News
Loading...

மதுக்கடைகள் மூடலால் திறந்தவெளி பார்களாகும் கடற்கரை சாலைகள் : உடைந்த பாட்டில்களால் மக்கள் அவதி

மதுக்கடைகள் மூடலால் திறந்தவெளி பார்களாகும் கடற்கரை சாலைகள் : உடைந்த பாட்டில்களால் மக்கள் அவதி

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏராளமான மதுக்கடைகள் மூடியதன் எதிரொலியாக, கடற்கரை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் திறந்தவெளி பார்களாக மாறியுள்ளது. குடிமகன்கள் வீசியெறியும் உடைந்த பாட்டில்களால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரைக்கால் மாவட்ட கடற்கரையை, புதுச்சேரி அரசு பல லட்சம் செலவில் புதுப்பித்து சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிவருகிறது. அதன் ஒரு பகுதியாக, சாலையின் இரு பக்கமும் மக்கள் நடந்து செல்ல ஏதுவாக பேவரெட் கற்களால் ஆன பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை, நடைபாதை ஓரம் சலவை கற்கள், டைல்ஸ் மற்றும் சிமெண்ட் கட்டைகளால் ஆன வண்ண பெஞ்ச், பூங்கா, வித்தியாசமான விளக்குகள், நிழல்தரும் மரங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாததாலும், இரவு நேர காவலர்கள் ரோந்து செல்லாததாலும், நடைபாதைகள் புல் மற்றும் செடிகள் மண்டி காடுகளாகவும், பல இடங்களில் கற்கள் பெயர்க்கப்பட்டும், கால்நடைகளின் கழிவுகளாகவும், பூங்கா சிதிலமடைந்தும், மின்விளக்குகள், அழகிய பெஞ்சுகளை சமூக விரோதிகள் சிதைத்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏராளமான மதுக்கடைகள் அண்மையில் மூடியதன் எதிரொலியாக, கடற்கரை சாலைகள், மூடப்பட்ட மதுபான கடைகளின் அருகில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் திறந்தவெளி பார்களாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதுவை குடிக்கும் வரை சும்மா இருக்கும் குடிமகன்கள், குடித்தபிறகு, சிகரெட்டும், பாட்டிளுமாக சாலையில் செல்வோரை கிண்டல் செய்வதும், சிலர் பெண்களின் ஆடைகளை பிடித்து இழுப்பதும், இன்னும் சிலர் மதுபாட்டிகள்களை நடைபாதை, பெஞ்சு மற்றும் அருகில் உள்ள நீர் நிலைகளில் வீசியெறிந்து உடைப்பதுமாக எல்லை மீறும் போது, பலர் பல இம்சைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

அதுமட்டுமின்றி, கடற்கரையில் இரவு முழுவதும் நடக்கும் அசிங்கம் தெரியாத முதியோர்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மேற்கண்ட பகுதிகளில் அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, உடைந்து கிடக்கும் மதுபாட்டில்களால் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. மாலை நேரங்களில் பலர் தங்கள் குழந்தைகளை காலில் செருப்பு இல்லாமல் நடை கற்றுகொடுக்க நடைபாதையில் விடும் போது, சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாக நேரிடுகிறது. 

இவை அனைத்திற்கும் மேலாக, காரைக்கால் போக்குவரத்து போலீசார், அண்மைக்காலமாக மதுபான கடைகளின் 10 அடி தூரத்தில் நின்றுகொண்டு, கடையிலிருந்து வாகனத்தில் வெளியேறுவோரை மடக்கி, பிரீத் அனைலைசர் கருவி(மது குடித்தை அளவுடன் காட்டிகொடுக்கும் கருவி) இன்றி, வாயை ஊது என கூறி, போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என வசூலில் ஈடுபடுவது அதைவிட வேதனை. போலீசார் தங்கள் கடமையை சாலையோரத்தில், மூடப்பட்ட மதுபான கடைகளின் அருகில், குடியிருப்பு பகுதிகளில் மது அருந்தி மக்களுக்கு இடையூறாக நடப்போரை சட்டவிதிகள்படி தடுத்துநிறுத்தினால் நன்றாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.