில் இருக்கும் சீனியர் தலைவர்களில் பண்ருட்டியாரும் ஒருவர். அவருக்கு இந்த ஆண்டு பெரியார் விருது கொடுத்திருக்கிறார்கள். விருது வாங்கிய எல்லா அறிஞர்கள் சார்பாகவும் ஏற்புரை நிகழ்த்தியவர் அவர்தான். ‘முதல்வர் பன்னீர்செல்வம், தன் பிறந்தநாளை பொங்கல் தினத்தில் கொண்டாடியுள்ளார். பொங்கல் தினத்தில் பிறக்கும் பெருமை, எல்லாருக்கும் கிடைப்பதில்லை; அதிலும், பொங்கல் நாளில் பிறந்து, முதல்வராகும் பெருமை யாருக்காவது கிடைக்குமா? அது இவருக்குக் கிடைத்துள்ளது. நம் பிறந்த நாளை, நாம்தான் கொண்டாடுவோம். ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் பிறந்த நாளை, உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், பொங்கல் விழாவோடு சேர்த்துக் கொண்டாடி உள்ளனர். ஜெயலலிதா காட்டிய வழியில், பன்னீர்செல்வத்தின் தலைமையில், தமிழகம் சென்று கொண்டிருக்கிறது’ என்ற பண்ருட்டியார், முதல்வராக யார் இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொல்லிவிட்டார். பண்ருட்டியார் பேசியபோது, தன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிவிடாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் ஓ.பி.எஸ். மிகச்சுருக்கமாகப் பேசிய பண்ருட்டியாரின் அத்தனை புகழுரைகளுக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது கவனிக்க வேண்டிய விஷயம்!’’

‘‘ம்ம்ம்... ஓ.பி.எஸ்-ஸுக்கு அவ்வளவு தைரியம் அளிப்பது யார்?’’ 

‘‘இதற்கு, சசிகலாவின் தம்பி திவாகரன் பேச்சில் பதில் உள்ளது. தஞ்சாவூரில் நடராசன் நடத்திய பொங்கல் விழாவில் பேசிய திவாகரன், ‘அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு தஞ்சை மாவட்டம்தான் பெரும்பங்கு வகித்தது. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கை, அரசியல்மயப்படுத்தியவர் எஸ்.டி.எஸ். அவர் பின்னால் நாங்கள் இருந்தோம். சிலர் நினைப்பதுபோல், அ.தி.மு.க பெரியவா கட்சி கிடையாது. இது திராவிடர்களின் கட்சி. அதனால், இந்தக் கட்சியை உடைக்க பல சதிகள் இப்போது நடக்கின்றன. வட இந்தியாவில் இருந்து நடக்கும் அந்தச் சதிகள் எடுபடாது. அப்படி அ.தி.மு.க-வை உடைக்க வேண்டுமானால், அது எங்களின் பிணத்தின் மீதுதான் நடக்கும்’ என்றார். இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம், ஓ.பி.எஸ்-க்கு பின்னால் இருப்பது, பாரதிய ஜனதாவும் மோடியும் என்று. இதில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதை, சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியாகப்போகும் தீர்ப்புக்குப் பிறகுதான் உணர முடியும்.’’

‘‘அ.தி.மு.க மோதல்களுக்கு மத்தியில் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் சரத்குமாரின் உருவ பொம்மையை எரிக்கிறார்களே?’’

சசிகலா வசமாகுமா எம்.ஜி.ஆர் மந்திரம்?

‘‘துக்ளக் விழாவில் எந்த உள்ளர்த்தமும் இல்லாமல் சாதாரணமாகத்தான் ரஜினி பேசினார். ‘நாட்டில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழலில் சோ இல்லாததை நினைத்து மனம் கஷ்டப்படுகிறது’ என்றார் ரஜினி. அவர் தமிழ்நாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, தான் அரசியலுக்கு வருவதாகவும் சொல்லவில்லை. ஆனால் ‘ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்’ என சரத்குமார் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களைக் கோபப்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் சரத்குமாரும் ராதிகாவும் தம்பதியாக போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்தார்கள். ‘அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட, ராதிகாவை முன்னிறுத்தி சரத்குமார் ஒரு அணியை உருவாக்குவதாகவும், அதற்காக ஆளும்கட்சியின் உதவியைக் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகும் நிலையில்தான் சரத்குமார் இப்படி ரஜினியை விமர்சித்துப் பேசியிருக்கிறார்’ என அ.தி.மு.க-விலேயே பேச்சு இருக்கிறது’’ என்ற கழுகார், தி.மு.க பக்கம் திரும்பினார்.

‘‘பொங்கல் என்றாலே கருணாநிதி குஷியாகிவி்டுவார். வாழ்த்துச் செய்தி வெளியிடுவது மட்டும் அல்லாமல், தொண்டர்களையும் சந்திப்பார்... குடும்பத்தோடு பொங்கல் விழாவைக் கொண்டாடுவார். ஆனால், அவர் தி.மு.க தலைவராகி இந்த 49 ஆண்டுகளில் அவர் பொங்கல் வாழ்த்து சொல்லாத ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துவிட்டது. பொங்கல் அன்று காலையில் அம்மா, அப்பா படங்களை வணங்கிவிட்டு, புதிய வேட்டி, சட்டை அணிந்து கட்சியினரை சந்திப்பார். சில ஆண்டுகளில் பட்டுவேட்டியும் அணிந்துள்ளார். அன்று ஒரு நாள் மட்டும்தான் தி.மு.க கரைவேட்டிக்கு ஓய்வு கொடுப்பார்.’’

‘‘ம்!’’

‘‘அன்று தன்னைச் சந்திக்க வரும் கட்சியினருக்கு பத்து ரூபாய் நோட்டைக் கொடுப்பார் அவர். இந்த வருடமும், அவரைப் பார்க்கும் ஆவலில் தொண்டர்கள் பலர் கோபாலபுரத்துக்கு வந்தார்கள். உடல்நிலை காரணமாக யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை வீட்டில். ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாநிதி மாறன் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் மட்டும் அவரைச் சந்தித்துள்ளார்கள். செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அப்பாவின் பணிகளைச் செய்துகொண்டிருக்கும் ஸ்டாலின் வீட்டில், பொங்கல் அன்றும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அப்பாவைப் போலவே அவர் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து அசத்தினார்’’ 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.