News
Loading...

நாம் வாழ்வது இயற்கையோடு இயைந்த வாழ்வா? முரண்பட்ட வாழ்வா?!

நாம் வாழ்வது இயற்கையோடு இயைந்த வாழ்வா? முரண்பட்ட வாழ்வா?!

ந்தக் கூட்ட அரங்கில் இருந்தவர்களிடம் ”சமீபத்தில் யாரேனும் கொசுவைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டேன். ‘இதெல்லாம் ஒரு கேள்வியா!?’ என்ற ஏமாற்றம் கிட்டத்தட்ட அனைவர் முகத்திலும் தெரிந்தது. கை உயர்த்த வேண்டினேன். கொஞ்சம் வெட்கப்பட்டபடி ஏறத்தாழ எல்லோருமே தம் கைகளை உயர்த்தினார்கள். கூட்டத்தின் பின்பக்கமாக இருந்த ஒருவர் ’இப்போதுதான் ஒரு கொசுவை அடித்தேன்’ எனச் சொல்லி இறந்த கொசு இருக்கும் உள்ளங்கையைத் ஆர்வத்தோடு தூக்கிக் காட்டினார். சிலர் சிரித்தார்கள், பலர் கை தட்டினார்கள்.

”சரி சமீபத்தில் உங்களில் யாரெல்லாம் பட்டாம் பூச்சியைப் பார்த்தீர்கள்?” எனக் கேட்டேன். கேள்வி புரியவில்லை என்பதுபோல் பாவனை செய்தார்கள். ”பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, பட்டர்ஃப்ளை” என்றவுடன் லேசாக அவர்களின் முகங்கள் மலர்ந்தன. ஆனால் ஏமாற்றமாக உதடு பிதுக்கினார்கள். இட வலமாய் தலையை ஆட்டினார்கள். வெகு சிலரே கை உயர்த்தினார்கள். அந்தக் கைகளும் கூட முழுதாய் உணர்த்தப்பட்ட கைகள் இல்லை. கேட்கின்ற விசயத்திற்கு உற்சாகமாக, தெம்பாக, தெளிவாக பதில் சொல்ல விரும்புகிறவர்களின் கை உயர்த்தல் மொழி வேறு. அதில் வானை முட்டிவிடும் தினவு இருக்கும். தயக்கமாக, சந்தேகமாக பதிலளிக்க விரும்புவோரின் கைகள் எப்போதும் வளைந்தபடி மட்டுமே உயரும், இன்னும் சிலருக்கு  கை தலைக்கு மேல் உயராது.

”எப்போது பார்த்தீர்கள்?” என்றேன். அவர்களில் சிலர் நேற்றும, முந்தா நாள் என்றும், இன்னும் சிலர் ‘நாலஞ்சு நாள்’, ’ரெண்டு மூனு வாரம்’ என்றும், சிலர் ”பார்த்தேன் ஆனா எப்போங்கிறது மறந்துடுச்சு” என்றும் சொன்னார்கள். சரி ”நீங்கள் பார்த்த வண்ணத்துப்பூச்சி என்ன செய்து கொண்டிருந்தது?. அதன் நிறம் நினைவில் இருக்கிறதா?” எனக் கேட்டேன். பெரிதாக பதில்கள் வரவில்லை. ”கொசுவை யாருக்கெல்லாம் பிடிக்கும்?, வண்ணத்துப் பூச்சியை யாருக்கெல்லாம் பிடிக்கும்” எனவும் கேட்டேன். பதில் என்ன வந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே!.

’பிடிக்காத கொசுவை அத்தனை பேரும் சந்தித்ததற்கும், பிடிக்கும் வண்ணத்துப்பூச்சியை மிகச் சொற்பமாக மட்டுமே சந்தித்ததற்கும் முக்கியமான காரணம் என்ன?’ என வினவினேன். பலதரப்பட்ட பதில்களுக்குப் பிறகு ”வண்ணத்துப்பூச்சிகள் உலவும் இடங்களைவிட்டு, கொசுக்கள் புழங்கும் இடங்களுக்கு நாம் வந்துவிட்டோம்” அல்லது, ”நாம் இருக்கும் இடங்களுக்கு வண்ணத்துப்பூச்சிகளுக்கு வேலையில்லை, கொசுக்களுக்கு வேலை இருக்கிறது” என்றும் புரிதல் சார்ந்த பதிலை எட்ட முடிந்தது.

’ஏன் நாம் நகர்ந்தோம்’, ’ஏன் அவைகள் வருவதில்லை’ என்பதன் நீள அகலம் முழுவதும் நமக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் அது குறித்து யோசிக்கும் அவகாசமும் நமக்கில்லை. அதில் கணிசமான நேரத்தை நாம் கொசு விரட்டுவதிலேயே கழிக்க வேண்டியிருக்கிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை. கொசுக்கடி எதையும் சந்திக்காமல் ஒரு மனிதன் ஒரு நாளைக் கடந்துவிடுவதற்கென தமிழகத்தில் ஏதேனும் ஊர்கள் இருக்கின்றனவா?.

நாம் வாழ்வது இயற்கையோடு இயைந்த வாழ்வா? முரண்பட்ட வாழ்வா?!

சில மாதங்களுக்கு முன்பு என் மடிக்கணினித் திரையில் சேமிக்கப்பட்ட படம் ஒன்று. அழிபடாமல் அடம் பிடித்து ஜீவித்திருக்கிறது. கணினி முகப்புத் திரையை ஒழுங்குபடுத்தும் சமயங்களில் எல்லாம் அந்தப் படத்தை நீக்க நினைத்து தோற்றுப் போயிருக்கிறேன். இத்தனைக்கும் அந்தப் படம் காணக் கிடைக்காத படம் என்றோ, ஆகச்சிறந்த படம் என்றோ சொல்லிவிட முடியாது.

அது ஆங்கில தினசரி கட்டுரை ஒன்றில் வெளியாகியிருந்த படம். பார்த்தவுடனே என்னைச் சுண்டியிழுக்கும் ஒரு வசீகரத்தன்மையைக் கொண்டிருந்தது. படத்தில் இருக்கும் இடம் மலைப் பகுதியாகவோ, மலையடிவாரமாகவோ இருக்கலாம். அழகிய ஓடையொன்று சலசலக்கிறது. கரைகளாய் இருபக்கமும் நீண்ட பசும் புற்களினாலான புதர். ஓடையின் நடுவே மேடாக இருக்கும் ஒரு சிறிய இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து கொஞ்சம் காய்கறிகளை, கிழங்குகளை நீரில் அலசி சுத்தம் செய்யும் காட்சிதான் அந்தப் படம். அவர்கள் இருவரின் முகங்களும், அவர்கள் ஏதேனும் வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர்களோ அல்லது தென்கிழக்கு ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஓடையில் தம் காய்கறிகளைக் கழுவுகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் ’இந்தக் காட்சியில் அப்படி என்ன பெரிசா இருக்கு’ எனும் எண்ணத்தோடு எளிதாக கடந்து போய்விடக்கூடிய ஒன்றுதான். ஆனால் சற்று உற்றுப் பார்த்தால் அந்த நீரின் தூய்மையும், காய்கறிகளின் ஃப்ரெஷ்னஸ் என்று சொல்லும் புத்துணர்வுத் தன்மையும், அதில் இருக்கும் மலர்ச்சியும், அந்தச் சூழலும் நம்மில் பெரும்பாலானோர் தொலைத்துவிட்ட ஒன்றென்பது புரியும்.

நம்மில் எத்தனை பேருக்கு இப்படி முழுக்க முழுக்க இயற்கைச் சூழலில் விளையும் காய்கறிகளை, தானியங்களை, பழங்களை, கிழங்குகளை  எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இன்றைக்கு இருக்கின்றது? மனிதன் மாற்றியமைத்த நிலம் தவிர்த்து மற்ற இடங்களில் தானாய் முளைக்கும் எல்லாத் தாவரங்களும் அதனதன் போக்கில் செழிப்பாகத்தானே இருக்கின்றன. அவைகளுக்கு யாரேனும் நீரூற்றுகிறார்களா? உரம் வைக்கிறார்களா? களை எடுக்கிறார்களா? பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்களா? எதுவும் இல்லை. ஏனெனில் எல்லாச் செடி கொடி தாவரங்களும் இயற்கையின் பிள்ளைகள். எங்கே மனிதன் தன் முயற்சியென்று, தன் விருப்பதிற்கேற்ப உருவாக்கினானோ அப்போதிலிருந்து நீர் பாய்ச்ச, உரம் வைக்க, களை எடுக்க, பூச்சி அழிக்க என தேவைகள் பெருகின. அந்தத் தேவைகளோடு பெரும் பேராசையைப் பிசைந்து நிலத்திலும், நிலத்திலிருந்து விளைவதிலும் முடிந்த வரையில் நஞ்சினை சேர்த்துக் கொண்டு நோய்களை வரவழைத்துக் கொண்டு, பச்சை வர்ணம் அடித்த, வியாபாரம் நுணுக்கம் மிகுந்த ’இயற்கை அங்காடி’த் தேடுகிறோம். இதழ் வழியாக ‘இயற்கை, இயற்கை’ என செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்வதுபோல் அலைந்து கொண்டிருக்கிறோம்.

இப்படி காய்கறிகளையும், கனிகளையும், கிழங்குகளையும் மட்டுமா இழந்துவிட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றோம். உணவாய் உண்ணும் எல்லாப் பொருட்களுக்கும் இப்படியான ஒரு மாய ஓட்டமும் தேடலும் துவங்கி வெகு காலம் ஆகிவிட்ட்து. காய்கறிகளைத் தொலைத்ததைவிட அம்மாதிரியான ஓடைகளையும், நீர் நிலைகளையும், நீர் வழிப் பாதைகளையும் நாம் தொடர்ந்து தொடர்ந்து இழந்து கொண்டேயிருக்கிறோம் அல்லது தொலைக்கச் செய்கிறோம். நாம் மரணிக்கச் செய்துவிட்டோம் என்பதுதான் இதிலிருக்கும் சுடும் உண்மை.

கடைசியாக எப்போது ஒரு ஓடையைப் பார்த்தீர்கள்?. அந்தத் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது எனும் யோசனை இருந்ததுண்டா. மெல்ல நம் பாதங்களை நழுவச் செய்யும் பாறையின் வழுக்குத்தன்மை பிடித்த பாறைகளை ஸ்பரிசித்ததுண்டா? ஓரமாகப் பாசி பிடித்துக் கிடக்கும் உதிர்ந்த இலைகளைக் கண்டதுண்டா? கால் வைத்தவுடன் ஓடி வந்து கடிக்கும் மீன் குஞ்சுகளையும், வெடுக் வெடுக்கென ஓடும் தலைப்பிரட்டைகளையும் கடைசியாக எப்போதுதான் கண்டீர்கள்?

ஆழ்துளைக் குழாயிலிருந்து மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றி, அங்கிருந்து குழாய்கள் வழியே வீடுகளுக்குள் பாய்ந்து வரும் நீரோடு மட்டுமே தொடர்பு கொண்டவர்களாக மாறிப்போய் வெகுகாலம் ஆனவர்களிடம் கால்வாய்கள், ஆறுகள், கடல் ஆகியவற்றை விடுத்து ஓடை, ஏரி, குளம் என்று கேட்கும்போது எவ்விதமான பதில்களும் கிடைப்பதேயில்லை. அப்படி தெரியாத, இல்லாத பதில்கள் குறித்து கிஞ்சித்தும் கவலையும் இருப்பதில்லை. ஏனேனில் நீர் நிலைகளுக்கும் நமக்கும் தொடர்பேதுமில்லையென்றும் நாம் நம்பிக் கொண்டிருக்கலாம்.

மனிதர்களற்ற வனத்தில் பயணித்து நீருக்கான புனிதத்தில் பிறழ்வேதும் கொள்ளாமல் வரும் ஓடை நீரை வாழ்நாளில் ஒருமுறை கூட ருசித்திடாதவர்களும் இங்குண்டு. அம்மாதிரியான இடத்தை நோக்கிச் செல்லும் போதெல்லாம்கூட ’சுகாதாரம்’ என்ற பெயரில் இங்கிருந்தே பாட்டில் தண்ணீர் கொண்டு செல்பவர்களும் இங்குண்டு.

‘எதை நோக்கி இந்த ஓட்டம்’ என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் அவசர அவசரமாக தனக்கேற்ப ஒரு இலக்கு, கனவு, ஆசை அல்லது நிர்பந்தம் என ஏதேனும் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த ஆசை, தேவை, நிர்பந்தம், கனவு, இலக்கு என எதிலும் அவர்கள் இயற்கையை விட்டு தொடர்ந்து விலகுகிறார்கள். அது குறித்த அறிதலும் தெளிதலும் கூட இல்லை.

மரத்தின் உச்சியிலோ, பாறைகளின் இடுக்கிலோ கட்டப்பட்டிருந்த தேன் கூட்டிலிருந்து தேனெடுத்துச் சாப்பிட்ட அனுபவத்திற்கும், சாலையோரங்களில் ஆங்காங்க வியாபாரிகளால் உருவாக்கி விற்கப்படும் பெட்டித் தேனீக்களின் தேனிற்கும் இருக்கும் வித்தியாசம் ருசி மட்டுமில்லை ஆரோக்கியமும்தான். இதுபோல் பட்டியலிட்டால், அதை வாசித்து யோசிக்கவே நமக்கு பல நாட்கள் பிடிக்கும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கும், இயற்கையோடு முரண்பட்ட வாழ்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளிகளை நிரப்புதல் என்பது பேராசைதான். வாழ்க்கையில் பேராசையே படக்கூடாது என என் கனவில் புத்தன் வந்து சொல்லும் வரை பேராசையோடு காத்திருப்பது குறித்து கவலையேதுமில்லை.


- எழுதியது ஈரோடு கதிர்


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.