News
Loading...

கோயம்பேடு பேருந்து நிலையம்

கோயம்பேடு பேருந்து நிலையம்

அறிந்த இடம் அறியாத விஷயம்

‘‘இப்பல்லாம் கோயம்பேடு போகணும்னாலே ரொம்ப கடுப்பாயிருக்கு. எப்பவாவது டிராபிக்னா பரவாயில்ல. எப்பவும் டிராபிக்னா எப்படி? அதுவும் வெள்ளிக்கிழமை இந்தப் பக்கம் தலை வைக்கவே முடியல. ஏன்டா லீவு விடுறாங்கனு இருக்கு...’’ வார விடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்லும் பலரின் புலம்பல் இது.

இப்படி பலவிதங்களில் எரிச்சல்களைத் தந்தாலும் வந்தாரை அரவணைக்கும் சிங்காரச் சென்னையில் எல்லோருக்கும் முதலில் அறிமுகமாவது கோயம்பேடு பேருந்து நிலையம்தான். முதலில் வரவேற்றது மாநகர பேருந்து நிலையம். இதில், கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கின்றன. அதையடுத்து, கோயம்பேடு வழியாக வந்துசெல்லும் மாநகர பேருந்துகள் நிறுத்துமிடம். 

இங்கு பேருந்துகள் உள்ளே வருவதும் போவதுமாக டயரின் சத்தம் காதை கிழிக்கிறது. இதன் மேலே அந்தரத்தில் மெட்ரோ ரயில் பாதை. இடதுபுறத்தில் டூவீலர், த்ரீ வீலருக்கான கீழ்த்தள பார்க்கிங் வசதி ஏரியா. இதைக் கடந்து நான்காம் நுழைவாயிலின் முன் மெயின் கேட். இங்கே மொத்தம் எட்டு நுழைவாயில்கள் இருந்தாலும் சிலவற்றை அடைத்து வைத்திருக்கிறார்கள். இதன் அருகிலேயே மாநகர பேருந்து அலுவலகம்.

கோயம்பேடு பேருந்து நிலையம்

‘‘கிண்டி அண்ணா யுனிவர்சிட்டி போகணும் சார். எந்த பஸ்..?’’ செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பவ்யமாகக் கேட்கிறார் பயணி ஒருவர். ‘‘23M வரும். அங்க போய் நில்லுங்க...’’ கைகாட்டுகிறார். தொடர்ந்து அவரைச் சுற்றிலும் மக்கள் கூட்டம். பயணிகள் தாங்கள் போக வேண்டிய இடத்துக்கான பஸ்களின் எண்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

ஆனால், அவருக்குப்பின் அந்த அலுவலகத்தின் வெளிப்பகுதியில், வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் என சென்னையின் அதிமுக்கிய இடங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கான வழித்தட பஸ்களின் எண்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இதில், சில இடங்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லையென்றால் இறங்கவேண்டிய பஸ் வழித்தட எண்ணையும், பிறகு ஏற வேண்டிய பஸ்சின் எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்கள். 

கோயம்பேடு பேருந்து நிலையம்

ஆனால், இதை யாரும் சட்டை செய்வதாக இல்லை. இதுதவிர இரவு நேர வழித்தடப் பேருந்துகளைப் பற்றியும், எப்பொழுதும் இயக்கப்படும் பேருந்துகளின் வழித்தடங்கள் மற்றும் அவற்றின் எண்களையும் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது யாரையும் கேட்காமலேயே அந்தந்த ஏரியாவிற்கு பஸ் பிடித்துவிடலாம் போலிருக்கிறது. 

இதனுடன் அங்கங்கே ரவுண்ட் அடிக்கும் சிறிய பேருந்துகளின் வழித்தட எண்களும் ஸ்டாப்பின் பெயர்களையும் எழுதி ஒட்டியிருக்கிறார்கள். இதன் அருகிலேயே ப்ரீ பெய்டு ஆட்டோ கவுண்டர். எங்கே செல்ல வேண்டுமோ அதற்கான ஆட்டோ கட்டண ரசீதை இங்கே பெற்றுக் கொள்ளலாம். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சி.எம்.பி.டி.யின் பிரமாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தோம்.

கோயம்பேடு பேருந்து நிலையம்

காற்றோட்டமுள்ள விசாலமான வடிவமைப்பு. இரண்டு பக்கமும் பயணிகள் அமர்வதற்கு சேர்கள். ஐந்தாறு ஏ.டி.எம்கள், நான்கு ஹோட்டல்கள், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகடைகள், சிறிய சூப்பர் மார்க்கெட், தங்குவதற்கான கட்டண அறைகள், ரயில்வே ரிசர்வேஷன் அலுவலகம், தாய்மார்கள் பாலூட்ட ஏ.சி. அறை... என பிரமிப்பு எகிறிக் கொண்டே செல்கிறது. 

ஆவின் பாலகத்தைத் தாண்டி இடப்பக்கமாக ஆறாவது நடைமேடைக்குள் வருகிறோம். மொத்தம் ஆறு நடைமேடைகள், ஒவ்வொன்றிலும் 30 பஸ்கள் என ஒரே நேரத்தில் 180 பஸ்கள் நிறுத்தும் விரிவான டிசைன் புருவத்தை உயரச் செய்கிறது. ஐந்தாவது, ஆறாவது நடைேமடைகள் பெரும்பாலும் அதிவிரைவு ேபருந்துகளுக்கானவை. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம் என தென்னக மார்க்கத்திற்கு இங்கிருந்து பஸ்கள் செல்கின்றன. 

கோயம்பேடு பேருந்து நிலையம்

இதில், முதல் பஸ் நிறுத்துமிடத்தில் திருச்சி பஸ் நிற்கிறது. ‘‘அஞ்சரை மணி ரிசர்வேஷனெல்லாம் வா... திருச்சி, திருச்சி...’’ கண்டக்டர் கூப்பாடு போடுகிறார். அருகிலேயே நாகர்கோவில் வண்டி. கூட்டம் அலைமோதுகிறது. ரிசர்வேஷன் செய்யாதவர்கள் கண்டக்டரிடம் சீட்டுக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘சார்... நாரோயில்... ஒரு டிக்கெட்தான்...’’ மெதுவாக கண்டக்டரிடம் காதைக் கடிக்கிறார் பயணி ஒருவர்.

‘‘முதல்ல ரிசர்வேஷன். ஆட்கள் வரலைன்னா ஏத்திக்கிறேன்ய்யா...’’ என்கிறார் அவர். தொடர்ந்து, ‘‘மதுர, மதுர, மார, மார...’’ என மதுரை சத்தம் வித்தியாசம் வித்தியாசமாக காதில் விழுகிறது. இங்கேயும், எத்தனை மணிக்கு எந்தப் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்பதையும் எழுதியுள்ளனர். நாகர்கோவிலுக்குத்தான் மதியம் 1.30 மணியிலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன. மற்றவை மாலை 5 மணியிலிருந்தே தொடங்குகின்றன. 

இதனுடன், கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம், எர்ணாகுளம், குருவாயூர் ஆகிய ஊர்களுக்கும் பஸ்கள் உள்ளன. இந்த நடைமேடைகளை ரவுண்ட் அடித்துவிட்டு மூன்றாவது, நான்காவது நடைமேடைகளை  நோக்கி நகர்ந்தோம். இது ஆற்காடு, சேலம், ஈரோடு, கரூர், வேலூர், கோவை பகுதிகளுக்கானது. இங்கிருந்து இயக்கப்படுபவை பெரும்பாலும் அந்தந்த மண்டல பேருந்துகள்தான். 

இவற்றுக்கான விசாரணை மையத்தையும் அந்த மண்டலங்களே உள்ளே அமைத்திருக்கின்றன. விவரங்கள் தேவைப்பட்டால் இங்கே அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமேடையின் இறுதியில் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக அலுவலகம் வருகிறது. ஆந்திரப் பகுதிகளுக்குச் செல்பவர்கள் இங்கே ரிசர்வேஷன் செய்துகொள்ள முடியும். 

திருப்பதி திருமலைக்கு மட்டும் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. தவிர, விசாகப்பட்டினம், ைஹதராபாத், கடப்பா, கர்நூல், விஜயவாடா என எல்லா மார்க்கத்திற்கும் பஸ்கள் தினமும் இயங்குகின்றன. ‘‘சார்... மந்த்ராலயா போகணும். பஸ் இருக்கா?’’ பயணி ஒருவர் அங்கிருந்த அலுவலரிடம் விசாரித்தார்.

‘‘நேரடியா இல்ல. கர்நூல் போய் மாறணும். டிக்கெட் போடவா..?’’ என்கிறார் அவர். முதல் மற்றும் இரண்டாவது நடைமேடைக்குச் சென்றோம். இங்கே, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, கல்பாக்கம், செங்கல்பட்டு, கடலூர், பண்ருட்டி ஏரியா பஸ்கள் நிரம்பியுள்ளன. இதன் நிறைவில் கர்நாடகா போக்குவரத்துக் கழக அலுவலகம். இங்கேயும் ரிசர்வேஷன் வசதி வைத்திருக்கிறார்கள்.

பெங்களூர், மைசூர், மங்களூர், சிக்மகளூர், பெல்காம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் தினமும் உள்ளன. அப்படியே பின்னோக்கி நகர்ந்து பிரமாண்ட கட்டிடத்தினுள் வந்தோம். தென்னக ரயில்வேயின் ரிசர்வேஷன் புக்கிங் ஆபீஸில் கூட்டம் அலைமோதுகிறது. அரை டவுசருடன் வெளிமாநில பயணிகள் வரிசைகட்டி நிற்கிறார்கள். அதைப் பார்த்தபடியே மெட்ரோ ரயில் பாதை வழியாக ஆம்னி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தோம்.

கடந்த 2003ம் வருடம் சுமார் 6.7 ஏக்கரில் உருவாக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இதுதவிர 150 பஸ்கள் பார்க்கிங் பண்ணலாம். இதனுள் 51 டிராவல் ஏஜென்சி ஆபீஸ்களும், 22 கடைகளும் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு இங்கே 5 ஆயிரம் பேர்களாவது வந்து செல்கிறார்கள் என கூகுள் தரும் தகவலைப் படித்துக் கொண்டே ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் நுைழந்தோம். 

இங்கும் டிராபிக் டான்ஸ் ஆடுகிறது. அத்தனை நெரிசலிலும் வண்டிக்கு ஆள் பிடிக்கிறார்கள் ஏஜென்ட்கள். நம் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூடவே வருகிறார்கள். ‘‘நாகர்கோவில்... ஏசி வண்டி... முன்னாடி சீட்டே இருக்கு... எண்ணூறு ரூவாதான்!’’ என்கிறார் ஒரு ஏஜென்ட். 

இன்னொருவர், ‘‘மதுரையா சார்... மதுரையா...’’ என்கிறார். ‘‘டிக்கெட் இருக்கு...’’ என்றால்தான் நம்மை விட்டே நகர்கிறார்கள். வண்டிகளைக் கழுவிய நீரும், ஆங்காங்கே துப்பிய எச்சிலும் நடப்பதற்கு எரிச்சலூட்டுகிறது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கப் பொருளாளர் மாறனிடம் பேசினோம். ‘‘இங்க மட்டும் 400 பஸ்கள் இயக்கப்படுது. 

பண்டிகை, விடுமுறை நாட்கள்ல கொஞ்சம் கூடுதலா இயக்குவோம். டிராபிக்தான் பெரிய பிரச்னை. அதை மட்டும் ஒழுங்குபடுத்தினா போதும். பஸ் ஸ்டாண்ட் லெவல் வேற மாதிரி மாறிடும்...’’ என்றவர் வருமானம் பற்றி குறிப்பிட்டார். ‘‘இங்கிருந்து அரசுக்கு ஆண்டுதோறும் வரி மூலமா ரூ.200 கோடி வரை வருமானம் கிடைக்குது. 

அதேமாதிரி இங்குள்ளவங்க மாசம் ஒரு பஸ்சுக்கு தோராயமா ரூ.4 லட்சம் வரை டர்ன் ஓவர் பண்றாங்க. ஆனா, இது ஒரேமாதிரி இருக்கும்னு சொல்ல முடியாது. சாதாரண நாட்கள்ல 50% சீட்கள் கூட நிரம்பறது கஷ்டம்...’’ என்கிறார் அவர்.ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வெளியே வந்தோம். அதே டிராபிக். அதே புலம்பல்.                

வரலாறு

* ஆரம்பத்தில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் உயர்நீதிமன்றத்தின் அருகேயுள்ள பிராட்வே பஸ் நிலையமாக இருந்தது. அப்போது, ‘பாரிஸ்’ (பாரிமுனை) என்றால்தான் வெளியூர்க்காரர்களுக்குத் தெரியும்.

* மக்கள் தொகை பெருக்கம், புதிய பேருந்து நிலையத்தை தேட வைத்தது. இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையத்தை அமைக்க திட்டம் வகுத்து, 1999ல் இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

* ரூ.103 கோடி செலவில், 37 ஏக்கரில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் 2002ல் திறக்கப்பட்டது.

சி.எம்.பி.டி. பார்வை

* வார நாட்களில் சுமார் 4 ஆயிரம் பேருந்துகளும், வார விடுமுறையில் 10 ஆயிரம் பேருந்துகள் வரையிலும் இயக்கப்படுகின்றன.

* ஆரம்பத்தில் 1500 முதல் 2000 டூவீலர்களும் 60 கார்களும் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டது. ஆனால், இது டிராபிக்கை ஏற்படுத்திவிடும் எனக் கருதி அடித்தள பார்க்கிங் வசதி 17 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு, 3 ஆயிரம் டூவீலர்கள் நிறுத்தும்படி செய்திருக்கிறார்கள்.

* முன்பதிவு வசதிக்காக பத்து கவுண்டர்கள் வரை இருக்கின்றன. பண்டிகைக் காலங்களில் இந்தக் கவுண்டர் சர்வீஸை விரிவுபடுத்துகிறார்கள்.

* கோயம்பேடு டிராபிக்கை கட்டுப்படுத்த நூறடி சாலை, காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் ரூ.93.5 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

* பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ரூ.80 கோடி செலவில் வேளச்சேரி மற்றும் மாதவரம் பகுதிகளில் பஸ் முனையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இப்போது முதல்கட்டமாக எட்டு ஏக்கரில் மாதவரம் முனையம் கட்டும் பணி நடந்து வருகிறது. வருங்காலத்தில் ஆந்திரா வழி பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படும் என்கிறார்கள்.

* இதேபோல் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் பகுதியில் புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்னைகள்

* உள்ளே இருக்கும் ஹோட்டல் உணவுகளின் விலை அதிகம் என்றும், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்றுப் பிரச்னை ஏற்படுவதாகவும் மக்கள் வருத்தப்படுகின்றனர்.

* சுத்தம் செய்யப்படாத கழிப்பறைகளால் மூக்கைப் பிடித்துக்கொண்டே நடக்க வேண்டியிருக்கிறது.

* பஸ்கள் சரியான நேரத்துக்கு கிளம்புவதில்லை எனவும், அப்படியே கிளம்பினாலும் பேருந்து நிலையத்தை தாண்டுவதற்கே இரண்டு மணி நேரம் ஆகிறது என்றும் மக்கள் நொந்து கொள்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.