News
Loading...

பாய்சன்... பாயசம்... பன்னீர்!

பாய்சன்... பாயசம்... பன்னீர்!

மிழகத்தின் ‘கூஜா’ முதல்வர் என்று இதுநாள்வரை விமர்சிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசின் ராஜாவாக முடிசூட்டிக்கொள்ளத் துணிந்துவிட்டார். 

சந்தர்ப்ப சூழ்நிலைகள், மூன்று முறை முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை முதல்வர் நாற்காலி கிடைத்தது. அப்போது, தன்னை முதல்வராக நினைத்து அந்த நாற்காலியில் அவர் அமரவில்லை. ‘தான் எதற்காக அமர்த்தப்பட்டு இருக்கிறோம், யாரால் அமர்த்தப்பட்டு இருக்கிறோம்’ என்பதை உணர்ந்து, அஞ்சி அஞ்சி அதில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தன்னை ‘முதல்வர் பன்னீர்செல்வம்’ என்று அழைப்பதைக்கூட அவர் விரும்பவில்லை. அப்போது பன்னீர்செல்வத்திடம் இருந்த அச்சம், அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது. 

 ஜெயலலிதா இறந்தபிறகு, மூன்றாவது முறையாக பன்னீர்செல்வத்தைத் தேடி வந்தது முதல்வர் நாற்காலி. இப்போது அதில் அமர்ந்துள்ள பன்னீர்செல்வத்திடம் ஏகப்பட்ட மாற்றங்கள். முதல்முறையாக அவர் தன்னை முதலமைச்சராக உணரத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வத்தின் இந்தப் புதிய சுதந்திர உணர்வு, அவருடைய பேச்சு, நடவடிக்கைகளில் மெல்லத் துளிர்விடத் தொடங்கி உள்ளது. கொஞ்சம் துணிவையும் அவருக்குக் கொண்டுவந்துள்ளது. அதன் தயவில், சசிகலாவைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார் பன்னீர்செல்வம். அவரின் கணக்கு சரியாக இருந்தால்... பன்னீருக்குப் பின்னால் உள்ளவர்கள் தொடர்ந்து அவருக்குப் பலமாக இருந்தால்... சசிகலா மற்றும் அவரின் மன்னார்குடி சொந்தங்களுடன் நேரடியாக பன்னீர்செல்வம் மோதப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல்வர் பன்னீர்செல்வம், தனது அரசியல் யுத்த ஆயத்தங்களை லேசாக, ஆனால், கவனமாக வெளிப்படுத்தினார். அவர் ஆற்றிய உரை, நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ள வகையில் கவனமாகத் தயாரிக்கப்பட்டது. அதை நிதானமாகவும், ரசித்தும் படித்தார், பன்னீர்செல்வம். அதன் மூலம் தன் உள்கட்சி எதிரிகளுக்கான எச்சரிக்கை மணியை அடிக்கத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வம் பேச்சின் சாரம்... 

அம்மா வழியில் ஆட்சி தொடரும்!

“தமிழ் மொழியில் உள்ள அறநூல்கள் யாவற்றிலும் மிகச் சிறந்த நூல் திருக்குறள். இதனால்தான், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார். ‘தெள்ளு தமிழ்நடை, சின்னஞ்சிறிய இரண்டு அடிகள், அள்ளுதொறுஞ் சுவை உள்ளு தொறு உணர்வாகும் வண்ணம், கொள்ளும் அறம், பொருள், இன்பம் அனைத்தும் கொடுத்த திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ‘தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கை நெறியை திருவள்ளுவர் தந்திருக்கிறார்’ என்று பேரறிஞர் அண்ணா கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் போற்றப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்குறளை, நமக்குத் தந்த திருவள்ளுவரின் தினத்தில், தமிழ் அறிஞர்கள் மற்றும் பெரியோர்கள் பெயர்களினால் விருதுகள் வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். ‘அரசியல் நெறி தவறாமல், குற்றமேதும் இழைக்காமல், வீரத்திலும் மானத்திலும் குறைவில்லாது ஆட்சி நடத்துபவரே சிறந்த ஆட்சியாளர்’ என்கிறார் திருவள்ளுவர். இதன்படி ஆட்சி நடத்திய பெருமை, அம்மா அவர்களேயே சாரும். அவர் காட்டிய வழியில், தமிழக அரசு தொடர்ந்து பயணிக்கும். 

ஆயிரத்தில் ஒருவன்!

 இந்த இனிய விழாவிலே, தமிழ் அறிஞர்களிடம் இருந்த நயம், சுவை, நகைச்சுவை, சொல்லாற்றல் ஆகியவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து நூறு பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் எழுத, மற்ற புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாடல் எழுதி சடையப்ப வள்ளலை புகழ்ந்தால் போதும் எனக் கூறப்பட்டது. இதைக் கம்பர் மறுக்கவில்லை. மாறாக, “சடையப்ப வள்ளல் 100-ல் ஒருவர்தான் என்று நினைத்தேன். ஆனால், நீங்களோ 1000-த்தில் ஒருவர் என்கிறீர்கள். அப்படியே செய்கிறேன்” என்று கூறி ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம், சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடினாராம் கம்பர். ஆக, வள்ளல் என்றாலே, ‘ஆயிரத்தில் ஒருவன்’தான் என்று இன்னும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பாய்சன்... பாயசம்... பன்னீர்!

பாய்சன்... பாயசம்...

 தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவானான கி.வா.ஜ அவர்கள், ஒருமுறை தன் நண்பர் ஒருவருடன் விருந்து ஒன்றுக்குச் சென்றிருந்தார். விருந்து அளித்தவர், கி.வா.ஜ-வை அதிகமாக உபசாரம் செய்வதாக நினைத்து, பாயசத்தை மாற்றி மாற்றி ஊற்றிக்கொண்டே இருந்தார். அசந்துபோன கி.வா.ஜ அவர்கள், “ஒருவரைக் கொல்ல பாய்சன்தான் தேவை என நினைத்தேன். ஆனால், பாயசத்திலும் கொல்ல முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்” என்று நயம்படக் கூறினாராம். அதுபோல, கண்ணதாசன் ஒருமுறை காங்கிரஸில் சேர நினைக்கிறார். காமராஜரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார். அதை ஒரு சினிமா பாடலில், ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி... வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ (ஓ.பி.எஸ் இந்தப் பாடலை ராகத்துடன் பாடினார்) என்று பல்லவியாக்கி பாடல் எழுதினார். அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, ‘நலம்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல்நலத்தை விசாரித்தார் கண்ணதாசன். 

 இப்படி எந்தக் காலத்திலும், எந்தச் சொல்லை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்ட தமிழ் அறிஞர்கள் உணர்ச்சிபூர்வமாக, அறிவுபூர்வமாக, நகைச்சுவையுடன் நல்ல பல கருத்துகளை நயம்படத் தமிழ் மொழி மூலம் பரப்பி வந்தனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களின் பெயர்களில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன” என்றார் பன்னீர்செல்வம். 

கதைக்குப் பின்னால் உள்ள கதை!

 அரசு விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் சொன்ன, ‘பாய்சன்... பாயசம்...’ கதைக்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா - தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் கதைகள்தான். 

 ஜெயலலிதா இறந்ததும், பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால், அப்போதே சசிகலாவின் தேர்வு எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிதான் பன்னீர்செல்வம் பெயரைக் கட்டாயமாகப் பரிந்துரைத்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, பன்னீர்செல்வம்தான் முதல் ஆளாக அமைச்சர்களோடு வந்து சசிகலாவிடம் கொடுத்தார். இதையடுத்து, சசிகலா - பன்னீர்செல்வத்துக்கு இடையே மோதல் என்ற கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

அதன்பிறகு ‘விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பார்’ என்று செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகின. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் வேகம் பிடிக்கவில்லை. இந்த நேரத்தில், ‘பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் இருந்து விலக மறுக்கிறார்’ என்று சொல்லப்பட்டது. அப்படிச் சொல்லப்பட்டதை சசிகலா தரப்பு மறுக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா ஆதரவு அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ‘சசிகலாதான் முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்று ஆளுக்கொரு அறிக்கை கொடுத்தனர். உச்சகட்டமாக தம்பிதுரை, தன்னுடைய மக்களவைத் துணை சபாநாயகர் லெட்டர்பேடிலேயே அப்படி ஒரு கோரிக்கையை எழுதி அனுப்பினார். தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும், தன் கட்சிக்குள் இருக்கும் சீனியர்களும், தனக்கு எதிராக இப்படித் தொடர்ந்து அறிக்கை விட்டதை பன்னீர்செல்வம் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அவற்றை எதிர்க்கவும் இல்லை. ‘ஆமாம்’ என்று தலையசைக்கவும் இல்லை. இது ‘சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் உண்மையிலேயே மோதல் இருக்குமோ’ என்ற எண்ணத்தை வலுவாகக் கிளப்பியது. 

 சசிகலா முதல்வர் ஆவதில் ஏற்படும் இழுபறி... பன்னீர்செல்வத்தின் புதிய உற்சாகம்... எல்லாம் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் பனிப்போரை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அ.தி.மு.க என்ற கட்சி சசிகலாவின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. அ.தி.மு.க-வின் தலைமையில் அமைந்த அரசாங்கத்தின் லகான், பன்னீர்செல்வம் கையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அது சசிகலாவிடம் கைமாறிவிடாமல், இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்து உள்ளார் பன்னீர்செல்வம். அவருடைய அந்த விருப்பம்தான், அவர் சொன்ன பாய்சன், பாயசம் கதையில் ஒளிந்திருந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.