News
Loading...

மயில் ஒன்று வான்கோழி ஆன கதை!

மயில் ஒன்று வான்கோழி ஆன கதை!

‘‘ஒண்ணுக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள கட்சி மாறிடறாங்க சார்’’ என சுஜாதாவின் நாவல் ஒன்றில் கணேஷிடம் வஸந்த் குறைபடுவார். நாஞ்சில் சம்பத்தின் அந்தர் பல்டிகள் அதைத்தான் நினைவுபடுத்துகின்றன.

அதில், வார்த்தை ஜாலங்களால் வாழ்க்கை நடத்தும் நாக்கு அரசியல்வாதிகளில் நாஞ்சில்சம்பத்துக்கு முதலிடம் உண்டு.

‘‘அம்மாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என 28.12.2016 தேதியிட்ட ஜூ.வி பேட்டியில் சொல்லியிருந்தார். ‘‘ஜெயலலிதா மரணத்தில் அவிழ்க்க முடியாத மர்மங்கள் இருக்கின்றன. இது சம்பந்தமான சசிகலா புஷ்பாவின் வழக்கால் உண்மை வெளிவர வேண்டும்’’ என்றெல்லாம் அதில் சொன்னார். இவை அனைத்துமே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடுகள். 

சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாஞ்சில் சம்பத்தைத் தொடர்புகொண்டபோது ரத்த நாளம் புடைக்க அடுத்த அரைமணி நேரத்தில் அவர் எழுதி அனுப்பியிருந்த கடிதம், அ.தி.மு.க தொண்டர்களுடைய அடிமனத்தின் குரலாகவே இருந்தது. அந்த கடிதத்தின் ஒரு பகுதி இது.

‘‘ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், மேயர்கள் என அதிகாரத்தின் உச்சம் தொட்ட அனுபவசாலிகளைக்கொண்ட ஒரு பெரிய அமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து இருப்பது 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகம். எம்.ஜி.ஆர் ரசிகர்களின் கொள்ளிடமாக இருக்கின்ற ஓர் அமைப்புக்குத் தலைமை தாங்கும் தகுதி சசிகலாவுக்குப் பத்து சதவிகிதம் அல்ல, ஒரு சதவிகிதமாவது இருந்திருக்க வேண்டாமா? வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் நாட்டை ஆளலாம் என்று எந்த நாடாளுமன்றம் தீர்மானம் போட்டுள்ளது?

சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உண்டென்று முடிவெடுத்துவிட்டார்கள். நிழல் நிஜமாகிவிட்டது. தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரேநாளில் தோகை மயிலாகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் இப்படி நடக்கும். அதுவும் அ.தி.மு.க-வில்தான் இப்படியெல்லாம் நடக்க முடியும்.

யார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்காருவது என்பதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை. திரெளபதியைச் சூதாட்டத்துக்குப் பாண்டவர்கள் பணயமாக வைத்ததைப் பாடிய பாரதி எழுதியைத்தான் தமிழக மக்களுக்கு நினைவூட்டத் தோன்றுகிறது.

‘செருப்புக்குத் தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை’ என்றும் கொந்தளித்தான் பாரதி. இந்தக் கொந்தளிப்பும் குமுறலும் எதையும் அனுபவித்து அறியாத அப்பாவித் தொண்டனிடம் இருப்பதை அடியேன் அறிவேன். நெஞ்சில் குடிகொண்டிருப்பதை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்டேன்.

தரைதட்டி நிற்கிறது அ.தி.மு.க-வும், தமிழக ஆட்சி நிர்வாகமும். அதைப்பற்றிய எந்தக் கவலையும் யாருக்கும் இல்லை. அரசு நிர்வாகம் ஓர் அனாதைக் குழந்தையைப் போல பரிதவித்து நிற்கிறது. பேரறிஞர் அண்ணா ஏற்றிவைத்த மாநில சுயாட்சித் தீபம் அணைந்தேவிட்டது.

சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. எனவே, அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து விடைபெறுகிறேன். விடைபெறுவதன் மூலமாக மனநிம்மதி அடைகிறேன்” என்று நாஞ்சில் சம்பத் நமக்கு எழுதி அனுப்பி இருந்தார்.

மயில் ஒன்று வான்கோழி ஆன கதை!

ஜூ.வி வெளியான ஜனவரி 2-ம் தேதி ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரையும் இன்முகத்தோடு திருப்பிக்கொடுத்தார்.

நான்கு நாட்களுக்குள் அவரின் அவதாரம் மாறியது. 6-ம் தேதி சசிகலாவைச் சந்திக்கிறார். அவருடைய நான்கு நாட்களுக்கு முந்தைய நாக்கு இப்போது அப்படியே மாற்றிப் புரள்கிறது.

‘‘சசிகலாவுக்கு அனைத்துத் தகுதியும் இருக்கிறது. 33 ஆண்டுகள் அம்மாவின் உடன் இருந்தவர் சசிகலா. முதல்வர் ஓ.பி.எஸ் சிறப்பாகச் செயல்படுகிறார். வர்தா புயலின்போது ஓ.பி.எஸ் சிறப்பாகச் செயல்பட்டார் என நாடே சொல்கிறது. அம்மா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் தொடர்ச்சியாகப் பல பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கு அம்மா ஒத்துழைப்பு கொடுத்திருக்க மாட்டார். நான் அ.தி.மு.க-வில் இருந்து விலகவில்லை’’ என்றெல்லாம் அந்தர் பல்டி அடித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

யாரை உசுப்பிவிட ஊடக வாயிலாக அப்படி ஓர் அறிக்கை வெளியிட்டார்? எதற்காக அடுத்த சில நாட்களிலேயே பணிந்தார்?

கேட்டால், ‘‘பட் அந்த டீலிங் பிடிச்சுருந்தது’’ என அவர் சொல்லக்கூடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.