News
Loading...

தற்கொலைப் படையாக மாறினால் சொர்க்கத்தில் நல்ல உணவு கிடைக்கும்: சிறுவர்களிடம் ஐஎஸ் பிரச்சாரம்

தற்கொலைப் படையாக மாறினால் சொர்க்கத்தில் நல்ல உணவு கிடைக்கும்: சிறுவர்களிடம் ஐஎஸ் பிரச்சாரம்
ஐஎஸ். பிடியிலிருந்து தப்பி வந்த யாஜிடி இன 17 வயது சிறுவன் அகமத் அமீன் கோரோ (நடுவில்) மற்றவர்களுடன் பேசும் காட்சி. ஏ.பி.

ராக்கில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, வறுமையில் தத்தளிக்கும் யாஜிடி இன இளைஞர்கள், சிறுவர்களை தீவிரவாதத்திற்கு தேர்வு செய்யும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு, அவர்களிடம், தற்கொலைப் படையாக மாறினால் சொர்க்கத்தில் நீங்கள் விரும்பிய உணவு கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. 

ஒரு தக்காளிக்காக சண்டையிட்டுக் கொள்ளும் வறுமை நிரம்பிய யாஜிடி சிறுவர்களை தேர்வு செய்யும் ஐஎஸ், அவர்களுக்கு தங்கள் கொள்கைகளைக் கூறி மூளைச் சலவை செய்ய இத்தகைய கொடூரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

வடக்கு இராக்கில் தங்கள் கைவரிசையைக் காட்டிய ஐஎஸ், அங்கிருந்து 7-8 வயது கொண்ட சிறுவர்கள் நூற்றுக் கணக்கானோரை பிடித்து வந்து தீவிரவாதியாக, தற்கொலைத் தாக்குதல் நடத்த பயிற்சியளித்து வருகிறது. அந்தப் பயிற்சியின் ஒரு பகுதிதான் இந்த மூளைச்சலவை வகுப்புகள். 

இந்தக் கொலைகாரக் கும்பலிடமிருந்து தப்பிய 17 வயது அஹமத் அமீன் கோரோ என்ற சிறுவன் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “என்னால் இரவில் தூங்க முடியவில்லை, ஏனெனில் கண்ணை மூடினால் அவர்கள் (ஐஎஸ்) உருவம் என் கண் முன்னே அச்சுறுத்துகிறது” என்று கூறினார். 

2014-ம் ஆண்டு யாஜிடிகள் வாழும் பகுதியில் புகுந்த ஐஎஸ். ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து யாஜிடி பெண்களை அடிமைகளாக தங்கள் கொட்டடிக்குக் கொண்டு வ்ந்தனர். இவர்கள் பாலியல் போகப்பொருளாக பயன்படுத்தப்பட்டனர். இஸ்லாமிய தீவிரவாதிகளால் யாஜிடிகளின் பண்டைய மத நம்பிக்கை அவைதிகமாக பார்க்கப்படுவதே காரணம். 

மனித உரிமைகள் அமைப்பு புள்ளி விவரங்களின் படி இன்னமும் 3,500 யாஜிடிகள் ஐஎஸ். பிடியில் சிக்கியுள்ளனர்.

அசுரர்கள் போல் இருந்தனர்...

தப்பி வந்த அகமத் கூறும்போது, தன்னையும் தன் வயதையொத்த தன் உறவினர்கள் 4 பேரையும் 13 வயதில் ஐஎஸ்.பிடித்துச் சென்றனர். தல் அஃபாரில் ஒரு பள்ளியில் இவர்களை வைத்திருந்தனர்.

“ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை தங்களுடன் அழைத்துச் சென்று விடுவார்கள். பெண்களும், அவர்களது தாய்மார்களும் கண்ணீர் விட்டு கதறியதை நான் என் காதால் கேட்டு அரண்டு போயிருக்கிறேன். தாய்மார்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பெண்களை இழுத்துச் செல்வர். பெரிய தாடி வைத்தவர்கள் அவர்கள், பார்ப்பதற்கு அசுரர்கள் போல் இருப்பார்கள்.

எங்களிடம் ‘நீங்கள் இனி யாஜிடிகள் கிடையாது, எங்களில் ஒருவர்’ என்று கூறி தலை துண்டிப்பு வீடியோக்களைக் காட்டுவார்கள். தற்கொலைத் தாக்குதல் நடத்துவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பார்கள். நீங்கள் வளர்ந்த பிறகு உங்களை நீங்களே வெடித்துச் சிதற வைத்துக் கொள்வீர்கள்’ என்பார்கள் என்றார் அகமத்.

இவரைப்போலவே அக்ரம் ராஷோ கலாஃப் என்பவர் தனது 7 வயதில் ஐஎஸ் தாக்குதலில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் மொசூலுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். பிறகுதான் தப்பியுள்ளார் பயம் ஏற்படவில்லையா என்று கேட்ட போது, பசி வாட்டுவதால் பயம் இருக்காது என்றார்.

கடும் பயிற்சிகள் அளிக்கப்படும். தன்னால் துப்பாக்கியைத் தூக்க முடியாத காரணத்தினால் கடைசி வரை பணியாளாகவே வைத்திருந்தனர் என்கிறான் அக்ரம்.

அக்ரம் தப்பிய கதை:

2 ஆண்டுகள் ஐஎஸ் பிடியில் இருந்தார் அக்ரம். இந்நிலையில் இவரது மாமாவுக்கு கருப்பு இஸ்லாமிய உடை அணிந்த இவரது புகைப்படம் வருகிறது. ரக்காவிலிருந்து இவரைக் கடத்திச் சென்றால் 10,500 டாலர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது, இது அங்கு வெகுசகஜமானதே என்கின்றனர்.

உடனே ஜெர்மனியில் இருக்கும் ஒரு உறவினர் மூலம் பணம் பெற்று அக்ரம் தப்பவைக்கப்பட்டுள்ளார்.

அகமதுவும் உடனேயே தப்பித்துள்ளார். தல் அஃபாரில் உள்ள பயிற்சி முகாமிலிருந்து எப்படியோ தப்பி மசூதி ஒன்றில் இரவு முழுதும் பதுங்கியிருந்தார். பிறகு பிறருடன் கால்நடையாக தப்பியுள்ளார். ‘ஆனால் நடந்து நடந்து தாகம் அதிகரித்தது, தண்ணீர் குடிக்காவிட்டால் மரணம் என்ற நிலை ஏற்பட்டது’ என்கிறார் அகமத். ஆனால் எப்படியோ குடிநீர் பெற்று 9 நாட்கள் 90 கிமீ ட்ரெக்கிங்கிற்குப் பிறகு சிஞ்சா மலைப்பகுதிக்கு அகமதுவும் மற்றவர்களும் வந்து சேர்ந்துள்ளனர். இங்கு குர்திஷ் படைகள் இவர்களைக் காப்பாற்றினர்.

இவ்வாறு தப்பியவர்கள், பெரிய தொகை கொடுத்து மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியர் இன்னமும் இரவில் சரியாகத் தூங்க முடிவதில்லை, மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் திக்பிரமை பிடித்துள்ளதாக அக்ரமின் மாமா தெரிவிக்கிறார்.

பள்ளிக்குச் செல்வது, கவுன்சிலிங் போன்ற மனநல ஆலோசனைகள் ஓரளவுக்குக் கைகொடுக்கிறது எதிர்காலத் திட்டம் என்ன என்று தப்பி வந்த அகமட்டிடம் கேட்ட போது, “நான் வளர்ந்த பிறகு ஐஎஸ் தீவிரவாதிகளை பழிக்குப் பழி வாங்குவேன்” என்றான்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.