News
Loading...

மிரட்டும் கோடை... ஆழ்துளைக் கிணறு அமைக்கிறீர்களா? கொஞ்சம் யோசியுங்கள்!

மிரட்டும் கோடை... ஆழ்துளைக் கிணறு அமைக்கிறீர்களா? கொஞ்சம் யோசியுங்கள்!

ரலாறு காணாத வறட்சியால், நீரின்றி வாடிக்கிடக்கின்றன பயிர்கள். ஈரப்பதமில்லாததால், நிலங்களெல்லாம் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. தண்ணீர் தேவை அதிகமுள்ள தென்னை, வாழை... போன்ற பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வாடிய பயிர்களைக் கண்டு பொறுக்க முடியாமல்... எப்படியாவது தண்ணீரைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில், ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி வருகிறார்கள், விவசாயிகள். 

ஆனாலும், ‘1,200 அடி போர் போட்டாச்சு, வெறும் புகைதான் வந்துச்சு...’ என்ற ரீதியில் புலம்பும் விவசாயிகள்தான் அதிகம். இன்னும் பலர் ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கடன் வாங்கி, கூடுதல் கடன் சுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஆழ்துளைக் கிணறுகள் குறித்த சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், நீர்மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ். அவை இங்கே... 

“பொதுவாக விவசாயிகள், வறண்ட காலங்களில்தான் அதிகமாகப் போர்வெல்(ஆழ்துளை) அமைக்கிறார்கள். எப்படியாவது தண்ணீரை எடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் 1,500 அடி வரையில்கூட போர்வெல் அமைக்கிறார்கள். ஓர் இடத்தில் தண்ணீர் இல்லையென்றால் இன்னொரு இடம் என ஒரே நிலத்தில் ஆறு, ஏழு போர்வெல்களைக்கூட தோண்டி விடுகிறார்கள். இது மிகவும் தவறான செயல். இந்தக் காலகட்டத்தில் போர்வெல் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். 

‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்கள், புதிதாகப் போர்வெல் அமைக்கமாட்டார்கள். உங்கள் போர்வெல், உறிஞ்சிக் கொடுக்கும் நிலத்தடி நீருக்கான ஆதாரம், அருகிலுள்ள குளம், ஏரி போன்றவைதான். அவை, முற்றிலும் வறண்டு போயுள்ள நிலையில், நிலத்தடியில் உள்ள ஊற்றுகளும் தண்ணீர்க் கசிவு இல்லாமல் காய்ந்துபோய் இருக்கும். போர்வெல் அமைக்கும் இடத்துக்கு அருகில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் ஆகியவை வறண்டு கிடப்பதால்... சாதாரணமாக 300 அடியில் தண்ணீர் கிடைக்கும் இடங்களில்கூட, 800 அடிக்கு மேல் பூமியைத் துளைக்க வேண்டியிருக்கும். அப்படியே துளைத்தாலும்,  ஒரு சில இடங்களில் தான் தண்ணீர் கிடைக்கும். பெரும்பான்மையான இடங்களில் போர்வெல் அமைப்பது, தோல்வியில்தான் முடிகிறது” என்ற பிரிட்டோராஜ் தொடர்ந்தார். 

“போர்வெல்களில் அதிகபட்சம் 850 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர், தற்போது 1,650 அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை. இந்த அசாதாரணச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, ‘நிலத்தடி நீரைக் கண்டுபிடித்துக் கொடுக்கிறோம்’ என்று சிலர் விவசாயிகளிடம் பணம் பறித்து வருகிறார்கள். ஒரு பாயின்ட் கண்டுபிடிப்பதற்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். 

மிரட்டும் கோடை... ஆழ்துளைக் கிணறு அமைக்கிறீர்களா? கொஞ்சம் யோசியுங்கள்!

மனிதர்களின் உடம்பில் இருக்கக்கூடிய இரும்புச்சத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நிலத்தடி நீர் கண்டுபிடிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி மனிதர்களால், அதிகபட்சமாக 320 அடி வரை மட்டுமே நிலத்தடி நீரை உணர முடியும் என்பது தெளிவாகியுள்ளது. அதற்குக் கீழே உள்ள நீரின் தன்மையை மனிதர்களால் உணர முடியாது என்பதுதான் அறிவியல் பூர்வமான உண்மை. எனவே, நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் மூலமாகத் தண்ணீர் உள்ள இடத்தைக் கணிப்பதைவிட, அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து போர்வெல் அமைப்பதால், தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்படும். 

நிலத்தடி நீர் ஆய்வாளர்களை மண்ணின் தன்மை; அருகில் உள்ள போர்வெல், கிணறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகே நமது நிலத்தில் நீரோட்டம் பார்க்கச் சொல்ல வேண்டும். நிலத்தின் மேட்டுப்பகுதியில் எந்த இடத்தில் தண்ணீர் இருக்கும் என நினைக்கிறோமோ, அந்த இடத்தையும்... நிலத்தின் பள்ளத்தில் எங்குத் தண்ணீர் இருக்கும் என நினைக்கிறோமோ அந்தப் பகுதியையும் மனதில் குறித்துக்கொள்ள வேண்டும். 

இந்த இரண்டு இடங்களையும் ஒரே நேர்க்கோட்டால் மானசீகமாக இணைத்து, அந்தக் கோட்டுப்பகுதியில் ஆய்வாளர்களைப் பாயின்ட் குறிக்கச் சொல்ல வேண்டும். நீரோட்டம் பார்ப்பதில் தேர்ந்த அனுபவசாலிகளை அழைத்துச் செல்வது நல்லது. அதேபோல, இரண்டு மூன்று நபர்கள் மூலம் இடத்தைக் கணிப்பதும் அவசியமானது. இப்படியெல்லாம் பார்த்தாலும் போர்வெல்லில் தண்ணீர் வரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 

அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம் போன்ற துறைகளை அணுகினால், அவர்கள் அறிவியல் ரீதியாக நிலத்தடியில் உள்ள பாறை அமைப்புகள், நீர்த் தேங்கி இருக்கும்  அளவு  ஆகியவற்றின் அடிப்படையில் போர்வெல் அமைக்கச் சரியான இடத்தைத் தேர்வு செய்து தருவார்கள். ஓர் இடத்தைத் தேர்வு செய்து தருவதற்கான கட்டணமாக... வேளாண் பொறியியல் துறை 5,00 ரூபாயையும்; பொதுப்பணித்துறை 1,000 ரூபாயையும்; குடிநீர் வடிகால் வாரியம் 2,500 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கின்றன. 

மேலே சொன்ன துறைகளில் ஏதாவது ஒரு துறையில் நாம் பதிவு செய்துகொண்டால் முன்னுரிமை அடிப்படையில் இடம் தேர்வு செய்து தருவார்கள். அரசுத் துறைகள், இயந்திரம் மூலமாக நிலத்தடி நீர் ஆய்வு செய்யும்போது, நிலத்தடியில் உள்ள பாறை பிளவுகள் தெளிவாகத் தெரியும். ஆனால், அரசுத்துறையில், பணியாளர்கள் குறைவாக இருப்பதால், நாம் உதவிக்கு ஆள்களைத் தயார் செய்து கொடுக்க வேண்டும்.

மிரட்டும் கோடை... ஆழ்துளைக் கிணறு அமைக்கிறீர்களா? கொஞ்சம் யோசியுங்கள்!

இடம் தேர்வு செய்து, போர்வெல் அமைக்கும்போது, நாம் அந்த இடத்திலிருந்து எந்தெந்த மட்டத்தில் பாறைகள் இருக்கின்றன, எத்தனை அடியில் ஊற்று வருகிறது... போன்ற விவரங்களைக் குறித்து வைத்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மழைநீர்ச் சேகரிப்புக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும். 

தற்போது இருக்கும் போர்வெல்லில் எவ்வளவு நேரம் தண்ணீர் வருகிறது. நம்மிடம் உள்ள பயிர்களின் தினசரி தேவை எவ்வளவு என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். கிடைக்கும் நீருக்கும், தேவையான நீருக்குமான அளவு குறைவாக இருந்தால், தற்போது இருக்கும் போர்வெல்லையே செறிவூட்டிக் கொள்ளலாம். கிடைக்கும் நீரை அப்படியே பாய்ச்சுவதைத் தவிர்த்து, தொட்டிகள் அமைத்து, நீரைச் சேகரித்துப் பாசனம் செய்யலாம். 

நிலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வரப்பு ஓரங்களில் 20 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி ஆழத்துக்கு வாய்க்கால் எடுக்க வேண்டும். 10 அடி இடைவெளியில் இதுபோன்ற வாய்க்கால்களை அமைப்பதன் மூலம், அவ்வப்போது கிடைக்கும் மழைநீரை மண்ணுக்குள் அனுப்பி போர்வெல்லை செறிவூட்ட முடியும்” என்ற பிரிட்டோராஜ் நிறைவாக, “இந்தக் கோடையைத் தாக்குப் பிடித்துவிட்டால் போதும், அடுத்து வரும் மழைக்காலங்களில் நீராதாரங்கள் பெருகும். அதன் மூலமாக நிலத்தடியில் வறண்டு கிடக்கும் ஊற்றுகளில் தண்ணீர் கசியும். போர்வெல்லில் தண்ணீர் பெருகும். அதனால், இரண்டு மாத கோடையைச் சமாளிப்பதற்காகப் புதிதாக போர்வெல் அமைத்து, பணத்தை வீணாக்குவதுடன், பூமியையையும் காயப்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு இதே நிலைமை வராமல் இருக்க, தற்போதே நிலத்தில் மழைநீர் சேமிக்கும் அமைப்புகளையும், நிலத்தடி நீரை செறிவூட்டும் அமைப்புகளையும் நிலங்களில் அமைத்தால், இனிவரும் காலங்களில் கோடையைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்” என்றார். 
 
தொடர்புக்கு,
பிரிட்டோராஜ்,
செல்போன்: 99444 50552.

குழாய் இறக்கும்போது கவனம்!

‘‘மணல் சார்ந்த களிமண் உள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் நில அமைப்பில் அதற்குச் சற்று உயரமான மாவட்டங்களில் போர்வெல் அமைக்கும்போது... பாறை இருக்கும் இடம் வரை கேசிங் குழாயை (பைப்) இறக்க வேண்டும். அப்போதுதான் மண் சரிவு ஏற்பட்டு குழாய் அடைத்துக்கொள்வது, மோட்டார் சிக்கிக் கொண்டுவிடுவது போன்ற இடர்பாடுகளைத் தடுக்க முடியும். 

விருதுநகர், தூத்துக்குடி, கடலூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் களிமண் நிலங்களில், கிட்டத்தட்ட 40 அடி ஆழம் வரை களிமண் இருக்கும். இதனால் 40 அடி வரை குழாய் இறக்கினால் போதும் என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்து விடுகிறார்கள். ஆனால், எத்தனை அடியில் வெள்ளை நிற பாறைகள் (ஷட்) வருகிறதோ, அதுவரை கேசிங் குழாய் இறக்க வேண்டும். பொதுவாக வெயில் காலத்தில் போர்வெல் அமைக்கும்போது, மேல்புற மண், பாறை போன்ற மாயத்தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால் மழை பெய்தவுடன் அந்த மண் இளகி, போர்வெல்லை மூடிவிடும். மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருப்பதுபோல் மூடப்பட்ட போர்வெல்களின் எண்ணிக்கை அதிகம்’’ என்கிறார் பிரிட்டோராஜ்.

மழை நீரே போதும்! 

‘‘மண், மண் சரிவு, பாறைகளின் அமைப்பு ஆகிய மூன்றும்தான் மழை நீர் செறிவுக்கான முக்கியக் காரணிகள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலை, மேற்கு திசையில் உயரமாகவும், வங்காள விரிகுடாவை நோக்கி சரிவாகவும் அமைந்திருக்கிறது. இதனால், மழை நீர் பூமிக்குள் செல்லாமல், நிலத்தின் மேல்பகுதியில் முறையற்று வழிந்தோடி கடலில் கலக்கிறது. மழை நீரைப் பூமிக்குள் அனுப்பும் செயலையும் நாம் முறையாக மேற்கொள்வதில்லை.

ஒவ்வொரு பருவமழைக் காலங்களிலும் 40 முதல் 45 சதவிகிதம் மழை நீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. மீதமுள்ள 55 சதவிகிதத்தில் 15 சதவிகித அளவு நீர் ஆவியாகிவிடுகிறது. குளங்களில், ஏரிகளில், நிலங்களில் மழை நீர் சேகரிக்கப்படுவதில்லை. மழை நீரை முறையாகச் சேமித்தாலே நிலத்தடி நீராதாரம் சிறப்பாக இருக்கும். மழை நீரைச் சேமிக்காத காரணத்தால்தான், கிணறுகள் எல்லாம் தூர்ந்துபோய்க் கிடக்கின்றன” என்கிறார் பிரிட்டோராஜ்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.