News
Loading...

இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஓராண்டில் 200 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை

இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஓராண்டில் 200 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை

ந்தியாவில் உள்ள  தூய்மை நகரங்களின் பட்டியலில்  கடந்த ஆண்டு 37வது இடம் பிடித்த சென்னை மாநகரம் இந்த ஆண்டு சுமார் 200 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 235வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 434 மாநகரங்கள், நகரங்களில்  தூய்மை உள்ளிட்ட நல்வாழ்வு வசதிகள் எப்படி என்பதை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை  நேரடியாக ஆய்வு செய்து  தரப்பட்டியலை நேற்று வெளியிட்டது.

தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைப்பெற்ற ஆய்வில் ஒவ்வொரு நகரமும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர், போபால் ஆகியவை முதலிடங்களை பிடித்துள்ளன. புதிதாக உருவாகியுள்ள ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினம் 3வது இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவின் பழமையான மாநகராட்சியான, இப்போது பெரு மாகராட்சி என்று மாற்றப்பட்டுள்ள சென்னை மாநகரம் 235வது இடத்தையே பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 37வது இடத்தை பிடித்ததே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றி, தூய்மையை பராமரிப்பதில்  சென்னை மாநகராட்சி வேகம் காட்டவில்லை என்பதை இந்த 235வது இடம் அடையாளம் காட்டியுள்ளது. முக்கிய இடங்களில் குவிந்திருக்கும் குப்பைகளை கூட அகற்றாமல் மாநகராட்சி அலட்சியம் காட்டுகிறது. சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே செல்லும் பக்கிங்காம் கால்வாய், எழும்பூர் ரயில்நிலையம் அருகே செல்லும் கூவம் பாலங்களில் அகற்றப்படாமல் குவிந்திருக்கும் குப்பைகளை அதற்கு அத்தாட்சி.

 அதே போல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவறைகள் இல்லை. ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள ‘நம்ம டாய்லெட்’ பல இடங்களில் பயன்படுத்த முடியாத  நிலையில் உள்ளன. அதேபோல் அடிக்கடி நல்லா இருக்கும் நடைப்பாதைகளை மாற்றும் மாநகராட்சி அங்கு சேரும் நடைபாதை இடிபாடுகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகிறது. அவ்வாறு குவிந்திருக்கும் நடைபாதை இடிபாடுகள், கல் பலகை குவியல்கள் பொது கழிப்பிடங்களைாக மாறி வருகின்றன. மத்திய அரசின் ஆய்வில் கருத்துச் சொன்ன 49 சதவீத சென்னைமக்கள், பொதுகழிப்பிடங்கள் மிக மோசமான முறையில் பராமரிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி 59சதவீத மக்கள் சென்னையில் குப்பைகளை கொட்ட வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளனர். 

இது குறித்து சென்னை மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டதற்கு, ‘சென்னை மாநகராட்சி இப்போது பெரு மாநகராட்சியாக மாறிவிட்டது. ஆனால் அதற்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மக்கள் தொகை பொருக்கத்திற்கு ஏற்ப வசதிகளை பெருக்க சென்னை மாநகராட்சி வேகம் காட்டுவதில்லை. பொதுமக்களிடம் நாங்கள்தான் திட்டு வாங்க வேண்டியுள்ளது’ என்று புலம்புகின்றனர். தமிழகத்தின் மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய நகரமான  சென்னை தூய்மை பட்டியலில்  235வது திட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது  தமிழக அரசு, சென்னை மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதையே காட்டுகிறது.

மேயர் சைதை துரைசாமியின் மோசமான நிர்வாகம் 
சென்னை மாநகராட்சி 37வது இடத்தில் இருந்து 235வது இடத்துக்கு குப்பையை போன்று தூக்கி வீசப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மேயராக இருந்த சைதை துரைசாமிதான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் பயந்து நிர்வாகத்தை நடத்துவதாக நினைத்து, மாநகர் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமாகிவிட்டார். மோசமான நிர்வாகச் சீர்கேடுகள்தான், மாநகர் குப்பை மேடாகி, நாற்றமெடுக்க காரணமாக அமைந்து விட்டது. நகரை தூய்மையாக வைக்க குப்பைகளை நகருக்குள் தெருவின் ஒரு ஓரமாக டென்ட் போட்டார். 

ஆனால் அங்கும் குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசின. கொசுக்களும் அதிகரித்தன. மேயர், தினமும் கோட்டைக்குச் சென்று ஜெயலலிதா கண்ணில் படுவதற்கும், அவர் செல்லும்போது அவர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் நேரத்தை விட கோட்டையில் சும்மா இருப்பதில்தான் நேரத்தை செலவு செய்தார். இதனால், அவரது மோசமான செயல்பாடுதான் 37வது இடத்தில் இருந்து சென்னை மாநகர் 235வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.

57வது இடத்துக்கு தள்ளப்பட்ட மதுரை 

தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் 15 நகரங்களில் திருச்சியும் இடம் பிடித்திருப்பது ஆறுதல் என்றாலும் 3 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது கவனிக்கதக்கது. திருச்சி மாநகரம் இந்த ஆண்டு 6வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு திருச்சி 3 வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடதக்கது.

அதேபோல் மதுரை  நகரமும்  சென்னை , திருச்சியை போல பல இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை நகரம் கடந்த ஆண்டு தூய்மை நகரங்களின் பட்டியலில் 26வது இடம் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 57வது இடத்தைதான் பிடித்திருக்கிறது.

இப்படி மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டுத்துறை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழக மாநகரங்கள், நகரங்கள் எல்லாம் செயல்படாத தமிழக அரசு, முடங்கிக் கிடக்கும் நிர்வாகம் காரணமாக  கடந்த ஆண்டு பிடித்த இடத்தை விட இந்த ஆண்டு பல இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள அவலம் நடந்ததுள்ளது.

டாப் -15 நகரங்கள் 

1    இந்தூர்           மத்தியபிரதேசம்
2     போபால்        மத்தியபிரதேசம்
3    விசாகப்பட்டினம்    ஆந்திரபிரதேசம்
4    சூரத்        குஜராத்
5    மைசூர்        கர்நாடகா
6    திருச்சி        தமிழ்நாடு
7    புதுடெல்லி    டெல்லி
8    நவிமும்பை    மகாராஷ்டிரா
9    திருப்பதி        ஆந்திரபிரதேசம்
10    வதோதரா    குஜராத்
11    சண்டிகர்        சண்டிகர்
12    உஜ்ஜயின்    மத்தியபிரதேசம்
13    புனே        மகாராஷ்டிரா
14    அகமதாபாத்    குஜராத்
15    அம்பிகாபூர்    மத்தியபிரதேசம்

* மும்பை, டெல்லி என முக்கிய பெருநகரங்களின் பட்டியலில் உள்ள சென்னை 235வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் டெல்லியின் ஒரு பகுதியான புதுடெல்லி 7வது இடத்தையும், மும்பையின் ஒரு பகுதியான நவி மும்பை மாநகராட்சி 8வது இடத்தையும் பிடித்து முதல் 15 இடங்களுக்குள் உள்ளன.

*மொத்தமுள்ள தூய்மை பட்டியலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 434 நகரங்களில் பெரும்பான்மையான நகரங்கள் பாஜக ஆளும் குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்தவையே.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.