News
Loading...

மதவாத, இனவாத அமைப்பினர்தான் மாணவர்களோடு இருக்கிறார்கள்!

மதவாத, இனவாத அமைப்பினர்தான் மாணவர்களோடு இருக்கிறார்கள்!

ல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸார் மிகக் கடுமையாக நடந்து கொண்டது சென்னை, மதுரை போலவே கோவையிலும்தான். 

கோவையில் வ.உ.சி மைதானத்தில் மிக அமைதியாகவே போராட்டம் நடத்திவந்தனர் மாணவர்களும் இளைஞர்களும். கைத்தட்டுவதற்கு பதில் கைகளை உயர்த்தி அசைத்து மகிழ்வை வெளிப்படுத்திவந்தனர். 30 ஆயிரம் பேர் வரை கூடியும் அங்கு எந்தப் பிரச்னையும் எழவில்லை. இரவு நேரங்களில்கூட சில நூறு பேர் அங்கு தங்கி இருந்தனர்.

23-ம் தேதி அதிகாலை. தங்களைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வந்தாலும், அமைதிவழிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர் மாணவர்கள். காலை 8 மணியளவில் போராட்டக் களத்தில் திடீரென போலீஸார் குவிக்கப்பட்டனர். ‘உடனடியாகக் கலைந்து செல்ல வேண்டும்’ என போலீஸார் சொல்ல... மாணவர்கள் மறுத்தனர். இதையடுத்து போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். மறுத்தவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காலை 9 மணிக்கு வ.உ.சி மைதானத்துக்கு வழக்கம் போல வருவதற்காக ஆங்காங்கே கிளம்பிய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்தக் கைது தகவல் போய்ச் சேர... கோவை முழுவதும் ஆங்காங்கே அவர்கள் மறியல்செய்ய ஆரம்பித்தனர். காந்திபுரத்தில் மறியல் நடத்தியவர்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் கண்மூடித்தனமாக போலீஸார் தாக்குதல் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் மட்டுமல்லாது, அவ்வழியாக நடந்த சென்ற, இரு சக்கர வாகனங்களில் சென்ற, பொதுமக்களையும் போலீஸார் தாக்க... நிமிடங்களில் அந்தப் பகுதி கலவர பூமியாய் மாறியது. இதேபோல் நவஇந்தியா உள்ளிட்ட சில பகுதிகளிலும் மறியல் செய்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தலையில் ரத்தம் கொட்டக் கொட்ட... மாணவர்களும், இளைஞர்களும் விரட்டியடிக்கப்பட்டனர். பலருக்கு கை, கால் முறிந்தது.

போலீஸ் தாக்குதலில் மண்டை உடைந்து, முகமெல்லாம் ரத்தம் வழிய நம்மிடம் பேசிய செல்வம், “நான் கம்பெனியில வேலை செய்கிறேன். சாதாரண தொழிலாளி. என் சொந்த ஊர் திண்டுக்கல். நான் பிழைக்க வந்திருக்கிறேன். ஐந்து  நாட்களாக போராட்டத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இன்று காலை எல்லோரையும் கைது செய்துவிட்டார்கள். கண்மூடித்தனமா அடிக்கறாங்க. ரத்தம் கொட்டறதைப் பார்த்தும்கூட அடிக்கறதை நிறுத்தல. எனக்கு இன்னும் புரியல. நாங்க அமைதியாதானே போராட்டம் பண்ணினோம்? எதுக்கு எங்களை இப்படி அடிக்கணும்?” என கேள்வி எழுப்பினார்.

போலீஸ் நடத்திய தாக்குதல் பெரும் கொதிப்பை ஏற்படுத்த... இதைக் கண்டித்து, மக்கள்நலக் கூட்டியக்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காந்திபுரத்தில் மறியல் நடத்தினர். காவல் துறையினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்களையும் போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளே கடுமையாகத் தாக்கப்பட்டனர். 

“மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மறியல் போராட்டத்தை நடத்தினோம். ஆனால் தடியடிக்குக் கண்டனம் தெரிவித்துப் போராடிய எங்கள் மீதும் போலீஸார் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். ரோட்டில் சென்றவர்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் என எல்லோரையும் போலீஸார் விரட்டி விரட்டித் தாக்கிய காட்சி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

மதவாத, இனவாத அமைப்பினர்தான் மாணவர்களோடு இருக்கிறார்கள்!

மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், “மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சில அமைப்பினர் இணைந்துக்கொண்டனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் இருக்கிறது. மதவாத, இனவாத அமைப்பினர்தான் மாணவர்களோடு இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தின்போது மாணவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். நக்சல் அமைப்போடு தொடர்புள்ளவர்கள் போராட்டத்தில் இருந்தனர். மாணவர்கள், ‘தோழர்’ என அழைத்து உங்களிடம் யாரேனும் பேசினால் தொடர்பைத் துண்டியுங்கள்” என்றார். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அவர் பதிலளிக்க மறுத்தார்.

அமைதியாக நடந்த மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சொல்லி, அராஜகத்தை ஏவிவிட்டு, தங்கள் மீது அழிக்க முடியாத கறையை அப்பிக்கொண்டிருக்கிறது தமிழகக் காவல் துறை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.