News
Loading...

இந்திய நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளுக்கான தடை உத்தரவு கிடைக்க பாடுபட்ட உன்னத மனிதரை தெரிந்து கொள்ளுங்கள்!

இந்திய நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளுக்கான தடை உத்தரவு கிடைக்க பாடுபட்ட உன்னத மனிதரை தெரிந்து கொள்ளுங்கள்!

ப்போது 1995 ஆம் வருடம் அக்டோபர் மாதம், 26 வயது ஹர்மன் சிங் சித்து மற்றும் அவரது நண்பர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஏரியை சுற்றிப்பார்த்து விட்டு சண்டிகர் திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு சிறுத்தையின் குட்டியை கண்ட அவர்கள், சாலை வழியே பயணிக்காமல் காட்டு வழியே சென்றால் பல வனவிலங்குகளை காணமுடியும் என்று முடிவெடுத்தனர். காட்டு வழியே சென்ற அவர்களது வாகனம் நிலை தடுமாறி மலைப்பாதையை அடைந்து கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கி சரிந்தது. ஹர்மனின் நண்பர்கள் காரில் இருந்து குதித்து தப்பிக்க அவரால் மட்டும் அசைய முடியவில்லை. முதுகெலும்பில் ஏற்பட்ட ஒரு அடியால் அவரின் உடல் முடங்கி போய் விட்டது. 

அச்சி கபரே’விற்கு பேட்டி அளித்த ஹர்மன்,

“நாங்கள் நிதானமாக இருந்தோம். நான் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தேன். பலமுறை பல்டி அடித்து கார் 60-70 அடி ஆழத்தில் விழுந்து நின்றது. நான் காருடன் சேர்ந்து சுழலும் காட்சி இன்னமும் என் கண் முன் தெரிகிறது. மிகத்தெளிவாக எனக்கு அது நினைவு இருக்கிறது,” என்றார். 

சாவின் விளிம்பு வரை  சென்று திரும்பிய ஹர்மன், தன் இரு கால்களின் செயல்பாடுகளையும் இழந்தார். நிரந்தரமாக வீல் சேரில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நாட்களை கழித்த ஹர்மன், பலரும் தன்னை போல சாலை விபத்துகளால் இது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை ஆய்வுகள் மூலம் அறிந்தார். சாலை பாதுகாப்பை உணர்த்தும் வகையில் பணிகள் செய்ய முடிவெடுத்த அவர், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கினார். தன் பகுதி மக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தார். போக்குவரத்து துறை எஸ்பி அமிதாப் சிங் தில்லனை சந்தித்த ஹர்மன் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். 

பெட்டர் இந்தியாவிற்கு பேட்டி அளித்த ஹர்மன்,

“சாலை பாதுகாப்பு பற்றி பலரை சென்றடைய, சரியான தகவலை தந்து பாதுகாப்பாக பயணிக்க வலியுறுத்தி, ஒரு இணையதளத்தை தொடங்குவோம் என தில்லன் கூறினார். அதனால் சண்டிகர் போக்குவரத்து துறையின் தளம் ஒன்றை உருவாக்கினேன். அதற்கு கிடைத்த வரவேற்பு நான் நினைத்துக் கூட பார்க்காத ஒன்று. 3 மாதங்களில் பலரிடம் இருந்து எனக்கு வாழ்த்து வந்தது, சுமார் 1 லட்சம் பேர் அந்த தளத்தை பயன்படுத்தி பயனடைந்தனர்.” 

சில மாதங்களில், ஹர்மன் ArriveSAFE என்ற தன் சொந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் அதிகமானோர்க்கு சாலை பாதுகாப்பு, பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த செயல்பட்டார். WHO மற்றும் UN உடன் இணைந்து சில திட்டங்களையும் வகுத்தார் ஹர்மன். இதற்காக அவர் போக்குவரத்து காவலர்களுக்கு துணையாக பல மணி நேரத்தை சாலைகளில் கழித்தார். இறுதியாக, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதே பல விபத்துகளுக்கு காரணம் என்றும் உணர்ந்தார். 

”சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, கவலை அளிப்பதாகவும் உள்ளது. ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கு ஒருவர் சாலை விபத்தால் இந்தியாவில் உயிரிழக்கிறார். இது உலகிலேயே மிக அதிகம். கடந்த ஆண்டும் மட்டும் 1,46,133 பேர் சாலை விபத்தில் குறிப்பாக குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் இறந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் பற்றிய சர்வே ஒன்றை நடத்தினேன். அதைத்தவிர ஆர்டிஐ ஒன்றையும் போட்டு கலால் துறையிடம் இருந்து தகவல் பெற்றேன். அதில், பானிபட்-ஜலந்தர் இடையே உள்ள 291 கிமி தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் 185 மதுபான கடைகள் இருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு 1.5 கிமி தூரத்துக்கு ஒரு மதுபான கடை இருப்பது அதிர்ச்சிக்குரியது!”

ஹர்மன் உடனே பொது நல வழக்கு ஒன்றை ஹரியான உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என்றும் இருப்பவற்றை உடனடியாக மூடவேண்டும் என்றும் கோரி இருந்தார். மார்ச் 2014 இல் வழக்கின் முடிவில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 1000 மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இதைத்தொடர்ந்து ஹர்மன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இரு மாநில அரசுகளும் வருமானம் பாதிக்கும் என கூறி அந்த முடிவுக்கு தடை விதிக்க கேட்டு முறையிட்டனர். இந்த வழக்கை தீர விசாரித்த உச்ச நீதிமன்றம்,

“மனித உயிர்கள் விலைமதிப்பற்றது. இந்தியாவில் சாலை தொடர்பு விரிவடைந்து வரும் நிலையில், சாலை கட்டுமான வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பதோடு, இது போன்ற சாலை விபத்துகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடுகிறது. ஆனால் இதை தடுப்பதும் ஒரு நாட்டின் கடமையாகும். நெடுஞ்சாலைகளில் எளிதாக மதுபானம் கிடைப்பதால், வாகன ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வண்டிகளை ஓட்டி தங்களின் உயிருக்கு ஆபத்தை தேடிக்கொள்கின்றனர். பிறரின் பாதுகாப்பும் இதனால் பாதிப்படைகின்றது.”

பல நாட்கள் காத்திருப்புக்கு பின், கடந்த மாதம் டிசம்பரில் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எல்லா மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் இரண்டுக்கும் இது பொருந்தும் என்று கூறியது. தற்போது இயங்கிவரும் மதுபான கடைகளின் லைசென்ஸ் இந்த ஆண்டு 31 மார்ச் மாதத்திற்கு பிறகு புதுபிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த தீர்ப்பால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த ஹர்மன், தன்னால் பல உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளதை நினைத்து மனநிறைவு அடைந்துள்ளார். நான்கு ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் கிடைத்துள்ள இந்த வெற்றி, முற்றிலும் ஹர்மன் சிங்கை சாறும். நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினாலும், தானே தன் குழுவுடன் நெடுஞ்சாலைகளுக்கு சென்று அங்குள்ள மதுபான கடைகள் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் திட்டமிட்டுள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.