News
Loading...

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் தனி இருக்கை! -சசிகலா கொந்தளிப்பின் பின்னணி

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் 'தனி இருக்கை'!  -சசிகலா கொந்தளிப்பின் பின்னணி

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கும் இடையில் முட்டல் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. 'அரசு நிர்வாகத்தில் கார்டன் தரப்பினர் சொன்னதை ஓ.பி.எஸ் செய்யவில்லை என்ற கோபம்தான் பல வகைகளில் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் கூட்டத்தில் ஒருவராக அமர்த்தப்பட்டார் ஓ.பி.எஸ்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த 27-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் அவைத் தலைவர் மதுசூதனனுக்கும் மேடையில் இருக்கைகள் போடப்பட்டன. முதலமைச்சர் பன்னீர்செல்வம் மேடைக்குக்கீழ் அமர்ந்திருந்தார். 'கழகத்துக்கு தலைவர் என்று யாரும் இல்லாததால், அவைத் தலைவர் அமர வைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தமிழக முதலமைச்சரை இப்படி அவமதிக்கலாமா? அவர் மீது என்னதான் வெறுப்பு இருந்தாலும் இவ்வாறு செய்தது சரியல்ல' எனக் கூட்டத்துக்கு வந்த எம்.எல்.ஏக்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவனும், 'கூட்டத்தோடு கூட்டமாக முதல்வரை அமர வைத்தது, பன்னீர்செல்வத்துக்கு அவமானம் இல்லை. தமிழக மக்களை அவமதிப்பதாகும்' எனக் கொந்தளித்திருந்தார். " கார்டன் தரப்பினர் பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அந்தக் காரணங்களே கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்களை அவர் பக்கம் திருப்பியுள்ளது" என்கிறார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசினார். "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மன்னார்குடி உறவுகளின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இவர்கள் ஆளுக்கொரு அலுவலகத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்துக்கு நீதித்துறை புள்ளிகள் தொடங்கி அரசின் செயலர்கள் வரையில் பலரும் படையெடுக்கின்றனர். இதனால் அரசு ஒப்பந்தங்கள் தொடர்பாக, பலவித நெருக்குதல்களுக்கு அதிகாரிகள் ஆளாகின்றனர். 

சசிகலா ஆனால், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை. சசிகலா உறவினர்கள் சொல்லும் பல வேலைகள் நடப்பதில்லை. இந்தக் கோபத்தை கார்டன் மீது மன்னார்குடி உறவுகள் காட்டுவதால்தான், பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அண்மையில் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், கார்டன் தரப்பில் இருந்து சென்ற பட்டியலில் நான்கு அதிகாரிகளுக்கு சொல்லப்பட்ட இடத்தில் பணியிட மாற்றம் வழங்கப்படவில்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் பேசிய மன்னார்குடி உறவினர் ஒருவர், 'நாம் சொல்லும் எதையும் அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை. நமக்குள் இரண்டு பிரிவாக இருக்கிறோம். அதில் ஒரு பிரிவு ஆட்கள் சொல்வதை மட்டும்தான் கேட்கிறார்' எனப் பேசியுள்ளார். உண்மையில், மன்னார்குடி உறவுகளோடு இணக்கமாக இருந்தாலும், சிலவற்றை மட்டுமே பன்னீர்செல்வம் செய்து கொடுக்கிறார். அதுவும், சட்ட விதிமுறைகளுக்குட்பட்டுத்தான். தினமும் மன்னார்குடி உறவுகளின் பலவகையான நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறார் ஓ.பி.எஸ்.

ஆட்சி அதிகாரம் முடிவடைய இன்னும் நான்கரை ஆண்டுகள் மீதமிருக்கிறது. டெல்லி சென்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று வந்தது; ஆந்திர முதல்வரிடம் பேசி 2.5 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத் தந்தது என அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறார் பன்னீர்செல்வம். சீனியர் அமைச்சர்கள் பலரும் முதல்வருக்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறார்கள். கொங்கு மண்டல அமைச்சர்களோ, 'தலைமைப் பதவிக்கு வர வேண்டும்' என ஆசைப்படுகிறார்கள். இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு. அப்படி ஒரு காட்சி நடைபெற்றால், 'எங்களை மறந்துவிட வேண்டாம்' என முதல்வருக்கு தூது அனுப்பி வருகிறார்கள் எம்.எல்.ஏக்கள் பலரும். 'ஒருமுறையாவது அமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும்' என்ற எண்ணம்தான் எம்.எல்.ஏக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்டன் தரப்பில் இருந்து முதல்வருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளையும் அவர்கள் கவனித்து வருகிறார்கள். அ.தி.மு.கவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஓ.பி.எஸ் பக்கமே அணிவகுத்துள்ளனர்" என்றார் விரிவாக. 

"வரும் பிப்ரவரி 3-ம் தேதி அண்ணாவின் 48-ம் ஆண்டு நினைவு நாளுக்கு மாலை அணிவிக்கச் செல்கிறார் சசிகலா. பதவியேற்ற நாளில் இருந்து தலைவர்களுக்கு மாலை போடுவது; எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்துவது; கட்சியினருக்கு வழக்கமான அறிவுரைகளைச் சொல்வது என மூன்று காரியங்களைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார். எம்.எல்.ஏக்கள் திசைமாறிவிடக் கூடாது என்பதற்காக, 'உங்களுக்கு வேண்டியதை நிறைவாகச் செய்வேன். உங்களைத் தேடி அனைத்தும் வரும்' என அழுத்தமாக வார்த்தைகளைப் பதிவு செய்கிறார். டி.டி.வி.தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் சசிகலா நிழலில் அமர்ந்து ஆவர்த்தனம் செய்கின்றனர். மறுபுறம் நடராஜன், திவாகரன் உள்ளிட்டவர்கள் தமிழக அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த இரு அணிகளுக்குள்ளும் நடக்கும் சண்டைகளால், சீனியர்கள் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கோட்டையில் தன்னைச் சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களிடம், 'கார்டன் சென்று சின்னம்மாவையும் பாருங்கள்' என்றுதான் சொல்கிறார் ஓ.பி.எஸ். 'ஜெயலலிதா முதல்வராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அவரைப் பார்த்தோம். இப்போது நீங்கள் முதல்வராக இருந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கி வந்திருக்கிறீர்கள். உங்களைச் சந்திப்பதுதான் சரி. அவரை நாங்கள் எதற்கு சென்று சந்திக்க வேண்டும்' எனக் கிளம்பும் எதிர் விமர்சனத்தையும் ஓ.பி.எஸ் காது கொடுத்துக் கேட்பதில்லை. அனைவருக்கும் இணக்கமாக ஆட்சி லகானை அவர் செலுத்தினாலும், அதிகாரத்தின் பல முனைகள் அவரைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர். 

'பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்' என ஜல்லிக்கட்டு தடை நீக்கத்தின்போது, மனம் திறந்து பேசினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்தப் பதில் கார்டனுக்காக சொல்லப்பட்டதா என்ற கேள்விகளும் அரசியல் விமர்சகர்கள் வட்டத்தில் எழாமல் இல்லை. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.