News
Loading...

நிர்பயாவுக்கும் சுவாதிக்கும் கொந்தளித்தவர்கள் நந்தினியை மறந்தது ஏன்?

நிர்பயாவுக்கும் சுவாதிக்கும் கொந்தளித்தவர்கள் நந்தினியை மறந்தது ஏன்?

பாழடைந்த கிணற்றுக்குள் அழுகிய நிலையில் கிடந்தது ஒரு சிறுமியின் உடல். ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் உடலில் ஒட்டுத்துணிகூட இல்லை. உடல் முழுக்கக் காயங்கள். பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. பதினாறே வயதான அந்தச் சிறுமியின் வயிற்றில் ஆறு மாத சிசு இருந்தது. சிறுமியின் பிறப்புறுப்புக்குள் கைவிட்டு, சிசுவை வெளியே எடுத்து, தீயில் கொளுத்தியிருக்கிறார்கள் வெறியர்கள்.

அந்தப் பரிதாபச் சிறுமி, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இருக்கும் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி. தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினியின் தந்தை இறந்துவிட்டார். தாய் மற்றும் சகோதரியுடன் வசித்துவந்த நந்தினி, எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு, குடும்பச் சூழல் காரணமாகக் கட்டட வேலைக்குச் சென்றுவந்தார். அந்த நந்தினியை கொடூரமாக சிதைத்திருக்கிறார்கள் காமுகர்கள்.

 நந்தினியின் வீட்டுக்குச் சென்றோம். தாயார் ராஜகிளி துவண்டு கிடந்தார். “எனக்கு ரெண்டு பொண்ணுங்க. கணவர் இல்லாத நிலையில ரெண்டு பேரையும் ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்த்தேன். டிசம்பர் 28-ம் தேதி வழக்கம் போல வேலைக்குப் போனவ, வீடு திரும்பலை. என்ன ஆச்சோன்னு புரியாம பதைபதைச்சுப் போய் பல இடங்கள்ல தேடினோம். 

நந்தினி கூட வேலைக்குப் போற பொண்ணுங்ககிட்ட விசாரிச்சோம். அப்போதான், என் மகளை மணிகண்டன்னு ஒருத்தன் காதலிச்சு டார்ச்சர் செஞ்ச விஷயம் தெரிய வந்துச்சு. அவன், இந்து முன்னணியோட தலைவராம். அவன் மேல இரும்புலிக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். மூணு நாளா எந்தத் தகவலும் இல்லை. ஜனவரி நாலாம் தேதி நந்தினியோட உடல் கிணத்துக்குள்ள கிடக்கிறதா சொன்னாங்க. நான் புகார் கொடுத்தப்பவே அவனைப் பிடிச்சு விசாரிச்சிருந்தா, என் மகள் உயிரோடு இருந்திருப்பா” என்று சொல்லிக் கதறினார்.

நிர்பயாவுக்கும் சுவாதிக்கும் கொந்தளித்தவர்கள் நந்தினியை மறந்தது ஏன்?

‘நந்தினி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தை நாடியுள்ள வழக்கறிஞர் சசிகுமாரிடம் பேசினோம். “இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளராக இருந்த மணிகண்டன்தான் முக்கியக் குற்றவாளி. ஆசை வார்த்தைகளைக் கூறியும், கட்டாயப்படுத்தியும் நந்தினியுடன் மணிகண்டன் உறவு கொண்டிருக்கிறார். ஆறு மாதக் கருவை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த நந்தினி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு நந்தினியைக் காணவில்லை. புகார் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ‘தலித் பெண் நந்தினியை இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் கடத்திச் சென்றுவிட்டார்’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டேன். வாட்ஸ்அப்பிலும் அதைப் பரப்பினேன். மறுநாளே, ‘29-ம் தேதி இந்து முன்னணியில் இருந்து மணிகண்டனை நீக்கிவிட்டோம்’ என்று இந்து முன்னணியின் மாவட்டத் தலைவரான ராஜசேகர், போலீஸில் என் மீது புகார் கொடுத்தார். 

நிர்பயாவுக்கும் சுவாதிக்கும் கொந்தளித்தவர்கள் நந்தினியை மறந்தது ஏன்?

 இந்த விவகாரத்தில் ராஜசேகருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. ராஜசேகரை விசாரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம் உட்பட பல கட்சியினரும்  எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம். அதன்பின், மணிகண்டனின் நண்பரான மணிவண்ணனைப் போலீஸ் விசாரித்தபோது, ‘நாங்கள்தான் நந்தினியைக் கொலைசெய்தோம்’ என்று ஒப்புக்கொண்டார்” என்றார் வேதனையுடன்.

 ராஜசேகரிடம் பேசியபோது, “மணிகண்டனை மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். பெண் விவகாரத்தில் தவறு செய்கிறான் என்று தெரிந்ததும் 29-ம் தேதி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்கினேன். என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை” என்றார்.

நிர்பயாவுக்கும் சுவாதிக்கும் கொந்தளித்தவர்கள் நந்தினியை மறந்தது ஏன்?

டி.எஸ்.பி இனிகோ திவ்யன், “குற்றவாளிகள் ஐந்து பேரையும் கைதுசெய்துவிட்டோம்” என்றார்.  ஆனால், மணிகண்டனுக்கு நெருக்கமான ராஜசேகர் இந்தக் குற்றத்துக்குத் தூண்டுகோலாக இருந்தார் என்று அவரை  கைது செய்ய வேண்டும் என வி.சி.க உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்துகிறார்கள்.

 இந்த சம்பவம் குறித்து கள ஆய்வு நடத்திய எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், “ஐந்து பேர் சேர்ந்து அந்தச் சிறுமியை மிகக் கொடூரமாகப் பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்துள்ளனர். ‘நாடகக் காதல்’ என்று  குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கு எதிராக ஒரு கட்சியின் தலைவர் பிரசாரம் செய்துவந்தார்.  அந்தத் தலைவரின் சாதியைச் சேர்ந்தவர்தான் குற்றவாளி மணிகண்டன். அந்தத் தலைவர் எதிர்த்து வந்த சாதியைச் சேர்ந்தவர்தான் நந்தினி. இதற்கு அந்தத் தலைவர் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று கொந்தளித்தார்.  

 டெல்லி நிர்பயாவுக்கும், சென்னை சுவாதிக்கும் ஆதரவாகக் கொந்தளித்த சமூகம், அரியலூர் நந்தினி விவகாரத்தில் பாராமுகத்துடன் இருப்பது ஏனோ?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.