News
Loading...

மூன்றாவது குறியா... தற்கொலையா? - திருப்பூர் திகுதிகு

மூன்றாவது குறியா... தற்கொலையா? - திருப்பூர் திகுதிகு

மேற்கு மண்டலத்தில் நிகழும் அரசியல் மரணங்கள் ஒவ்வொன்றுமே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்தவகையில் இப்போது பரபரப்பின் மையப்புள்ளியாக இருக்கிறது திருப்பூர். காரணம், முத்துவின் மரணம்!

திருப்பூர் வடக்கு மாவட்ட பி.ஜே.பி துணைத் தலைவராக இருந்தவர் முத்து என்கிற மாரிமுத்து. ஜனவரி 27-ம் தேதி அதிகாலை, அவருடைய வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியநிலையில் முத்துவைப் பார்த்தனர், அவரின் உறவினர்கள். பதைபதைப்போடு அவரை அந்தக் கயிற்றிலிருந்து விடுவித்து, அவசரமாக ஒரு தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். உடனடியாகக் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. 

“அதிகாலை நான்கு மணிக்கு தங்கள் வீட்டையொட்டிய மாட்டுத் தொழுவத்தில் பால் கறப்பதற்காக முத்து சென்றார். வெகுநேரம் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே, அவருடைய மனைவி புஷ்பா வந்து பார்த்தபோது, வேப்பமரத்தில் கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் முத்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பா, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் முத்துவை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்” என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.

 முத்துவின் உடல் தொங்கிய மரத்தின் கிளையில் தேசியக்கொடி கிடந்துள்ளது. மரத்துக்கு அருகில் உள்ள ஒரு கம்பத்தில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைத்து, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு கறுப்புக் கொடியும் செருகி வைக்கப்பட்டு இருந்துள்ளது. குறிவைத்துக் கொன்றதைப்போல உணர்த்தும்வகையில் ‘திருப்பூர்’ என்பதைக் குறிக்கும் ‘TPR 12345’ என்று ஓர் அட்டையில் எழுதப்பட்டு, அதில் 3 என்ற எண் மட்டும் குறுக்கே அடித்துவிடப்பட்டிருந்தது.  

 மர்மமான முறையில் முத்து மரணம் அடைந்த தகவல், வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவியது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திலும், அரசு மருத்துவமனையிலும் பி.ஜே.பி-யினர் திரண்டனர். அதனால் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. உடனடியாக போலீஸார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டது.

 “சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாளான குடியரசு தினத்தன்று தன் உறவினரின் மகனுக்குப் பெண் பார்ப்பதற்காக முத்து, கேரளா சென்றுவிட்டு அன்றைய இரவுதான் வீட்டுக்குத் திரும்பினார். பின்னர், நள்ளிரவு 2.30 மணி அளவில் வீட்டில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, நான்கு மணிக்குப் பால் கறக்கச் சென்றார். பிறகு, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்” என்று முத்துவின் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். இது, போலீஸாருக்கு பல சந்தேகங்களைக் கிளப்பியது. எனவே, ‘சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகிறார்கள். 

 இந்த நிலையில், முத்துவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வந்தார். “முத்துவின் கொலையை, தற்கொலை என திசைதிருப்ப போலீஸ் முயற்சி செய்கிறது. சம்பவம் நடந்த இடத்தின் சூழ்நிலையை வைத்துப் பார்க்கையில், இது திட்டமிட்ட கொலைதான்” என்று அவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

மூன்றாவது குறியா... தற்கொலையா? - திருப்பூர் திகுதிகு

பி.ஜே.பி-யின் கோட்டப் பொறுப்பாளர் பாயின்ட் மணி, ‘‘பத்து நாட்களுக்கு முன்புதான், ‘என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. யாரோ சிலர் இரவு நேரங்களில் என்னைப் பின்தொடர்வதுபோலத் தெரிகிறது’ என்று எங்களிடம் முத்து சொன்னார். இந்த நிலையில் முத்து மரணமடைந்து இருப்பது, எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ‘இது தற்கொலைதான்’ என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், அதை எங்களால் ஏற்கமுடியவில்லை. சம்பவ இடத்தில் பிரதமரின் படம், செருப்பு மாலை, கட்சிக் கொடிகள் போன்றவை இருந்ததை வைத்துப் பார்க்கும்போது, இதைத் தற்கொலை என்று முடிவெடுத்துவிட முடியாது’’ என்றார்.

 போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “முத்துவுக்கு பெண் ஒருவருடன் தவறான தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அது வீட்டுக்குத் தெரிந்ததால் ஒருவேளை மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம். அதன்பின் இதை அரசியல் கொலைபோல சித்திரிக்க முயற்சி நடந்திருக்கலாம். கட்சியில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள், கடைசியாக அவருடன் போனில் பேசியவர்கள் என சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம்” என்றனர். 

 திருப்பூர் தெற்கு காவல்துறை உதவி ஆணையர் மணியிடம் பேசியபோது, ‘‘முத்து கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் காவல்துறையின் புலன் விசாரணையில் இல்லை. சடலமாகக் கிடந்த முத்துவின் உடலில் சிறிய அளவிலான காயமோ, நகக்கீறலோகூட இல்லை. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர், இது தற்கொலைதான் என்று தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் மோடியின் படத்தை வைத்து, செருப்பு மாலை அணிவித்தது யார் என்பதைப் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார் உறுதியுடன். சோகத்திலுமா குரூர அரசியல் செய்வது?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.