News
Loading...

மே மாத ராசிபலன்கள்

மே மாத ராசிபலன்கள்

மே மாத ராசிபலன்கள் இதோ

மேஷம்

தலைமை தாங்கும் பண்பை இயற்கையாகவே பெற்ற மேஷ ராசியினரே, இந்த காலகட்டத்தில் தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஷ்டமத்தில் சனி; ஆகவே வாகனங்களில் செல்லும்போதும் ஆயுதங்களைக் கையாளும்போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியனின் சஞ்சாரம் காரணமாக முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறும் உண்டாகலாம், நிதானமாக செயல்படுவது நல்லது. கோபத்தைத் தூண்டக்கூடிய சூழ்நிலையைத் தவிர்க்க முயற்சி செய்யலாம்.

தொழில் ஸ்தானாதிபதியான சனியும் மற்றும் குருவும் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக அமையும். செலவைக் குறைத்து பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. மேலதிகாரிகள் மூலமாக நடைபெறவேண்டிய சில விஷயங்கள் தாமதமாகலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பாசம் அதிகரிக்கும். குழந்தைகளால் மனம்மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது.

நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துப் பிறர் மனதில் வெறுப்பை வளர்க்காதிருப்பது நல்லது. பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். யாரையும் வருத்தப்படவைக்கும் அளவுக்குத் துடுக்காகப் பேசாதீர்கள்.கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம், கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் மற்றவர்களுடன் பழகும்போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

ரிஷபம்

வெள்ளை மனதுடன் அனைவரிடமும் பழகும் ரிஷபராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் விரயஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் நன்மையே செய்கிறார். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாயின் சஞ்சாரமும் நல்ல பலன்களைத் தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சினால் காரிய வெற்றி கிடைக்கும். சூரியனின் சஞ்சாரம் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கேதுவால் தொழில், வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அதனால் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். ஏற்கெனவே நீங்கள் விரும்பிக் கேட்ட இடமாற்றமாகவும் இது அமையலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.

எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களுடைய படிப்பும், வேலை, திருமண விஷயங்களில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். பெண்கள் சாதூரியமாகப் பேசி காரிய வெற்றி அடைவார்கள். குடும்பம் அல்லது நட்பில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

கலைத்துறையினர் நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின்போது கவனம் தேவை.

முக்கியமாக போதைப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல்துறையினர் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடன் பிரச்னை தீரும்.

மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் மாணவர்களுடைய செயல்கள் அமையும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் பாராட்டுவார்கள். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

மிதுனம்

எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காத மிதுன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதனான புதன் லாபஸ்தானத்தில், தைரியாதிபதி சூரியன் மற்றும் பஞ்சம விரயாதிபதி சுக்கிரனுடன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் காரிய அனுகூலம் ஏற்படும்.

செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும்போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். சில முயற்சிகள் பலிதமாகாமல் போகலாம்.

தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி குருவே பார்ப்பதால் தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அவரவர் படிப்புத் தகுதிக்கேற்ப என்று வேலை கிடைக்காவிட்டாலும், கிடைத்த வேலையைப் பிடித்துக்கொள்வது நல்லது.குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.பெண்கள் விடாமுயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு வாக்குவன்மையால் எல்லா நன்மைகளும் கிட்டும். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

கடகம்

உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கடக ராசியினரே, நீங்கள் குடும்பத்தினரை நேசிப்பவர்கள். இந்த காலகட்டத்தில் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தனாதிபதி சூரியனின் சஞ்சாரம் காரணமாக எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். ஏற்கெனவே கடனாகவோ, கைமாற்றாகவோ கொடுத்திருந்த பணம் நீங்களே எதிர்பாராதவகையில் வந்து சேரும். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கிரக சேர்க்கையால் தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். திட்டமிட்டபடி செயலை முடிக்க குடும்பத்தார் உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். வெளியிடங்களில் கலைப்பணியாற்ற வேண்டியிருந்தால் அங்கே உணவில் எச்சரிக்கையாக இருங்கள். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள்வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றிபெற பாடுபடுவீர்கள்.

சிம்மம்

பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வில் சாதனைகள் புரியும் சிம்மராசியினரே, நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள். இந்த காலகட்டத்தில் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சூரியனின் பாக்கியஸ்தான சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும்.

மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தனஸ்தானத்தில் இருக்கும் குருவால் பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தை குரு சனி பார்ப்பதால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். பெண்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். எடுத்துக் கொண்ட வேலைகளில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். புதிதாக வரும் ஒப்பந்தங்களை ஆராய்ந்து பார்த்து பிறகு ஏற்றுக்கொள்ளவும்.

அரசியல்துறையினர் ஆயுதங்கள் கையாளும்போதும், வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும்.

அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சக மாணவர்கள், ஆசிரியர்கள் உதவி கிடைக்கும்.

கன்னி

உழைப்பினால் வாழ்வில் வளம் பெறும் கன்னி ராசியினரே, நீங்கள் உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருக்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். சுக்கிரனின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும்.

பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துகள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டியிருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம், கவனம் தேவை.

பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களுடன் விதண்டாவாதம் வேண்டாம். பெண்கள் எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண்பழி ஏற்படலாம், கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால், பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

வயதில் சிறியவர்கள் ஆனாலும், மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். அரசியல்துறையினர் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துகளைத் தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது.

வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. அனாவசியமாக மேலிடத்தைப் பற்றி யாரிடமும் குறை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

துலாம்

எப்போதும் தர்ம சிந்த னையுடன் காணப்படும் துலா ராசியினரே, நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தனது சப்தம பார்வையால் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எதிர்ப்புகள் விலகும். சூரியனின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல்நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் சம்பந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலர் பதவி உயர்வும், நிலுவையிலுள்ள சலுகைகளும் பெறுவார்கள். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டியிருக்கும்.

சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். கவனம் தேவை.

வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும்.

மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

விருச்சிகம்

தனது நேர்மையால் வாழ்வில் வெற்றி பெறும் விருச்சிக ராசியினரே, இந்த காலகட்டத்தில்; வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். ராசியில் சனி பகவானின் சஞ்சாரத்தால் சில தடைகள் ஏற்பட்டாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் சாதகமான பலன் வரும். விரும்பியது கிடைக்கும்.

அதேநேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம்அனுசரித்துச் செல்வது நல்லது.

போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய விசுவாசம் உரிய நற்பலன்களை எதிர்காலத்தில் தரும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

வாழ்க்கைத் துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்கள் கூடுதலாக முயற்சிகள் செய்து விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினர் வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.வீண் வார்த்தைகளைப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினர் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். யாரையும் அனாவசியமாக சந்தேகப்பட்டு விவாதத்தில் இறங்கிவிடாதீர்கள். மாணவர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

தனுசு

தனக்கு கிடைத்திருக்கும் தெய்வீக அருளை அனைவருக்கும் தர விருப்பப்படும் தனுசு ராசியினரே, நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த காலகட்டத்தில் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரனின் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வீண் செலவுகள் உண்டாகும். சூரியனின் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதி புதன் ராசிக்கு திரிகோணம் பெற, தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிக்கிறார்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும், அதனால் நிதிநிலை உயரும். கடன் பிரச்னைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும்.

வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும். உல்லாசப் பயணமாக இருந்தாலும் சரி, பிறருடன் கூட்டு சேர்ந்து செல்லும் ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி, பயண வழியில் உங்கள் உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது நல்லது.

கலைத்துறையினர் யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம்.

எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்துக் கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்க்கும் வெற்றிக்கு, கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

மகரம்

தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மகர ராசியினரே, இந்த காலகட்டத்தில் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

செவ்வாயின் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அனாவசியமாக வாக்குவாதம்வைத்துக்கொள்ளாதீர்கள்.பழைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அவர்களை மனவருத்தம் அடைய வைக்காதீர்கள்.

அதனால் எதிர்கால பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், சுக்கிரனின் சுகஸ்தான சஞ்சாரத்தால் பிற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகப் போய்விடுங்கள்.

கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பொதுவாகவே வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவது நல்லது. இதனால் அனாவசிய சந்தேகங்களுக்கும், மனப்போர்களுக்கும் இடம் கொடுக்காமல் இருக்கலாம்.

பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடனோ, நண்பர்களுடனோ எங்கேனும் வெளியே செல்லும் வாய்ப்பு வந்தால், சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டோடு இருந்துவிடுங்கள்.

பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.

அரசியல்துறையினர் பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

கும்பம்

அனைவருக்கும் ஏணியாக இருந்து ஏற்றிவிடும் திறன்கொண்ட கும்ப ராசியினரே, இந்த காலகட்டத்தில் தைரிய தொழில் ஸ்தானாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். ஆனாலும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் கிரக சேர்க்கையால் வீண் கவலை ஏற்படும்.

வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சூரியனின் சஞ்சாரம் ராசிக்கு 3ல் இருப்பதால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். தெருவில் போகும்போதும், வரும்போதும்கூட சம்பந்தமே இல்லாதவர்கள் உங்களை வம்புச் சண்டைக்கு இழுக்கலாம், ஆனாலும் பொறுமையாக இருந்துவிடுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துகளிலிருந்து வரும் வருமானம் குறையலாம்.

தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.

பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பெண்கள் எந்த காரியத்திலும் சாதகமான பலன்பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்த பிரச்னை குறையும்.

பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் இரக்கப்படாதீர்கள். உண்மையிலேயே யாரேனும் ஒருவர் தகுதி படைத்தவர் என்றால், அவருக்காக சிபாரிசு செய்யும்போது ஒருமுறைக்கு இருமுறையாக யோசித்துக்கொள்ளுங்கள்.

அரசியல்துறையினர் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற, தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க நேரிடும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியைத் தரும். அதுவே உங்களுக்கு ஆசிர்வாதம் ஆகும்.

மீனம்

நட்பினை உயிரைவிட மதிக்கும் மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் வாக்குவன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சூரியனின் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மன திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

சுக்கிரனின் சஞ்சாரம் ராசிக்கு 2ல் இருப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்காகப் பட்ட சிரமங்கள் குறையும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சரியாகப்பராமரித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஏதேனும் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது அந்த ஆவணங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.

காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும்.

நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.