News
Loading...

சசி மொத்தமும் பறிபோய்விடும்..! எச்சரித்தார் பன்னீா் செல்வம்..!

சசி மொத்தமும் பறிபோய்விடும்..! எச்சரித்தார் பன்னீா் செல்வம்..!

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக தொடர் கடிதங்களை எழுதி வந்த சசிகலா,

தற்போது நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். ‘கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நூறு சதவீத அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலையில் நீங்கள் இறங்கினால்,

இருக்கும் அதிகாரங்களும் பறிபோய்விடும்’ என சசிகலா தூதுவரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, கோட்டையை நோக்கிப் பார்வையை திருப்பினார் சசிகலா. அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார்,

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில், ‘முதல்வர் பதவியில் சசிகலா அமர வேண்டும்.

பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்’ எனப் பேசி வந்தனர். இதற்கு பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. ‘தங்களிடம் அடங்கி இருந்தவர்,

எஜமானன் போல் செயல்படுவதா?’ எனக் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தார் சசிகலா.

மீனவர் பிரச்னை உள்பட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்செல்வம்.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுதினார். ஆட்சியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ஒரே கோரிக்கைக்காக இரண்டு பேர் கடிதம் எழுதியதை ஆச்சரியத்தோடு கவனித்தனர் அரசியல் விமர்சகர்கள்.

“அதிகாரத்தில் இருந்து விலகும் முடிவில் பன்னீர்செல்வம் இல்லை என்பதை அறிந்தபிறகுதான்,

நேரடியாகவே எதிர்ப்பை வெளிக்காட்டினார் சசிகலா. இந்தியா டுடே மாநாட்டில் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போதே மேடையில் இருந்து வெளியேறினார்.

‘பொங்கலுக்குள் முதல்வர் ஆகிவிட வேண்டும்’ என்ற அவருடைய திட்டமும் கை நழுவிவிட்டது. ‘

அவர் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்?’ என உளவுத்துறையின் உயர் அதிகாரி மூலம் தூது அனுப்பினார் சசிகலா.

நேற்று அந்த அதிகாரியிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்”

“ஆட்சி அதிகாரத்துக்குள் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து அதிகாரியிடம் விளக்கினார் பன்னீர்செல்வம்.

நீண்ட நேரம் நடந்த விவாதத்தில், தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலங்கிய கண்களோடு விவரித்தார்.

‘கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அரசின் கொள்கை முடிவுகளை கார்டன் ஆலோசனையின்படியே எடுத்து வருகிறோம்.

பாடநூல் கழகத் தலைவர் பதவிக்கு வளர்மதி பெயரை சின்னம்மா முன்மொழிந்தார். உடனே பதவியை வழங்கினோம்.

‘முதல்வர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்துகின்றனர்.

இந்தப் பதவியில் நான் இருப்பதால்தான், அதிகாரம் சீராகச் சென்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசுக்கு இணக்கமாக நடந்து கொண்டு பல திட்டங்களைக் கொண்டு வர முடிகிறது.

முதலமைச்சராக சின்னம்மா வந்துவிட்டால், இருக்கும் மொத்த அதிகாரத்தையும் பறித்துவிடுவார்கள்.

கோட்டையில் நடக்கும் விவகாரங்களை ஆளுநர் கவனித்துக் கொண்டு வருகிறார். அதிகாரத்துக்குள் குழப்பம் வந்துவிட்டால், ஆட்சி கைவிட்டுப் போய்விடும். நமக்கு அடுத்தபடியாக இருக்கும் தி.மு.கவுக்குத்தான் வாய்ப்பு போகும்.

தி.மு.க தலைவருக்கும் ஸ்டாலினுக்கும் ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததையும் கவனியுங்கள்.

அதற்குள் நீங்கள், ‘முதல்வர் பதவி; மந்திரி சபை பட்டியல்’ என ஆளுநரிடம் போய் நின்றால், விளைவுகள் வேறு மாதிரி ஆகிவிடும்.

அனைவரையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சியை செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

எதார்த்த நிலைகளை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். இதையும் தாண்டி நீங்கள் வருவதாக இருந்தால், அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்.

எந்த மாதிரியான சூழலில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை நேரில் அமர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னுடைய சொந்த மாவட்டத்திலேயே எனக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதிகாரத்தில் இருந்து நான் விலகிவிட்டால்,

அங்கு தலைகாட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும்’ என சசிகலாவிடம் தெரிவிக்க வேண்டிய தகவல்களைக் கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ். இந்தத் தகவல்களை கார்டன் வட்டாரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த அதிகாரி. கார்டன் தரப்பில் இருந்து எந்த வார்த்தைகளும் வெளிப்படவில்லை”

“பன்னீர்செல்வத்தை வழிக்குக் கொண்டு வருவது குறித்து மன்னார்குடி உறவுகள் தீவிரமாக விவாதித்து வருகின்றன.

‘லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்’ நடராசன் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த வழக்கை தீவிரமாகக் கையாண்டு வருகிறது அமலாக்கத்துறை. டி.டி.வி.தினகரன் மீதான பணப் பரிவர்த்தனை வழக்கும் சிக்கலை அதிகப்படுத்தியிருக்கிறது.

சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களில் தமிழக அமைச்சர்களும் கார்டன் புள்ளிகளும் வகையாகச் சிக்கியுள்ளனர்.

மத்திய நிதித்துறையில் இருந்து உத்தரவு வந்தால், மீண்டும் ரெய்டு நடவடிக்கைகள் தொடங்கும். முதலமைச்சர் நாற்காலியை நோக்கி சசிகலா சென்றால்,

சேகர் ரெட்டியின் வாக்குமூல அடிப்படையில் பல புள்ளிகள் சிக்குவார்கள். இதையெல்லாம் உணர்ந்துதான்,

முதல்வர் முழக்கத்துக்கு தற்காலிக தடை போட்டிருக்கிறார் சசிகலா” என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.