News
Loading...

கவர்னர் மாளிகையா... லேடீஸ் கிளப்பா? - சண்முகநாதன் சரிந்த கதை!

கவர்னர் மாளிகையா... லேடீஸ் கிளப்பா? - சண்முகநாதன் சரிந்த கதை!

ஹா! இந்த மனிதனிடம் மைக்கைக் கொடுத்தால் தேசியமும் தெய்விகமும் கொட்டும். எழுத ஆரம்பித்தால் ஆன்மிகமும் தத்துவமும் தவழும். கல்லூரிகளுக்கு அழைப்பது என்ன, பள்ளிகளுக்கு அழைப்பது என்ன! இவரை உதாரண புருஷராகவே பாரதிய ஜனதாவினரும் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகளும் கொண்டாடுவார்கள். தற்போது, பாலியல் புகாரில் சிக்கி மேகாலயா கவர்னர் பதவியை இழந்து தலைகுனிந்து திரும்பி இருக்கிறார் சண்முகநாதன். 

‘வடகிழக்கு மாநிலம் ஒன்றில் போய் தமிழகத்தின் மானத்தை வாங்கிவிட்டாரே’ என்று சமூக வலைதளங்களில் கொந்தளித்தார்கள் தமிழர்கள். ‘கவர்னர் மாளிகையை இளம்பெண்கள் கிளப்பாக மாற்றிவிட்டார்’ என்று புகார்களை தூக்கிப் போடுகிறார்கள்.  ‘எங்கள் அமைப்பு ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகுந்தது’ என்று சொல்லிவந்தவர்களுக்கும் சேர்த்து அவமானம் ஆகிவிட்டது சண்முகநாதனின் ராஜினாமா!

  2015-ல் மேகாலயா கவர்னராக தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தவுடன் பல மாநிலங்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்பட்டனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சண்முகநாதனுக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. 

 மேகாலயா மாநிலத்துடன், அருணாசலப் பிரதேசத்தின் கவர்னர் பொறுப்பும் இவருக்குக் கூடுதலாகத் தரப்பட்டிருந்தது. இந்த நிலையில், சண்முகநாதனுக்கு எதிராக எழுந்த பாலியல் புகார் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘நேர்முகத் தேர்வுக்கு வந்த ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கவர்னர்’ என்று மேகாலயாவில் வெளியாகும் ‘ஹைலேண்ட்’ என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. 

 மேகாலயா கவர்னர் மாளிகைக்கான பி.ஆர்.ஓ பணிக்குக் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து நேர்முகத் தேர்வு நடைபெற்றது. டிசம்பர் 7-ம் தேதி பத்துப் பெண்களையும், 8-ம் தேதி ஐந்து ஆண்களையும் சண்முகநாதனே தனிப்பட்ட முறையில் நேர்காணல் செய்தார். அதில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சொன்ன பாலியல் குற்றச்சாட்டுதான், சண்முகநாதனுக்கு எதிராகப் புயலைக் கிளப்பியது. 

இந்த சூழலில். ‘சிவில் சொசைட்டி வுமன் ஆர்கனைசேஷன்’ மற்றும் ‘துமா உ ரங்லி’ என்ற பெண்கள் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் தீவிரம் அடைந்தது. சண்முகநாதனை கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. 

கவர்னர் மாளிகை ஊழியர்கள் சுமார் 100 பேர் இணைந்து பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் புகார் கடிதம் அனுப்பினர். ‘கவர்னர் மாளிகையின் கண்ணியத்தை சண்முகநாதன் கெடுத்துவிட்டார். கவர்னர் மாளிகையை, ஒரு லேடீஸ் கிளப்பாகவே மாற்றிவிட்டார். கவர்னரின் நேரடி உத்தரவால், இளம் பெண்கள் வந்துசெல்லும் இடமாக அது மாற்றப்பட்டு உள்ளது. இங்கு வரும் இளம்பெண்களில் பலர், சண்முகநாதனின் படுக்கை அறை வரை நேரடியாகச் செல்லும் அனுமதி பெற்றிருந்தனர்’ என்று பல பகீர் தகவல்களை அம்பலப்படுத்தியது அந்தக் கடிதம். 

 ‘சண்முகநாதனுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க, சென்னையில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். தனக்கு, தனிப்பட்ட முறையில் தேவை என்று பெண் நர்ஸ் ஒருவரை நியமித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பாக அஸ்ஸாம் பெண் ஒருவரை பி.ஆர்.ஓ-வாக நியமித்துக்கொண்டார். சண்முகநாதனின் டார்ச்சர் காரணமாக கவர்னர் மாளிகை துணைச் செயலாளர் ஒருவர், ஸ்ட்ரோக் வந்து இறந்தே போய்விட்டார்’ என நீண்டது அந்தக் கடிதம். 

உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், சண்முகநாதன் விவகாரம் பி.ஜே.பி-க்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. சண்முகநாதனின் விளக்கம் ஏற்கப்படவில்லை. ‘ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று அவருக்கு டெல்லியில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து ‘உடல்நிலை காரணமாக பதவி விலகுவதாக’ அவர் கடிதம் அனுப்பினார். 

 இதுகுறித்து பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவிடம் பேசினோம். ‘‘இத்தனை ஆண்டுகளில் சண்முகநாதன்மீது சிறு குற்றச்சாட்டும் கிடையாது. அவர் கவர்னராக இருந்த காலத்தில், எல்லாக் கல்லூரிகளுக்கும் சென்று ராமகிருஷ்ணர், விவேகானந்தர், இந்துப் பண்பாடு, கலாசாரம் போன்றவைப் பற்றிப் பேசிவந்தார். அதை விரும்பாத சிலர்தான் குற்றச்சாட்டைக் கிளப்பி உள்ளனர். விசாரணையின் முடிவில், அவர் குற்றமற்றவர் என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மிகப் பெரிய சதி இருக்கிறது” என்றார்.

கவர்னர் மாளிகையா... லேடீஸ் கிளப்பா? - சண்முகநாதன் சரிந்த கதை!

‘விஜயபாரதம்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான நம்பி நாராயணன், ‘‘67 வயதாகும் சண்முகநாதன், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். 

15 ஆண்டுகளாக டெல்லி பி.ஜே.பி அலுவலகத்தில் ‘தனி சூட்’ ரூமில் தங்கியிருந்து கட்சிப் பணிகளைக் கவனித்துவந்தார். அவருடைய சின்சியாரிட்டியைப் பார்த்துத்தான் கவர்னர் வாய்ப்புத் தரப்பட்டது. எதையும் ‘பட்’டென்று முகத்துக்கு எதிரே சொல்லிவிடும் அவரது இயல்பான குணமே கவர்னர் மாளிகை பணியாளர்களை அவருக்கு எதிராகத் திருப்பி யிருக்கிறது’’ என்றார்.

சண்முகநாதன், தனது பதவிக்காலத்தில் கவர்னர் மாளிகையில் நியமித்த மூன்று பெண்கள், இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ‘‘அவர் ராஜினாமா செய்வது மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. அவர் செய்த தவறுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, அவரை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அப்போதுதான் நியாயம் கிடைக்கும்’’ என்கிறார், மேகாலயா மாநில பெண்கள் ஆணையத் தலைவி தெய்லின் பான்பு. ஆனால், ‘‘சண்முகநாதனுக்கு எதிராக டாக்குமென்ட் ஆதாரங்களாக எதுவும் இல்லை. அதனால் விசாரணை ஏதும் செய்ய முடியாது” என்கிறரீதியில் சொல்லியிருக்கிறார், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு. 

இதுதொடர்பாக சண்முகநாதனிடம் பேச முயற்சித்தோம். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு தமிழ்நாட்டில் இதுவரை இருந்த மைக்கும் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.