News
Loading...

இவர் எங்கள் அதிபர் இல்லை! - அமெரிக்காவின் குரல்

“இவர் எங்கள் அதிபர் இல்லை!” - அமெரிக்காவின் குரல்

சிரியா, இரான், இராக் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்கா வருவதைத் தடைசெய்து உத்தரவு போட்டு உலகையே அதிர வைத்திருக்கிறார், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். பதவியேற்ற ஒரே வாரத்தில் இந்த அதிரடி. ‘அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் வரத் தடை விதிப்பேன்’ என்ற அவரின் தேர்தல் வாக்குறுதியில் முதல்படியாக இது கருதப்படுகிறது.     

அமெரிக்கா... சந்தேகம் இல்லாமல் உலகின் ஒற்றை வல்லரசு! அதற்கு அதிபராக ஒருவர் பதவியேற்கிறார். அதை மற்ற நாடுகள் எப்படிப் பார்த்தாலும், அமெரிக்கா கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது, “இவர் எங்கள் அதிபர் இல்லை” என்ற வாசகங்களுடன் மக்கள் வீதிகளில் போராடினார்கள். அவர் பதவியேற்ற நிகழ்வுக்கு வந்த கூட்டத்தைவிட, அதே நாளில் வாஷிங்டனில் அவருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கூட்டம் அதிகம். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் எதிர்ப்பு பதாகைகளோடு அணிவகுத்திருந்தனர். அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய போராட்டமாக இது கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமில்லை, உலகம் எங்கும் இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 60 நாடுகளின் 670 நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள், 20 லட்சம் பேர். ஒருவர் பதவியில் அமர்வதற்கு முன்பாகவே, அவருக்கு ஏன் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை?

தேர்தலில் அமெரிக்காவின் அதிகமான மாகாணங்களைத்தான் ட்ரம்ப் வென்றார். அதிகமான மக்களின் வாக்குகளை வெல்லவில்லை என்பதுதான் உண்மை. ‘நம்மிடம் பணமும் அதிகாரமும் இருந்தால் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று பேசி அவமானப்படுத்தியது... இனவாதம் கிளப்பி அமெரிக்க சமூகத்தில் பிரிவினை மனப்போக்கை விதைத்தது... இப்படி அதிபர் பதவிக்குப் பொருத்தம் இல்லாதவராகவும், அபாயகரமானவராகவும் ட்ரம்ப் தெரிந்ததுதான், பெரும் எதிர்ப்புக்குக் காரணம்.  

அதிபர் பதவி ஏற்றதும், ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடிய வெகுசில உலகத் தலைவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்! ‘மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு ட்ரம்ப் அழைத்தார்’ எனத் தகவல். மோடியை வரவேற்கும் ட்ரம்ப், இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பணியாற்றச் செல்வதை விரும்பவில்லை என்பதே உண்மை. ‘அமெரிக்காவை மீண்டும் வல்லமை மிக்க தேசமாக மாற்றுவேன்’ என பேசிவரும் ட்ரம்ப், ‘அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை இந்தியர்களும் சீனர்களும் அபகரித்துக் கொள்கின்றனர்’ என பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகிறார். தங்கள் பணிகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் வரப்போகின்றன. விசா விதிகளும் இறுக்கமாக்கப்பட்டு, புதிதாக இங்கிருந்து யாரும் அமெரிக்கா செல்வது சிரமம் ஆகிவிடும் போலிருக்கிறது. இது சாஃப்ட்வேர் சார்ந்த இந்திய இளைஞர்களுக்கு மட்டுமின்றி, வேறு பல பணிகளுக்குச் செல்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதே நிலவரம்.

சர்வதேச உறவுகளில் பொதுவாகத் தேசத் தலைவர்கள் கண்ணியம் காப்பார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் வார்த்தைப் போர்களைச் செய்தாலும், நேரடி சந்திப்புகளில் வெறுப்பை யாரும் வெளிப்படுத்துவதில்லை. ட்ரம்ப் அண்டை நாடுகளை எப்படி அணுகுகிறார்?

“இவர் எங்கள் அதிபர் இல்லை!” - அமெரிக்காவின் குரல்

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குப் போதை மருந்துகள் கடத்தப்படுவதாகவும், அங்கிருந்து குண்டர்களும் சமூக விரோதிகளும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாகவும் புகார் சொல்லிவரும் ட்ரம்ப், ‘அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே ஒரு சுவர் கட்டுவேன். அதற்கு ஆகும் செலவை மெக்சிகோவிடமிருந்து வசூல் செய்வேன்’ என தேர்தல் பிரசாரங்களில் சொல்லி வந்தார். இப்போது அவர் அதிபர். மெக்சிகோவிலிருந்து ஓர் அமைச்சர் தலைமையிலான குழு, பிசினஸ் ஒப்பந்தங்கள் தொடர்பாகப் பேச அமெரிக்கா வந்திருக்கிறது. மெக்சிகோ அதிபர் என்ரிக்யு பெனா நீடோ சில நாட்களில் வருவதாக இருந்தார். ‘சுவர் கட்ட பணம் தருவதாக இருந்தால் வாருங்கள். 

இல்லையென்றால் உங்கள் நாட்டிலேயே இருங்கள்’ என ட்விட்டரில் வெளிப்படையாக அவருக்குச் செய்தி அனுப்பினார் ட்ரம்ப். இதில் கடுப்பான மெக்சிகோ அதிபர், பயணத்தையே ரத்து செய்துவிட்டார். சர்வதேச உறவில் இப்படிப்பட்ட அணுகுமுறைகள் அபாயகர மானவை. ட்ரம்ப் யுகத்தில், ஒரு புதிய சூழலை நோக்கி உலகம் அடியெடுத்து வைக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.