News
Loading...

75 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் உங்களை இலட்சாதிபதி ஆக்கும் ஊடுபயிர் கத்திரி

75 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் உங்களை இலட்சாதிபதி ஆக்கும் ஊடுபயிர் கத்திரி

யற்கை விவசாயிகள் யாராவது அழைத்தால், கூடுமானவரை தவிர்க்காமல் அவர்களது தோட்டத்துக்குச் சென்று கால் பதித்து வருவார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். ஆனால், இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும், ஒற்றைப்பயிர் சாகுபடி நடக்கும் தோட்டத்துக்குக் கண்டிப்பாகச் செல்லமாட்டார். தென்னை, வாழை, காய்கறிகள் என எந்தச் சாகுபடியாக இருந்தாலும், கலப்புப் பயிர்கள் அல்லது ஊடுபயிர்கள் சாகுபடி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் நம்மாழ்வார். 

அதனால்தான், பெரும்பாலான இயற்கை விவசாயிகள், குறைந்த நிலமே இருந்தாலும் பலவித பயிர்களைச் சாகுபடி செய்வார்கள். ஒரு பயிர் கைவிட்டாலும் இன்னொரு பயிர் காப்பாற்றிவிடும். 

அதோடு, ஒத்த பயிர்களாக இருக்கும்போது பயிர்களுக்குத் தேவையான சத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுவதோடு, பூச்சித் தாக்குதல்களும் குறையும். ஊடுபயிரிலும் இதே நன்மைதான். முதன்மைப்பயிருக்கு இடும் இடுபொருள்கள் மற்றும் பாசன நீர் ஆகியவற்றிலேயே ஊடுபயிரும் வளர்ந்து விடும். இதனால், சாகுபடிச் செலவு குறையும். இந்தக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து 75 சென்ட் நிலத்தில், நாடன் வாழையில் ஊடுபயிராக நாட்டுக்கத்திரியைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.மணி. 

ராஜபாளையத்திலிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில், 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கொத்தங்குளம் கிராமம். இங்குதான் மணியின் வாழைத் தோட்டம் உள்ளது. சுற்றி பஞ்சாலைகளாக இருந்தாலும் அவற்றின் நடுவில் பசுமையாகக் காட்சி அளிக்கிறது, மணியின் தோட்டம். நாம் வருவது குறித்து அவருக்கு முன்னரே தகவல் கொடுத்திருந்ததால், எதிர்பார்த்துக் காத்திருந்தார், மணி. 

இயற்கை விவசாயம் மீது ஈர்ப்பு 

“எனக்குச் சொந்த ஊரு ராஜபாளையம். எங்க குடும்பத்துல நான்தான் முதல் விவசாயி. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுமே பஞ்சு அரைக்கும் ஆலையில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். 6 வருஷம் கழிச்சு நானே இங்கே (கொத்தங்குளம்) கழிவுப் பஞ்சு அரைக்கும் ஆலையை ஆரம்பிச்சு, நடத்திட்டு இருக்கேன். 

75 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் உங்களை இலட்சாதிபதி ஆக்கும் ஊடுபயிர் கத்திரி

2006-ம் வருஷம், கோவில்பட்டியில் இருக்கிற என் நண்பர் காளிதாஸ் மூலமா பாமயன் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் இயற்கை விவசாயம் பத்திச் சொன்னார். அப்புறம் புளியங்குடி கோமதிநாயகம், அந்தோணிசாமி ஐயா இவங்களோட தோட்டத்தை நேரில் பார்த்துட்டு வந்தேன். அவங்களும் இயற்கை விவசாயம் பத்தி நிறையச் சொல்லிக் கொடுத்தாங்க. அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்றதுல உறுதியாயிட்டேன்.  

குத்தகை நிலத்தில் விவசாயம் 

என்னோட மில்லுக்குப் பக்கத்திலேயே இருந்த 40 சென்ட் நிலத்துல 2007-ம் வருஷம், கத்திரிக்காய் நாற்றை நடவு பண்ணி இயற்கை முறையில் பராமரிச்சேன். நல்லா விளைஞ்சது. சுவை, தரம் எல்லாமே நல்லா இருந்துச்சு. அதனால, காய்கறிகளத் தொடர்ந்து சாகுபடி செய்யணும்னு முடிவு எடுத்தேன். ஆனா, எங்கிட்ட நிலம் கிடையாது. அப்போ, பக்கத்திலேயே இந்த நாலு ஏக்கர் தோட்டம் குத்தகைக்குக் கிடைச்சது. 

2008-ம் வருஷத்துல இருந்து இந்த நிலத்துல கத்திரி, வெண்டை, தக்காளி, பப்பாளி, கீரை, வாழைனு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன மணி, தொடர்ந்தார். 

வருமுன் காத்தால் பூச்சிகள் வராது 

“சொந்த நிலத்தையும் சேர்த்து மொத்தம் 4 ஏக்கர் 40 சென்ட் நிலம் இருக்கு. இது, வண்டல் கலந்த கரிசல் நிலம். முழுக்க இயற்கை விவசாயம்தான். நாப்பது சென்ட்ல நாடன் ரக வாழை இருக்கு. 75 சென்ட்ல நாடன் ரக வாழை போட்டு அதுக்கு ஊடே பச்சை நிற உருண்டை நாட்டுக்கத்திரி போட்டிருந்தேன். இப்போ கத்திரி அறுவடை முடிஞ்சுருச்சு. தனியா ஒரு ஏக்கர் நிலத்துல நாட்டுக்கத்திரி நாற்று நட்டு ஒரு மாசம் ஆகுது. அரை ஏக்கர்ல நாட்டுப்பப்பாளி இருக்கு. அது மகசூல் முடியுற நிலையில இருக்கு. கால் ஏக்கர்ல சின்ன வெங்காயம் நடவு செஞ்சிருக்கேன். மீதி ஒன்றரை ஏக்கர் நிலத்தைக் கீரைகள், பப்பாளி நடவு செய்றதுக்காகத் தயார் செஞ்சு வெச்சிருக்கேன். 

75 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் உங்களை இலட்சாதிபதி ஆக்கும் ஊடுபயிர் கத்திரி

கத்திரியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதுனு சொல்வாங்க. முன்னெச்சரிக்கையா மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிச்சுட்டோம்னா பூச்சிகள் வராது. 

இயற்கை விவசாயத்துல நாட்டுக்கத்திரி நல்லாவே விளைஞ்சது. மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல், தேமோர் கரைசல்னு எல்லா இயற்கை இடுபொருள்களையும் என் மனைவி முத்துலெட்சுமிதான் தயாரிக்கிறாங்க. 

75 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் உங்களை இலட்சாதிபதி ஆக்கும் ஊடுபயிர் கத்திரி

இயற்கை முறையில் எட்டு மாதங்கள் பறிப்பு 

நாட்டுக்கத்திரியைப் தனிப்பயிரா சாகுபடி செஞ்சா, எட்டு மாசம் வரைக்கும் காய் பறிக்கலாம். நட்ட ரெண்டு மாசத்துல இருந்து காய்கள் கிடைக்கும். தொடர்ந்து ஆறுமாசம் வரைக்கும் காய் கிடைக்கும். தனிப்பயிரா போட்டிருந்தப்போ நான் எட்டு மாசம் வரை காய் பறிச்சிருக்கேன். இப்போ வாழைக்கு இடையே ஊடுபயிரா போட்டிருந்ததால, ஆறு மாசம் வரைக்கும் பறிச்சிட்டுப் பயிரை அழிச்சிட்டேன். வாழை ஏழாவது மாசம் குலை தள்ளிடும். அதனால, கத்திரிக்கு வெளிச்சம் கிடைக்காது. 

உள்ளூரிலேயே விற்பனை 

இயற்கைக் கத்திரிங்கிறதுக்காகத் தனி விலையெல்லாம் கிடைக்கிறதில்லை. வாரம் 25 கிலோவை சென்னையில் இருக்கிற இயற்கை அங்காடிக்கு அனுப்புறேன். மீதி முழுவதையும் ராஜபாளையம் உழவர்சந்தை, நண்பர்கள் வீடுனு உள்ளூரிலேயே விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். சொத்தைக்காய்களை மாடுகளுக்குத் தீவனமா பயன்படுத்திக்குவேன்” என்ற மணி, கத்திரியில் கிடைத்த மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார். 

75 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் உங்களை இலட்சாதிபதி ஆக்கும் ஊடுபயிர் கத்திரி

75 சென்ட் நிலத்தில் 6,370 கிலோ மகசூல் 

“நாட்டுக்கத்திரியில் 60-ம் நாள்ல இருந்து காய் பறிக்கலாம். வாரம் 2 முறைனு மொத்தம் 48 முறை பறிச்சிருக்கேன். அதுல சொத்தைக்காய்கள் போக 6,370 கிலோ கிடைச்சது. குறைஞ்ச விலையா கிலோ 18 ரூபாய்னும் அதிகபட்ச விலையா கிலோ 38 ரூபாய்னும் விற்பனையானது. 

அந்த வகையில 6,370 கிலோ கத்திரியை விற்பனை செஞ்சதுல மொத்தம் 1,27,400 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல, எல்லா செலவும் சேர்த்து 33,350 ரூபாய் போக மீதி 94,050 ரூபாய் நிகரலாபமா கிடைச்சிருக்கு” என்ற மணி நிறைவாக,  

ஊடுபயிரில் கூடுதல் லாபம்

“வாழையை மட்டும் நட்டிருந்தா 10 மாசம் கழிச்சுதான் வருமானம் பாத்திருக்க முடியும். கத்திரியையும் சேர்த்துப் பயிரிட்டதால ஆறு மாசத்துல ஒரு வருமானம் பார்க்க முடிஞ்சது. 

அதில்லாம இதுவரை கத்திரிக்கு கொடுத்த இடுபொருள்களிலேயே வாழையும் வளர்ந்துடுச்சு. இனிமே வாழைக்குப் பெருசா செலவு இருக்காது. அறுவடையும் போக்குவரத்தும்தான். இன்னும் ரெண்டு மாசத்துல வாழை அறுவடைக்கு வந்துடும். அந்த வகையில் வாழை மூலமா கிடைக்கிற வருமானம் முழுசுமே லாபம்தான். காய்கறிப் பயிர்ங்கிறதால தினமும் வருமானம் கிடைச்சது. 

எங்க ஊர்ப்பக்கம், ‘அழுதுக்கிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிரு’னு ஒரு பழமொழி சொல்வாங்க. விவசாயி சும்மாவும் இருக்கக்கூடாது. நிலத்துல ஒரு முழ அளவு நிலம் சும்மா கிடந்தாலும் அதுல ஒரு செடியை வெச்சு விட்டுடணும். அப்பதான் விவசாயத்துல ஜெயிக்க முடியும்” என்றார், உறுதியாக.

தொடர்புக்கு ஜி.மணி, செல்போன்: 98421 21562

75 சென்ட் நிலத்தில் 6 மாதத்தில் உங்களை இலட்சாதிபதி ஆக்கும் ஊடுபயிர் கத்திரி

இப்படித்தான் சாகுபடி செய்யணும் 

75 சென்ட் பரப்பில் வாழைக்கு இடையே ஊடுபயிராக நாட்டுக்கத்திரி சாகுபடி செய்யும் முறை குறித்து மணி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே... 

தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தில் ஒரு வாரம் செம்மறியாட்டுக் கிடை போட வேண்டும். பிறகு இரண்டு நாள்கள் நிலத்தைக் காயவிட்டு, ஐந்து கலப்பையால் இரண்டு உழவு செய்து 5 நாள்கள் நிலத்தைக் காய விட வேண்டும். பிறகு, டில்லர் மூலம் இரண்டு உழவு செய்து 5 நாள்கள் காய விட வேண்டும். பிறகு, மீண்டும் டில்லர் மூலம் உழவு ஓட்டி, பாசனத்துக்கு வாய்க்கால்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். 6 அடி இடைவெளியில் முக்கால் அடி ஆழம், முக்கால் அடி சதுரத்தில் குழி தோண்டி இரண்டு நாள்கள் ஆற விட வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும் இரண்டு கைப்பிடியளவு கலவை உரத்தை இட்டு, மேல் மண் நிரப்பிக் குழியின் நடுவில்... விதை நேர்த்தி செய்த வாழை விதைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும். அடுத்த நாள் கத்திரி நடவு செய்ய வேண்டும் என்பதால் வாழை நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. 

எழுபத்தைந்து சென்ட் நிலத்தில், ஊடுபயிராக நட 6 ஆயிரம் கத்திரி நாற்றுகள் தேவைப்படும். மறுநாள் வாழைக்கன்றுகளுக்கு இடையில் 2 அடி இடைவெளியில் ஒரு மாத வயதுள்ள கத்திரி நாற்றுகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து 2 நாள்களுக்கு ஒரு பாசனம் என 10 நாள்கள் வரை பாசனம் செய்ய வேண்டும். பிறகு தேவையைப் பொறுத்துப் பாசனம் செய்யலாம். 

15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் மற்றும் கடலைப்பிண்ணாக்கு கரைசல் (200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ கடலைப்பிண்ணாக்கைக் கலந்து ஒருநாள் ஊற வைத்த கரைசல்) ஆகியவற்றைச் சுழற்சி முறையில் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும். 

நாற்று நடவு செய்த 15-ம் நாள் களை எடுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 22-ம் நாள் களை எடுத்து ஒவ்வொரு கத்திரி செடிக்கருகிலும், அரைக் கைப்பிடி அளவு கலவை உரம் வைத்து மண் அணைக்க வேண்டும். 25-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா, 50 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 

30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 250 மில்லி இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 35 மற்றும் 70-ம் நாள்களில் முன்பு வைத்ததுபோலக் கலவை உரம் வைக்க வேண்டும். தொடர்ந்து வாரம் ஒருமுறை இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைச் சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். 

அதனால், 35-ம் நாளில் 25 சென்ட் பரப்புக்கு ஒரு பொறி வீதம் 3 விளக்குப்பொறிகள் அமைக்க வேண்டும். விளக்குப்பொறியின் தட்டில் 1 லிட்டர் தண்ணீர் மற்றும் 100 மில்லி மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துவிட்டால் பூக்கள் பூக்கும் பருவத்தில் வரும் பூச்சிகள் கவர்ந்து அழிக்கப்படும். நன்மை தரும் பூச்சிகள் அழிந்துவிடாமல் இருக்க... விளக்குப் பொறியை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே வைக்க வேண்டும். 

40-ம் நாளுக்கு மேல் கத்திரியில் பூக்கள் பூக்கும். இந்தச் சமயத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி தேமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இது, பூக்கள் உதிர்வதைத் தடுப்பதோடு, காய்ப்புழுக்களையும் கட்டுப்படுத்தும். 

45-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 6 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து அடுத்த நாள் வடிகட்டிய கரைசலை, 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும் இதனால், காய்கள் பருமனாகும். 

55-ம் நாளில் கத்திரியில் குருத்துப்பூச்சி தாக்கும். இதற்கு 10 லிட்டர் தண்ணீரில் 75 மில்லி வேப்பெண்ணெய், 75 மில்லி புங்கன் எண்ணெய், 75 மில்லி இலுப்பை எண்ணெய், 25 மில்லி மண்ணெண்ணெய், சிறிது காதி சோப் ஆகியவற்றை நன்கு கலந்து தெளிக்க வேண்டும். 60-ம் நாளிலிருந்து கத்திரிக்காயை அறுவடை செய்யலாம்.

வாழைக்கன்றுக்கு விதை நேர்த்தி 

200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் 150 லிட்டர் தண்ணீர், 2 லிட்டர் பஞ்சகவ்யா, 2 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்த கரைசலில் வாழை விதைக்கிழங்குகளை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை எடுத்து 15 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து விதைநேர்த்தி செய்து, நடவு செய்யலாம். விதைநேர்த்தி செய்து நடுவதால் வேர் அழுகல் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தியுடனும், வெடிப்பு நோய் இல்லாமலும் வாழை வளரும்.

தேமோர் கரைசல் 

ஒரு பாத்திரத்தில் 5 லிட்டர் புளித்த மோர் ஊற்றி, அதனுடன் 5 லிட்டர் தேங்காய் தண்ணீரைக் கலந்து 2 நாள்கள் வைத்திருந்தால் தேமோர் கரைசல் தயாராகிவிடும்.

மூலிகைப் பூச்சிவிரட்டி 

ஒரு பாத்திரத்தில் 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் ஊற்றி, அதில் 5 கிலோ வேப்பங்கொட்டையை இடித்துப் போட வேண்டும். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கன் இலை, நொச்சி இலை, சீத்தா மர இலை ஆகியவற்றில் தலா 2 கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மொத்தமாக உரலில் போட்டு இடித்து எடுத்து, சிறுநீரில் சேர்த்துக் கலக்க வேண்டும். 2 கிலோ கற்றாழையைத் தோலுடன் துண்டு துண்டாக வெட்டி இதனுடன் சேர்க்க வேண்டும். 

இக்கலவையைத் தினமும் வலதுபுறமாக காலையும் மாலையும் கலக்கி வர வேண்டும். இப்படி 7 நாள்கள் செய்தால் பூச்சிவிரட்டி தயாராகிவிடும். இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல், 25 கிராம் மஞ்சள் பொடி என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

வாழைக்கான கலவை உரம் 

ஒரு பாலித்தீன் ஷீட் விரித்து அதில் 200 கிலோ ஆட்டுச்சாணம், 200 கிலோ மட்கிய மாட்டுச்சாணம், 200 கிலோ அடுப்புச் சாம்பல், 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு 4 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 4 கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றை வரிசைப்படி அடுக்குகளாகப் போட்டு 2 லிட்டர் அமுதக்கரைசலைத் தெளித்து விட வேண்டும். பிறகு, இன்னொரு பாலித்தீன் ஷீட் கொண்டு மூடி 5 நாள்கள் கழித்துத் திறந்து மண்வெட்டியால் நன்கு கலக்கினால், வாழைக்கான கலவை உரம் தயார்.

நுனி வேரை வெட்ட வேண்டும் 

கத்திரி நாற்றின் நுனிவேரை வெட்டி விட்டுதான் நட வேண்டும். இதனால், சல்லி வேர்கள் அதிகம் முளைத்து அதிகப் பக்க கிளைகள் உருவாகும். தண்ணீரை எளிதாகச் செடிகள் எடுத்துக் கொள்ளும். 

2 லிட்டர் தண்ணீரில் 250 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி அல்லது பஞ்சகவ்யா கலந்து, அதில் வேர் நுனி வெட்டிய நாற்றுகளின் வேர்ப்பகுதி மூழ்குமாறு 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் 

தலா கால் கிலோ அளவு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை எடுத்து, அவற்றை உரலில் இடித்துக்கொள்ள வேண்டும். அக்கலவையை 4 லிட்டர் புளித்தமோரில் 2 நாள்கள் ஊறவைத்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி எனக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். புளித்த மோருக்குப் பதிலாகப் பசுமாட்டுச் சிறுநீரிலும் ஊற வைக்கலாம். சிறுநீர் என்றால் 5 நாள்கள் ஊற வைக்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.