News
Loading...

கடல் புரட்சி... அராஜக காக்கி! - சென்னையில் நடந்தது என்ன?

கடல் புரட்சி... ‘அராஜக’ காக்கி! - சென்னையில் நடந்தது என்ன?

மெரினா போராட்டக் களத்தை உலக வரலாற்றில் முதல் முறையாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வந்து செல்லும் திருவிழா கொண்டாட்டமாக மாற்றிய பெருமை தமிழர் களுக்கே சொந்தம். சில நிமிடங்களில் அதைப் போர்க்களமாக மாற்றிய சாதனை தமிழக போலீஸுக்குச் சொந்தம். முந்தின நாள் இரவு வரை தங்களோடு அமர்ந்து சிரித்துப்பேசி உணவைப் பகிர்ந்துகொண்ட காக்கிகளே, விடிந்ததும் லத்திகளோடு வந்து அராஜகம் நிகழ்த்துவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

ஆறு நாட்களாக அமைதியாக இருந்த மெரினா கடற்கரையில் 7-வது நாள் (23-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு டென்ஷன் தொற்றிக் கொண்டது. திடீரென்று போலீஸார் குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரைக்கு வந்து சேரும் அத்தனை சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இவ்வழியாக போராட்டக் களத்துக்கு வந்தோரையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

காலை 5 மணிக்கு விவேகானந்தர் இல்லம் அருகே இருந்த இளைஞர்களைச் சுற்றிவளைத்து போலீஸார் நின்றனர். அவசரச் சட்டம் குறித்த அறிக்கை அங்கிருந்த இளைஞர்களிடம் கொடுக்கப்பட்டது. அதில், அரசு முத்திரையோ, கவர்னர் கையெழுத்தோ இல்லாததால் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியது. அதே நேரத்தில், மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் அங்கிருந்த இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திறந்த வேனில் ஏறி நின்று மைக் பிடித்த அவர், ‘‘ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை நீங்கிவிட்டது. உங்கள் கோரிக்கை நிறைவேறிவிட்டது. இதற்கு மேல் இங்கே அமர உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்களே கலைந்து செல்லலாம். அவசரச் சட்டம் குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னார். அங்கிருந்த இளைஞர்கள், ‘‘எங்கள் வழக்கறிஞர்களுடன் இதுபற்றிப் பேச வேண்டும். மதியம் வரை அவகாசம் வேண்டும்’’ என்றனர். போலீஸ் மறுத்தது. ‘`2 மணி நேரம் அனுமதி கொடுங்கள்’’ என்றனர். ஆனால், போலீஸார், ‘‘அதற்கெல்லாம் அனுமதி இல்லை. உடனே கிளம்புங்கள்’’ என்று எச்சரித்தனர்.

பிறகு கூட்டத்துக்குள் புகுந்த போலீஸார், ஒவ்வொருவரையும் கூட்டத்தைவிட்டு வெளியே இழுத்து அப்புறப்படுத்தினர். முரண்டு பிடித்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர். கர்ப்பிணி பெண் ஒருவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கினர். கீழே விழுந்த அந்தப் பெண்ணின் வயிற்றில் போலீஸார் மிதித்தனர். “வேண்டாம். விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சிய மீடியாவினரைப் பார்த்து, “இங்கிருந்து நீங்கள் ஓடிவிடுங்கள். இல்லையென்றால், உங்களுக்கும் இதே கதிதான்”’ என்று போலீஸார் மிரட்டினர். இளம்பெண்களிடம் போலீஸார் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டனர். பெண்களைப் பிடித்து இழுத்து வெளியேற்றினர். போலீஸாரின் தாக்குதலில், பல இளைஞர்களுக்கு கால் உடைபட்டது.  போராட்டத்தின் மையப் பகுதியாக இருந்த விவேகானந்தர் இல்லம் பகுதி முழுவதும், ஒரு மணி நேரத்துக்குள் தடாலடியாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடல் புரட்சி... ‘அராஜக’ காக்கி! - சென்னையில் நடந்தது என்ன?

போலீஸாரின் அடக்குமுறையைத் தொடர்ந்து, நாலாபுறமும் இளைஞர்கள் சிதறி ஓடினர். அவர்களில் ஒரு பகுதியினர், காலை 7.30 மணி அளவில் கடலுக்குள் இறங்கி மனிதச் சங்கிலி அமைத்து கோஷங்கள் எழுப்பினர். பட்டினப்பாக்கம் கடற்கரை வழியாகவும், அண்ணா சமாதிக்கு பின்புறம் உள்ள வழியாகவும், படகுகள் மூலம் கடல் வழியாகவும் போராட்டக் களத்துக்கு இளைஞர்கள் வந்தனர். அவர்கள், கறுப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருகிலிருந்த மீனவக் குப்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு உதவிக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து மீனவக் குப்பங்களில் பல இடங்களில் போலீஸ் தாக்குதல் நடத்த, இதை எதிர்த்து மீனவர்கள் குரல் கொடுக்க... டென்ஷன் இன்னும் எகிறியது.

இன்னொரு பக்கம் விவேகானந்தர் இல்லம், பெசன்ட் சாலை, அவ்வை சண்முகம் சாலை பகுதிகளில் திரண்டிருந்த இளைஞர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர். அப்போது போலீஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. கல் வீசி ஒருவரை ஒருவர் தாக்கினர். இளைஞர்கள்மீது போலீஸார் 5 முறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

அவ்வை சண்முகம் சாலை, அன்னிபெசன்ட் சாலைப் பகுதிகளில் குவிக்கப்பட்ட போலீஸார் தெருத்தெருவாகப் புகுந்து கறுப்புச் சட்டை, பனியன் அணிந்திருந்த இளைஞர்கள், இளம் பெண்களை விரட்டி விரட்டி அடித்தனர். ஜல்லிக்கட்டு வாசகத்தோடு அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்கள், கார்களை போலீஸார் அடித்து நொறுக்கினர். இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடல் புரட்சி... ‘அராஜக’ காக்கி! - சென்னையில் நடந்தது என்ன?

இதற்கிடையில், 10.30 மணி அளவில் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளுக்கு சிலர் தீ வைத்துக்கொளுத்தினர். ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் பேசியபோது, “அவங்களே கொளுத்திட்டு அதுக்குப் பிறகு, அப்பாவி மக்கள் மீது போலீஸ்காரங்க தடியடி நடத்தினாங்க. ரோட்டுல போன பொண்ணுங்களை எல்லாம் அசிங்கமான வார்த்தைகள்ல திட்டுனாங்க. சில பொண்ணுங்களோட உடலைத்  தொட்டு அநியாயம் செஞ்சாங்க. ‘சின்னப் பொண்ணுங்களை ஏன் இப்படி செய்றீங்க’ன்னு கேட்டதுக்கு, எங்களைத் தொடக்கூடாத இடங்கள்ல தொட்டு கீழே தள்ளிவிட்டாங்க. இங்கே இருந்த வாகனங்களை எல்லாம் அடிச்சு உடைச்சாங்க. ‘புள்ளைங்கள பெத்துக்கச் சொன்னா... ரௌடிங்கள பெத்து வெச்சிருக்கீங்க. எங்கே அவனுங்க’னு சொல்லி மிரட்டினாங்க” என கண்ணீரோடு விவரித்தார்கள்.

மெரினாவில் போலீஸாரின் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியானவுடன், சென்னை மாநகரில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகரமே முடங்கிப்போயிருக்க,  பலரும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தாலும், கடலுக்குள் நின்ற இளைஞர்கள் கலைந்து போகவில்லை. கடைசி முயற்சியாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் சென்று ஜல்லிக்கட்டு சட்டம், நிரந்தர சட்டமாகிவிடும் என விளக்கினார். அதேநேரத்தில் சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டமும் நிறைவேற்றப்பட, இயக்குநர் கெளதமன் அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு நேரில் வந்து விளக்கினார். இதைத் தொடர்ந்து இளைஞர்கள் கலைந்துச் சென்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.