News
Loading...

அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது! டிராஃபிக் ராமசாமி தடாலடி

அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது! டிராஃபிக் ராமசாமி தடாலடி

‘‘சசிகலா முதல்வரானால், நிச்சயம் தலைமைச்செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்று சீறுகிறார் டிராஃபிக் ராமசாமி. விதிகளை மீறி ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வினர் பேனர் வைப்பது, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எனப்  பல விஷயங்களில் ஜெயலலிதாவை எதிர்த்துச் செயல்பட்டவர், தற்போது சசிகலாவையும் துணிச்சலாக எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த டிராஃபிக் ராமசாமி, உடல்நிலை பாதிப்பால் அதை முடித்துக்கொண்டார். அவரிடம் பேசினோம்.

‘‘ ‘ரமணா’ படத்தில் வருவதுபோல அப்போலோ மருத்துவமனையும் சசிகலாவும் சேர்ந்து ஜெயலலிதா, உயிரைவைத்து 75 நாட்கள் நாடகமாடி உள்ளனர். இந்தியாவே வியக்கக்கூடிய திறமையுள்ள, நிர்வாகத் திறன் கொண்ட ஜெயலலிதாவை யாரும் அற்றவர்போல சசிகலா அடக்கம் செய்துள்ளார். அப்படிப்பட்ட சசிகலா, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது மட்டுமல்ல... மனசாட்சிக்கு விரோதமானது. அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  ரவுடிக் கும்பலை வைத்துக்கொண்டு அ.தி.மு.க-வினரை மிரட்டிவருவதுடன், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தையும் சசிகலா ஆக்கிரமித்து வைத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதே, ‘ஜெயலலிதாவின் படத்தை வெளியிட வேண்டும்’ என வழக்குப் போட்டேன். ‘இது விளம்பரத்துக்காகப் போடப்பட்ட வழக்கு’ எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜெயலலிதா உடல்நிலை குறித்துத் தவறான தகவல் பரவிவந்த நிலையில், உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வழக்கைப் போட்டேன். 

இதற்காக அன்று என்னை விமர்சித்த அ.தி.மு.க-வினர், இன்று ‘அம்மாவின் புகைப்படத்தைக்கூட சசிகலா வெளியிடவில்லையே’ எனத் தங்களுக்குள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், ‘ஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வெளியிட வேண்டும்’ என மற்றொரு வழக்குப் போட்டேன். ‘தமிழக முதல்வர் மர்மமாக இறந்திருக்கிறார்’ என தெருவுக்குத் தெரு மக்கள் பேசிவரும் நிலையில், ஏனோ நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்துக்குக் கடிதம் அனுப்பினேன். 

போயஸ் கார்டனில் உள்ள வீட்டை, ஜெயலலிதாவின் அம்மாதான் வாங்கினார். இதற்கு முழு உரிமை ஜெயலலிதாவுக்கும் அவரது ரத்த சொந்த வாரிசுகளுக்கும் மட்டுமே உள்ளது. ஆனால், சசிகலா ஆக்கிரமித்துள்ளார். சசிகலா, அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து அந்தக் கட்சியின் சரிவு தொடங்கிவிட்டது. இன்னும் நான்கரை வருட ஆட்சி இருக்கிறது. இந்தக் காலத்தில் முழுமையாகக் சம்பாதிக்கலாம் என நினைத்துத்தான் அமைச்சர்கள் சசிகலாவை ஆதரிக்கின்றனர். ஜெயலலிதா இருக்கும்போதே சம்பாதித்த சசிகலா குடும்பம்,  இப்போது சும்மாவா இருக்கும்?

அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது! டிராஃபிக் ராமசாமி தடாலடி

‘வேதா இல்லத்தில் இருந்து சசிகலா வெளியேற வேண்டும்... அங்கு, போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என நான் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். எனது உண்ணாவிரதத்தின் சிறு வெற்றியாக போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது. ஆனால், எனது உடல் நலன் கருதி போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு, பொதுமக்களும் நண்பர்களும் கேட்டுக்கொண்டனர். எனக்கு பி.பி குறைந்ததால் ஐ.சி.யூ-வில் இருந்து சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளேன். இந்தநிலையில், தொடர்ந்து உண்ணாவிரதம் நடத்தினால் எனது உயிருக்கே ஆபத்து என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன். ஒருவேளை... சசிகலா முதல்வரானால், நிச்சயம் தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன். ஆனால், அவர் என்னதான் கனவு கண்டாலும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைக்காது. ஏனெனில் விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. ஜெயலலிதா இறந்துவிட்டாலும், வழக்கு இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது. கடந்த மாதம் அ.தி.மு.க பொதுக்குழு சென்னையில் கூடியபோது... கீழ்ப்பாக்கம் முதல் வானகரம் வரை கட்சி பேனர்களை வைத்து சாலையை மறைத்திருந்தனர். இதனால், முதல்வரும், அமைச்சர்களும் சட்ட விரோதமாகச் செயல்பட்டுள்ளனர். அதற்காக, ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஒரு வழக்கைப் போட்டுள்ளேன்’’ என்று முடித்தார். 

டிராஃபிக் ராமசாமி, மீண்டும் சாட்டையைக் கையில் எடுத்துவிட்டார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.