சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அரசியலுக்கு வர கூறி ரசிகர்கள் வைத்துள்ள போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம், உடல்நிலை மோசமானதால் ஜெயலலிதா உயிரிழந்தார். இவரது இறப்பு தமிழக மக்களை மீளா துயரில் ஆழ்த்தியது. இவர் இறந்த சில தினங்களிலேயே அதிமுகவில் பல சிக்கல்கள் ஏற்பட தொடங்கின.
அதிமுக பொது செயலாளராக சசிகலா இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் மாறி மாறி போஸ்டர் மற்றும் பேனர்கள் வைத்து ஆதரவு தெரிவித்தனர்
இறுதியாக, கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி, அதிமுக பொதுக் குழுவில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பை ஏற்றுக் கொண்டு கட்சியை வழி நடத்தி வருகிறார்.
தற்போது, திடீரென சென்னை, திருச்சி உட்பட பல நகரங்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, கருத்து தெரிவித்த திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் ராயல் ராஜு , மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த அரசியல் தலைவர். அவர் இல்லாதது தமிழக அரசியலில் பெரும் இழப்பு,இந்த வெற்றிடத்தை நிரப்ப மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவர் ரஜினியால் மட்டுமே முடியும் என்று கூறினார்.
இதனால், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ரஜினியை விரைவில் நேரில் சந்தித்து எங்கள் நியாயமான கோரிக்கையை தெரிவிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று நீண்ட காலமாகவே அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை இதற்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில் ரஜினி ரசிகர்களின் திடீர் போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.