News
Loading...

நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...

நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...

‘‘இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைக்காத காட்சிகள் எல்லாம் இப்போது சட்டமன்றத்தில் நடக்கின்றன’’ 

‘‘ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் தி.மு.க அதகளம் செய்துவிடும்; கேள்விகளால் முதல்வரைத் துளைத்தெடுப்பார்கள்’ என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மெரினாவில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதையடுத்து அவரே, தாக்குதல் பற்றிப் பேச ஆரம்பித்தார். சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, ‘இதுபற்றி முதல்வர் அறிக்கை அளிக்க உள்ளார்’ என்று  சொன்னதும் மு.க.ஸ்டாலின் அமைதியானார். தி.மு.க-வினரும் அமைதி காத்தனர்.’’ 

‘‘ம்ம்ம்... போலீஸ் தாக்குதலை நியாயப்படுத்திய முதல்வரின் பேச்சுக்கும் பெரிய அளவில் தி.மு.க  எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே?’’ 

‘‘ஆமாம்! இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, அ.தி.மு.க-வையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் மு.க.ஸ்டாலின் மென்மையாகத்தான் ‘டீல்’ செய்கிறார்.’’

‘‘எதற்கு இந்த அணுகுமுறை? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்...’’

‘‘தி.மு.க செயல் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்  கட்சித் தலைவராகவும் உள்ள மு.க.ஸ்டாலின், ‘பன்னீர்செல்வமே பரவாயில்லை’ என்று கருதுகிறார். அதனால்தான் இந்த மென்மையான அணுகுமுறை. ஜெயலலிதா இருந்த இடத்தில் சசிகலாவை வைத்து அரசியல் செய்வதைவிட... அந்த இடத்தில் பன்னீர்செல்வத்தை வைத்து அரசியல் செய்வது ஸ்டாலினுக்கு வசதியாக இருக்கிறது. இப்போது பன்னீர் இருக்கும் இடத்துக்கு சசிகலா வந்தால், அவரோடு அரசியல் செய்வதில் ஸ்டாலினுக்கும் சரி... தி.மு.க-வுக்கும் சரி... பல சங்கடங்கள் இருக்கின்றன. சசிகலா அப்படி வந்தால், அவரோடு சேர்த்து நடராஜனையும் எதிர்கொள்ள வேண்டும். அது ‘வம்பு பிடித்த வேலை’ என்பது ஸ்டாலினுக்கும், தி.மு.க  முன்னணித் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் சசிகலாவுக்கு பன்னீரே பரவாயில்லை என்று கருதுகின்றனர். எனவேதான் அவர்கள் பன்னீரைக் கடுமையாக எதிர்ப்பது இல்லை. சட்டமன்ற அரசியலில் மட்டுமல்ல... கட்சி அரசியலிலும் ஸ்டாலின் இந்த நடைமுறையையே பின்பற்றுகிறார்; பன்னீர்செல்வமும் அதையே ‘மெயின்டெய்ன்’ செய்கிறார்.’’ 

நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...

‘‘இந்த ஒரு விவகாரத்தை வைத்து மட்டும் அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாதல்லவா?’’

‘‘இந்த விவகாரம் மட்டுமல்ல. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் நடக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, முதல்வரின் இலாகாக்கள் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப் பட்டன. அப்போது, முதல் ஆளாக பன்னீருக்கு வாழ்த்துச் சொன்னது மு.க.ஸ்டாலின்தான். ஆனால், கருணாநிதி பல சந்தேகங்களை எழுப்பி அறிக்கை விடுத்தார். ஜெயலலிதா மறைந்து, அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அஞ்சலி செலுத்தச் சென்றார் ஸ்டாலின். அஞ்சலி செலுத்திவிட்டுப் படியிறங்கியபோது, ஜெயலலிதா உடலின் இன்னொரு பக்கத்தில் இருந்த சசிகலாவிடம் ஆறுதல் சொல்லப் போகலாம் என்பதுபோல கைகாட்டினார், உடன் சென்ற கே.என்.நேரு. ஆனால்,  மு.க.ஸ்டாலின், ராஜாஜி ஹாலின் படிக்கட்டுகளில் கீழே அமர்ந்திருந்த பன்னீர்செல்வத்தின் தோளைத் தொட்டு அணுகி, அவரிடம்தான் தனது இரங்கலைத் தெரிவித்தார். அதன்பிறகு, ‘சசிகலா பொதுச்செயலாளராக வரவேண்டும்’ என்று கி.வீரமணி அறிக்கை கொடுத்தார். இதனால் வீரமணி மீது ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்தார். தனக்கு நெருக்கமான தி.க-வினரிடம் ‘ஆசிரியருக்கு எதற்கு இந்த வீண் வேலை?’ என்று தன்னுடைய வருத்தத்தையும் வெளிப்படுத்தினாராம். இது வீரமணிக்கும் எட்டியது. செயல் தலைவர் ஆனபிறகு, பெரியார் திடலுக்குச் சென்ற ஸ்டாலினிடம், கி.வீரமணி சில விளக்கங்களைக் கொடுத்து சமாதானப் படுத்தினாராம்.’’

‘‘ஓகோ!’’

‘‘மு.க.ஸ்டாலினும், தி.மு.க-வினரும், இதுவரை பன்னீர்செல்வத்தை கடுமையாக எந்த விமர்சனமும் செய்யவில்லை. மாறாக, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக, வர்தா புயல் வந்த நேரத்தில், பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் பாராட்டினார். பன்னீர் முதல்முறையாகக் கொடியேற்றிய குடியரசு தினத்தில், ஆச்சர்யப்படும் வகையில் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.’’

‘‘ஸ்டாலின் வரப்போவது முதல்வருக்கு முன்கூட்டியே தெரியுமாமே?’’

‘‘ஆமாம்! மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொள்ளப் போவதை முதல்நாளே தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஜெ.அன்பழகனும், சேகர்பாபுவும் உறுதி செய்தனர். அந்தத் தகவல் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் இருக்கைகள் அமைக்க உத்தரவு பிறப்பித்ததாகச் சொல்கின்றனர்.’’ 

‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே!’’

‘‘அதுமட்டும் இல்லை. கடந்த 27-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்துக்கு வந்தபோது, அவரது கார் கான்வாய்க்கு முன்பாக மு.க.ஸ்டாலின் கார் சென்றது. அதைக் கவனித்த முதலமைச்சர், தன்னுடைய கான்வாயை மெதுவாகப் போகச் சொன்னாராம். அதே நேரத்தில், முதல்வர் கான்வாய் தனக்குப் பின்னால் வருவதை அறிந்த மு.க.ஸ்டாலின், தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தி பன்னீருக்கு வழிவிடச் சொன்னாராம்.”

‘‘அந்த அளவுக்குப் போய்விட்டதா?”

‘‘இன்னும் இருக்கிறது, கேளும்! சட்டமன்றம் எத்தனை நாள் கூடுவது, எந்தெந்த நாட்கள் நடத்துவது என்று சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்பார்கள். இதில் எப்போதும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். ‘25-ம் தேதி சபை வைத்துக் கொள்ளலாமா?’ என்று சபாநாயகர் கேட்க, ‘அன்று மொழிப்போர் தியாகிகள் நாளாச்சே. அதனால் வெளியூரில் கூட்டம் இருக்கிறது. வேண்டாம்’ என்றாராம் ஸ்டாலின். உடனே 25-ம் தேதி சபை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். விவாதங்கள், வாக்குவாதங்கள் ஏதுமின்றி சில நிமிடங்களில் எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டன.”

‘‘ ‘ஏதோ நாடகம் நடக்குது நாட்டிலே’ என்ற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருகிறது!”

‘‘சட்டசபையில் பேசியபோது அமைச்சர் செல்லூர் ராஜு, ‘வீரமங்கை சின்னம்மா’ என்று சசிகலாவைக் குறிப்பிட்டார். ‘இது சபை நாகரிகம் அல்லவே’ என்றார் ஸ்டாலின். ‘தலைவரைப் புகழும் கலாசாரத்தை நீங்கள்தானே ஆரம்பித்தீர்கள்’ என்று முதல்வர் பன்னீர் கேட்டதும், ‘நாங்கள் தவறு செய்தால் நீங்களும் தவறு செய்ய வேண்டுமா?’ என்றார் ஸ்டாலின். உடனே சபாநாயகர் தனபால், ‘நீங்கள் உங்கள் தலைவரைப் பாராட்டுங்கள். அவர்கள் அவர்கள் தலைவரைப் பாராட்டட்டும். நான் இரண்டையும் தடுக்கவில்லை’ என்று சொன்னார். இதை எல்லாம் பார்க்கும்போது பெரிய நாடகமாகத்தான் தெரிகிறது. இப்படி ‘கட்சி அரசியல், சட்டமன்ற நடவடிக்கைகள், தனிப்பட்ட பண்புகள் என்று அனைத்து விஷயங்களிலும் ஓ.பன்னீர்செல்வமும் ஸ்டாலினும் ஒரு மாயக் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழக அரசியலுக்கு இது புதுமையாக இருக்கிறது. ஆரோக்கியமாகவும் தெரிகிறது. ஆனால், இந்தக்கூட்டணி, மக்களுக்கு நன்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியா? அல்லது ‘எதற்கு வம்பு’ என்ற அடிப்படையில் அமைந்த கூட்டணியா எனத் தெரியவில்லை! இந்தப் பக்கம் துரைமுருகன் போன்றவர்களும், அந்தப் பக்கம் முதல் வரிசையில் இருக்கும் அமைச்சர்களும் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போயிருப்பது நிஜம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.