News
Loading...

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! (மேஷம் முதல் கன்னி முடிய)

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! (மேஷம் முதல் கன்னி முடிய) வசந்த காலத்தின் முன்னுரையாக இன்று தமிழ்ப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், இந்த வருடம் நமக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரும், நம்முடைய எதிர்பார்ப்புகள் இந்த வருடமாவது நிறைவேறுமா என்பதுபோன்ற கேள்விகள் மனதில் தோன்றுவது இயல்புதான். இந்த வருடம் ஒவ்வொரு ராசி அன்பருக்கும் எப்படி இருக்கும் என்பது பற்றி 'ஜோதிட முனைவர்' கே.பி.வித்யாதரன் அவர்களிடம் கேட்டோம். அவர் சுருக்கமாகக் கூறிய பலன்கள் இங்கே உங்களுக்காக...

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

மேஷம்:
மேஷ ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் மட்டும் பொறுமையை கடைப்பிடிக்கவும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், வெளிநாட்டுப் பயணம் போன்ற விஷயங்கள் சற்று தடைப்பட்டே முடியும்.

வியாபாரம்: புதிய முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும். இருக்கும் இடத்தில் இருந்து வேறு பெரிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உணவு, கெமிக்கல், வாகன், கன்ஸ்ட்ரக்‌ஷன் வகைகளில் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகம்: அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தபடி இருக்கும். ஆனாலும் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலைக்கும் முயற்சி செய்யலாம்.

மாணவர்கள்: ஆகஸ்ட் வரை படிப்பில் பிற்போக்கான நிலையே காணப்படும். செப்டம்பர் முதல் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள்.

கலைத்துறையினர்: அரைகுறையாக நின்ற வேலைகள் எல்லாம் செப்டம்பர் மாதத்தில் இருந்து விரைந்து முடியும். புதுப் பட வாய்ப்புகளும் வரும். வருமானமும் அதிகரிக்கும்.

இந்த ஹேவிளம்பி வருடம் முற்பகுதி அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும், மையப்பகுதி மனநிறைவையும், பணவரவையும் தருவதாகவும், இறுதிப் பகுதி சுபச்செலவுகளை ஏற்படுத்துவதாகவும்  அமையும்.

பரிகாரம் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் கமலவல்லி சமேத கதிர்நரசிங்க பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் வணங்கிட தொட்டது துலங்கும்.

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

ரிஷபம்:
சந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் இருந்தபடி இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  பிள்ளைகளுடைய உயர்கல்வி, உத்தியோகம் போன்ற முயற்சிகள் வெற்றியடையும். 

கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணத் தட்டுப்பாடு நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பூர்விக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் சாதித்தும் காட்டுவார்கள்.

வியாபாரம்: ஆகஸ்ட் மாதம் வரை லாபம் அதிகரிக்கும்.  பங்குதாரர்களுடன் மனத்தாங்கல் ஏற்படக்கூடும்.  ஒரு சிலருக்கு தனியாக வியாபாரம் செய்யவேண்டிய நிலையும் உண்டாகும். உங்களுக்கு அனுபவம் இல்லாத துறைகளில் இறங்கவேண்டாம்.   

உத்தியோகம்: ஆகஸ்ட் மாதம் வரை சின்னச் சின்ன சலுகைகள் கிடைக்கக்கூடும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்று நம்பி ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்.

மாணவர்கள்:  பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்கவேண்டும். நண்பர்களின் தகுதி அறிந்து பழகவும். பெற்றோர்களின் ஆலோசனையைப் பெற்று நடக்கவும். 

கலைத்துறையினர்: சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருப்பது அவசியம். நல்ல வாய்ப்புகள் வரும். திரைக்கு வராமல் அரைகுறையாக இருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். 

இந்த வருடம் முற்பகுதி செலவுகளையும், அலைச்சல்களையும் தந்தாலும் இறுதிப் பகுதி ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் வடிவாம்பிகை உடனுறை தீர்த்தகிரீஸ்வரரை அர்ச்சித்து வணங்கிட வசதி, வாய்ப்புகள் பெருகும்.

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

மிதுனம்:

ராசிக்கு 6-ல் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், இந்த வருடத்தில் பல சாதனைகளைச் செய்வீர்கள். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் விரைந்து முடியும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் கிடைக்கும். வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். பூர்விகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.

வியாபாரம்: செப்டம்பர் முதல் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். கூட்டுத்தொழிலில் ஈடுபடவேண்டாம். பெரிய முயற்சிகளில் இறங்கவேண்டாம்.  உணவு, துணி, ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகரிக்கும்.  எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி  உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். 

மாணவர்கள்: ஆசிரியர்கள் பாராட்டும்படியாக உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவுகளில் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு உண்டு. உங்களால் பெற்றோருக்கு புகழும் கௌரவமும் கூடும்.  

கலைத்துறையினர்: உங்களுடைய யதார்த்தமான படைப்புகள் எல்லோராலும் பாராட்டப்படும். சம்பள பாக்கி கைக்கு வரும். புகழ் பெற்ற கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். 

இந்த வருடத்தின் முற்பகுதி செலவுகளையும், ஆரோக்கியக் குறைவுகளையும் தந்தாலும், மையப்பகுதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பணவரவும் உண்டாகும். 

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் எனும் ஊரில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினி உடனுறை கம்பகரேசுவரையும் சரபேஸ்வரரையும் நெய் தீபமேற்றி வணங்கிட மகிழ்ச்சி பெருகும்.

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

கடகம்:

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான குருபகவானின் நட்சத்திரத்தில் இந்த வருடம் பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திரன் 4-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும்.  பூர்விக சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.  மகளின் திருமணம் கூடிவரும். மகன் பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வார். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று வேறு புது சொத்தை வாங்குவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடை நீங்கும். கடன்களைத் தந்து முடிக்கும் அளவுக்கு வருமானம் உயரும்.

வியாபாரம்: தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பால் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும் வாடிக்கையாளர்களாக வருவார்கள்.

உத்தியோகம்: வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். கணினி துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

மாணவர்கள்: விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். 

கலைத்துறையினர்: விமர்சனங்களையும் கடந்து முன்னேறுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். வெளிவராமல் இருக்கும் படம் வெளியாகும்.    

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஒரு பக்கம் அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும் மற்றொரு பக்கம் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும். 

பரிகாரம்: அறந்தாங்கிக்கு அருகிலுள்ள துரையரசபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் காதமறவர் காளியம்மனை வெள்ளிக்கிழமையில் குங்கும அர்ச்சனை செய்து வணங்கிட மகிழ்ச்சி உண்டாகும்.

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

சிம்மம்:

உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், முடியாத காரியத்தையும் முடித்துக்காட்டுவீர்கள். பாதியில் நின்ற காரியங்கள் உடனே முடியும். மனதில் தைரியம் பிறக்கும். சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிதாக ஒரு சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும். தாய்வழி உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் வீண் பழிகளும் ஏற்படக்கூடும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்விக்காகக் கடுமையாக முயற்சி செய்யவேண்டி வரும். பாகப்பிரிவினை விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஈகோ பிரச்னையால் கணவன் - மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படும் என்பதால், பொறுமை அவசியம்.  வாழ்க்கைத்துணயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.  வி.ஐ.பி.-க்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மையும் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிற மொழி பேசுபவர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாபாரம்: குறைவான லாபம் வைத்து அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகம்: எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். புரட்டாசி மாதம் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். 

மாணவர்கள்: நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.  இலக்கியப் போட்டிகளில் முதலிடம் பெறுவீர்கள்.

கலைத்துறையினர்: பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். 
இந்த ஆண்டு அனுபவ அறிவாலும், இங்கிதமான பேச்சாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் வெற்றி பெற வைக்கும். 

பரிகாரம்: வேலூர் மாவட்டம் தக்கோலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் கிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஜலநாதீஸ்வரரை வில்வார்ச்சனை செய்து வணங்கிட நினைத்தது நிறைவேறும்.

12 ராசிகளுக்குமான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

கன்னி:

சந்திரன் 2-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். யதார்த்தமான நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும். பிள்ளைகளால் உங்கள் கௌரவம் உயரும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், வருடம் பிறக்கும்போது செவ்வாய் 9-ல் இருப்பதால், தந்தையுடன் கருத்துமோதல்கள் தோன்றி மறையும். தந்தை வழி சொத்துகளைப் பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் பணம் விரயமாகும்.

வியாபாரம்: புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கமிஷன், சினிமா, சிமென்ட், பெட்ரோ ப்ராடக்ட்ஸ், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகம்: மேலதிகாரிகளிடம் இதமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். நவம்பர் மாதம் முதல் அதிரடியான முன்னேற்றங்கள் உண்டு. பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். 

மாணவர்கள்: படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். அவ்வப்போது மறதி ஏற்படக்கூடும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் பதக்கமும் பாராட்டும் கிடைக்கும்.

கலைத்துறையினர்: தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும், மற்றொருபுறம் சாதித்துக்காட்டுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களை சுறுசுறுப்பாகச் செயல்படச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அங்கமங்கலம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தாவை வணங்கிட நன்மை உண்டாகும்.

(துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு நாளை பலன்களை பார்க்கலாம்...)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.