News
Loading...

கிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை! திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா!

கிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை! திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா!

‘பக்தி மணம் கமழ வேண்டிய இடத்தில் ஊழல் நாற்றம் அடிக்கிறது’ என்கிற கோஷம் திருவண்ணாமலையில்  பலமாகக் கேட்கிறது.

கிரிவலத்தால் உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 6-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருக்கும் நிலையில், போதுமான அடிப்படை வசதிகள்கூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. 

இது தொடர்பாக குரல் கொடுத்துவரும், ‘வழக்கறிஞர் பாசறை’ அமைப்பைச் சேர்ந்த பாபுவிடம் பேசினோம். “அண்ணாமலையார் கோயிலுக்கு, சாதாரண நாட்களிலேயே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். பௌர்ணமி உட்பட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கோயிலுக்கு உண்டியல் மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இதுதவிர அர்ச்சனை, அபிஷேக டிக்கெட்கள், திருமணக் கட்டணம், பிரசாதக் கடை, நன்கொடை, கோயில் நிலங்கள் போன்றவற்றின் மூலம் கோடிகளில் வருவாய் வருகிறது.

கிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை! திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா!

இவ்வளவு வந்தாலும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு அதிகாரிகளுக்கு மனம் வருவதே இல்லை. குடிநீர்க் குழாய்கள் சரியாக இல்லை. இருக்கும் ஒரு கழிவறையும் பராமரிக் கப்படவில்லை. தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு, குளிப்பதற்கு எந்த வசதியும் கிடையாது. கட்டணக் கழிப்பறைகள், குளியலறைகளைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. 

கும்பகோணம் மகாமகத்தில் பயன் படுத்தப்பட்ட மொபைல் டாய்லெட்களை இங்கு கொண்டுவந்து காட்சிப் பொருள் போல போட்டிருக்கிறார்கள். கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான லாட்ஜ்கள், இலவசத் திருமண மண்டபம், சன்னியாசிகள் மடம் போன்றவைப் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. உண்ணாமுலை அம்மன் லாட்ஜில் சிங்கிள் பெட்ரூம் வாடகை 150 ரூபாய், டபுள் பெட்ரூம் வாடகை 250 ரூபாய். ஆனால், பல மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள். பணம் படைத்தவர்கள், வி.ஐ.பி-க்களுக்கு மட்டும் கும்பாபிஷேகம், கார்த்திகை தீபம் போன்ற தினங்களில் பாஸ் வழங்கி, அவர்களைக் கோயில் வளாகத்தில் இருக்க அனுமதிக்கின்றனர். மற்ற பக்தர்களைச் சில நொடிகளில் வெளியேற்றிவிடுகின்றனர். இந்தப் பிரச்னைகளுக்காகப் பொதுநல வழக்குத் தொடர உள்ளேன்” என்றார் அவர்.

கிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை! திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா!

ஓய்வுபெற்ற அறநிலையத் துறை அதிகாரி ஒருவர், “இப்போது இருக்கும் இணை ஆணையர் ஹரிபிரியா, கோயில் நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் மீது ஒப்பந்ததாரர் முதல் பக்தர்கள் வரை ஏராளமான புகார்களை அனுப்பி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. கோயிலில் காலணிகள் விடும் இடத்திலேயே முறைகேடுகள் ஆரம்பிக்கின்றன. அங்கிருப்பவர்களிடம் கேட்டால், ‘அதிகாரிகளுக்கு தினமும் மாமூல் கொடுக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் என்ன செய்வது?’ என்று புலம்புகிறார்கள். முடி இறக்குபவர்கள் குளிப்பதற்கான இலவசக் குளியலறை பூட்டியே கிடக்கிறது. ஆனால், அதன் எதிரே உள்ள கட்டணக் கழிப்பிடத்தின் மூலம் வசூலை வாரிக் குவிக்கிறார்கள். அபிஷேகத்துக்கு 2,200 ரூபாய் கட்டணம். ஆனால், 4,000 ரூபாய் வரை கறந்துவிடுகிறார்கள். கோயிலுக்கு உள்ளே திருமணக் கட்டணம் 1,500 ரூபாய். ஆனால், 15,000 வரை வசூலிக்கிறார்கள்.

இங்குள்ள, பல கோடி ரூபாய் மதிப்புடைய அம்மணி அம்மாள் மடம், கோயிலுக்குச் சொந்தமானது. அதை நிர்வகிக்கிறேன் என்ற பெயரில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகியான சங்கர் என்பவர் முறைகேடாகச் சொந்தம் கொண்டாடி வருகிறார். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைந்து நடத்தி, அதை மீட்க வேண்டும் என்ற முனைப்பு அறநிலையத் துறையினருக்கு இல்லை” என்றார்.

கிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை! திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா!

இந்தப் புகார்கள் பற்றி, திருவண்ணாமலை கோயில் அறநிலையத் துறை இணை ஆணையர் ஹரிபிரியாவிடம் கேட்டோம். “கும்பாபிஷேகப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. கோயில் சார்பில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. குளியலறைக்குத் தண்ணீர் இணைப்பு இல்லாமல் இருந்தது. நகராட்சிக்கு விண்ணப்பித்துவிட்டோம். ஒரு சில நாட்களில் திறந்துவிடுவோம். அம்மணி அம்மாள் மடம் தொடர்பான வழக்கை விழுப்புரம் இணை ஆணையர் கவனித்து வருகிறார்” என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “திருவண்ணாமலை கோயிலுக்குத்தான் இன்று செல்கிறேன். அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன். பிரசாத அளவு சம்பந்தமாக ஏற்கனவே ஆய்வு செய்தபோது கண்டித்தேன். நீங்கள் செல்லும் புகார்கள் தொடர்பாக ஆணையரை நேரடியாக அழைத்துப் பேசுகிறேன்” என்றார்.      

நம்பிக்கையோடு வரும் பக்தர்கள், நொந்து போய்த் திரும்பும் அளவுக்கு நிலைமை இருக்கக்கூடாது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.