News
Loading...

குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு!

குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு!

‘‘குடியரசு தினக் காட்சிகளைப் பார்க்கலாம் என கடற்கரைக்குப் போனேன். சில நாட்களுக்கு முன்னால் மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்த கடற்கரை இன்று வெறிச்சோடிக் கிடந்தது. இதற்குக் காரணம் நிச்சயமாக அரசும் போலீஸும்தான். அமைதியாகப் போராடியவர்களை அராஜகமாகக் கலைத்ததன் விளைவு, ‘குடியரசு தினக் கொண்டாட்டத்துக்குப் போகலாமா’ என்ற பயத்தைக் கிளப்பிவிட்டது. போலீஸ் மீதான கோபத்தால் பலர் வரவில்லை. குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது நிரம்பி வழியும் கடற்கரை வெறிச்சோடியது. ‘ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துன’ கதையாகிவிட்டது. ‘யாராவது உள்ளே புகுந்து கலாட்டா செய்து விடக்கூடாது, கறுப்புக் கொடி காட்டிவிடக்கூடாது’ என்ற அச்சத்தில், ‘பாதுகாப்பு’ கெடுபிடிகள் போட்டிருந்தார்கள். மீனவர்கள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காகக் கடற்கரைக்கு வரும் அனைத்துப் பாதைகளையும் அடைத்தது போலீஸ். கொடியேற்றும் விழா நடக்கும் காந்தி சிலைக்கு வி.ஐ.பி-க்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் மட்டுமே வர அனுமதி. மற்றவர்கள் தலைமைச் செயலகம் எதிரே வாகனங்களை நிறுத்திவிட்டுத்தான் வர வேண்டும். சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து வர வேண்டும் என்பதால் பலர் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ”

‘‘எதிர்பார்த்ததுதானே?”

‘‘தமிழ்நாட்டுக்கு நிரந்தர கவர்னர் இல்லை. மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ்தான் தமிழ்நாட்டுக்கும் கவர்னர். அவர் மும்பையில் கொடி ஏற்றுவதால் இங்கு வரவில்லை. அதனால், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு கொடியேற்றும் சான்ஸ் அடித்தது. குடியரசு தின விழாவில் மாநில முதலமைச்சர் கொடியேற்றுவது இதுதான் முதல் தடவை. இப்படிப்பட்ட விழாவையே ஏதோ பள்ளி ஆண்டு விழா மாதிரி சுமாராக நடத்தி முடித்து விட்டார்கள். பொதுமக்கள் வராமல் போனால், பள்ளி மாணவர்களை கொண்டுவந்து குவிப்பார்கள் அல்லவா? அதையும் சரிவர செய்யவில்லை. அ.தி.மு.க-வினரைத் திரட்டி கொண்டு வந்திருக்க முடியும். ஏனோ அதையும் செய்யவில்லை. குடியரசு தினம் நடத்துவதில் ஆர்வம் இல்லையா? அல்லது பன்னீர்செல்வம் கொடி ஏற்றுவது பிடிக்கவில்லையா? என தெரியவில்லை.’’

‘‘பாவம் பன்னீர்!”

‘‘மனைவி விஜயலட்சுமியுடன் வந்திருந்தார் பன்னீர். தமிழகம் இதுவரை பார்க்காத காட்சி இது. வழக்கமாக குடியரசு தின விழாவில் ஜெயலலிதாவோடு கவர்னரும் அவரது மனைவியும் அமர்ந்திருப்பார்கள். இந்த முறை முதல்வருடன் அவர் மனைவியும் அமர்ந்திருந்தது ஆச்சர்யம்தான். குடியரசு தின கொண்டாட்டம் நடத்த கடற்கரை தேவை என்பதால்தான் போராட்டம் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்பட்டது. ஆனால், விழா கோலாகலமாக நடைபெறவில்லை. போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாகக் கிடந்தன. அதில் காக்கிச்சட்டைகள் மட்டும் ஹாயாக அமர்ந்திருந்தனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அலங்கார அணிவகுப்புகளும் மிகக் குறைவுதான். அலங்கார ஊர்திகள் தயாரிப்பு பணிகள் எல்லாம் கடற்கரைக்கு எதிரே இருக்கும் இடத்தில்தான் பல நாட்களாக நடைபெறும். அதனால், அலங்கார ஊர்திகளும் வெளி இடங்களில் தயாரிக்கப்பட்டன.’’

‘‘நிஜம்தான்!”

‘‘எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடியரசு தின விழாவில் பங்கேற்றது ஆச்சர்யம். இன்னொரு ஆச்சர்யமும் உண்டு. காவல்துறையின் மோப்ப நாய் பிரிவு இந்த ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்றது. அந்த நாய்களும் குதிரைப்படையும் அணிவகுப்பில் பங்கேற்றபோது ‘பீட்டாவுக்கு இது எல்லாம் கண்ணுக்குத் தெரியாதா’  என கமென்ட் அடித்தனர்.’’

‘‘ஓஹோ!’’ 

‘‘23-ம் தேதி காலை 10.30 மணிக்கு, ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’ என்று தமிழக சட்டமன்றத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தமிழகம் யுத்த பூமியாகக் காட்சி அளித்தது. ‘இந்தக் களேபரங்கள் வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை மட்டும்தானா? அல்லது, அதற்குள் அரசியல் இருக்கிறதா?’ என்ற விவாதங்களும் நடக்கின்றன. ‘மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எட்டு நாட்களுக்கு மேல் இப்படி ஒரு போராட்டம் நடந்து வருகிறது. அதைத் தடுக்காமல் என்ன செய்கிறீர்கள்?’ என்று கவர்னர் கேட்டதும், மத்திய உள்துறை கொடுத்த நெருக்கடியும்தான், போலீஸ் அத்துமீறல் மூலமாகக் கூட்டத்தைக் கலைக்க வைத்தது என்று கடந்த இதழிலேயே நான் சொல்லி இருந்தேனே. அந்தப் பின்னணி பற்றி இப்போது சில தகவல்கள் சொல்லப்படுகின்றன.’’

‘‘என்ன?’’

குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு!

‘‘கடந்த 16-ம் தேதி தஞ்சையில் நடராசன் நடத்திய பொங்கல் விழா பேச்சுகளைக் கவனித்திருப்பீர் அல்லவா?  சசிகலாவின் சகோதரர் திவாகரன், ‘ இந்த ஆட்சியைக் கலைக்க நடந்த சதிகளை எல்லாம், ஒரு நொடியில் தவிடுபொடியாக்கி அம்மாவின் வழியில் ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது திராவிடர்களின் ஆட்சி; சிலர் நினைப்பதுபோல், ‘அவா’ ஆட்சி கிடையாது. இப்போதும் இந்த ஆட்சியைக் கலைக்க வடக்கில் சதி நடக்கிறது. அவர்கள் தமிழகத்தின் உரிமைகளில் கை வைக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்தவும், எருது விழா நடத்தவும்கூட தடைபோடுகிறார்கள். அவர்களின் தடையை மீறி நடத்தினால், ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்கிறார்கள். அது எங்களின் பிணத்தின் மீதுதான் நடக்கும். வடக்கில் நடக்கும் சதிக்கு எதிராக தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்’ என்றார். அதே விழாவில் அடுத்த நாள் பேசிய நடராசன், ‘ஆலமரம் போல் நின்ற காங்கிரஸ் ஆட்சியை அடித்து வேரடி மண்ணோடு வீழ்த்தியவர்கள் நாங்கள். எங்களுக்கு காவிக் கட்சி எம்மாத்திரம். மோடி அவர்களே, தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, விஷமத்தைப் பரப்பி, உங்களால் ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது. 

அ.தி.மு.க-வை உடைக்கவும் முடியாது. அதற்காக நீங்கள் செய்யும் வேலைகள், இந்தியா என்ற நாட்டில் இருந்து தமிழகத்தைத்தான் உடைக்கும்’ என்றார். அதன்பிறகுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீயாய்ப் பரவியது.!’’

‘‘இவர்கள் பேச்சுக்கும் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?”

‘‘சம்பந்தமில்லை. இளைஞர்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாகத்தான் கூடினார்கள். 17-ம் தேதி மாணவர்கள் மெரினாவில் கூடுகிறார்கள். அன்றைய தினம் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கப் போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிக்கிறார். தீபா சொல்வது மீடியாக்களின் கவனத்துக்குப் போய்விடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று போலீஸ் நினைத்தது. அதனால் மாணவர்கள் கூடியதைக் கண்டுகொள்ளாமல் விட்டது. மீடியாக்கள் கவனம் மெரினா பக்கம் திரும்பியதும், தீபா செய்தி முக்கியத்துவம் இழந்தது. முதல் இரண்டு நாட்கள் இதைத் தங்களுக்குச் சாதகமான போராட்டமாகவே மாநில அரசு நினைத்தது. ஆனால், சசிகலா, பன்னீர் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டதும், நாளுக்கு நாள் கூட்டம் கூடியதும், ‘கலையமாட்டோம்’ என்றதும் ஆட்சியாளர்களுக்கே அச்சுறுத்தல் ஆனது. மாணவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் சிக்கல் வரும் என்று இவர்கள் பயந்த நிலையில் டெல்லி நெருக்கடி கொடுத்தது. போராட்டத்தில் மோடியை கடுமையாக விமர்சித்ததால் ஒருகட்டத்தில், ‘மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டி வரும்’ என்று சொன்னபிறகுதான் மாநில அரசு களத்தில் இறங்கியது.  மோடியின் மிரட்டலுக்குப் பயப்பட மாட்டோம் என்று நடராசன் சொல்லலாம். ஆனால், பயந்து எடுத்த நடவடிக்கைதான் கடற்கரை களேபரங்கள்!”

‘‘தீபா நியூஸை அமுக்கத்தான் முதலில் அனுமதி தந்தார்களா?”

குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு!

‘‘மெரினா கடற்கரையில் ஐந்து பேர் கூடி, மைக்கில் பேசினாலே, குதிரைப்படை போலீஸும், கலங்கரைவிளக்கம் போலீஸும் அள்ளிக்கொண்டு போய்விடும். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பத்து பேரை அமரவைத்து கவிதை வாசித்தார். அப்போது மைக்செட் பயன்படுத்தப்பட்டது. உடனடியாக வந்த போலீஸ்காரர்கள், மைக் செட்டை பறிமுதல் செய்து, மைக்செட்காரரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போனார்கள். ஆனால், இந்தமுறை லட்சக்கணக்கில் கூட்டம் கூடி பறையடித்து, மைக்செட் போட்டு, போராட்டம் நடத்தியபோதும் அரசாங்கம் அமைதியாக இருந்தது. தீபா பரபரப்பு, சசிகலாவுக்கு எதிரான விமர்சனங்கள், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்... இதையெல்லாம் அமுக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பயன்படுத்தினார்கள். அது அவர்கள் தலைக்கே வினையாகிவிட்டது!”

‘‘குடியரசு தினத்தை நடத்த வேண்டும் என்பதும் முக்கியம்தானே.’’

‘‘குடியரசு தினத்துக்கு முன்பே அதற்கான ஒத்திகைகள் மெரினாவில் தொடங்கிவிடும். ஆனால், இந்தமுறை போராட்டம் காரணமாக, ஒத்திகைகள் தலைமைச் செயலகத்துக்கு முன்பு நடத்தப்பட்டன. ஆனால், குடியரசு தின விழாவை அப்படி இடம்மாற்றிக் கொண்டாட முடியாது. அதற்காக, மெரினா கடற்கரை சாலை முழுவதையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அதற்காக போராட்டக்காரர்களைக் கலைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருந்தது. இதுதவிர, இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள். மத்திய அரசுக்கு உளவுத்துறையில் இருந்து ஒரு தகவல் போனது. ‘ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டக்களத்தில், பெங்களூருவைச் சேர்ந்த சில தீவிரவாதிகள், மாவோயிச தத்துவங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தனர். தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்து இருந்தனர். அவர்கள் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து எழுப்புகின்றனர். இவர்கள் எல்லாம் சேர்ந்து, போராட்டத்தை திசை மாற்றி வருகிறார்கள்’ என சொன்னது அந்தத் தகவல். அதுதான் மத்திய அரசின் தீவிரத்துக்குக் காரணம் என்கிறார்கள். முன்னாள் டி.ஜி.பி ராமானுஜத்தின் மருமகன் அருண்குமார் ஐ.பி.எஸ், மத்திய உளவுத்துறையின் சென்னை பிரிவில் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது”, ‘‘உயர்கல்வித் துறையில் பல கோடி டெண்டர் ஒன்றில் மன்னார்குடியினர் தலையை நுழைக்க...  ஓ.பி.எஸ் டென்ஷன் ஆகியிருக்கிறார்”!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.