ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி என்றும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் இரு பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலா சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால் டி.டி.வி.தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கட்சி விவகாரங்களை கவனித்து வந்தார்.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்கள், நிபந்தனைகள் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களால் அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவதில் இழுபறி நிலவுகிறது.
தற்போது, அ.தி.மு.க.வில் உள்ள சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த அணியை செய்தி தொடர்பாளர்களான நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகியோர் வழி நடத்திச் செல்கிறார்கள். அவர்கள் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆதரவாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புகழேந்தி, ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்படும் என்றும், அப்போது சிலரது முகத்திரை கிழியும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் ஓ.பன்னீர்செல்வத்தையே மறைமுகமாக குற்றம் சாட்டுவதாக இருந்தது. மதுரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் பெரும் திரளாக கூடினார்கள்.
அடுத்து மேலூரில் நேற்று முன்தினம் நாஞ்சில் சம்பத் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இதிலும் பெருமளவில் தொண்டர்கள் திரண்டனர்.
அவர்கள் ‘‘விடுதலை செய் விடுதலை செய்’’, தினகரனை விடுதலை செய், டெல்லி போலீசே பொய் வழக்கு போடாதே என்று கோஷம் எழுப்பினார்கள்.
தொடர்ந்து நேற்று உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள், நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், தினகரனை கைது செய்ததற்காக பா.ஜனதாவையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இதில் அவர் பேசுகையில், ‘பா.ஜ.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்கு போட்டு டி.டி.வி.தினகரனை கைது செய்துள்ளது. லஞ்சம் எந்த அதிகாரிக்கு கொடுக்க பேசப்பட்டது என்று இன்று வரை மத்திய அரசும், சி.பி.ஐ.யும் தெரிவிக்க வில்லை. இதில் இருந்தே இது பொய் வழக்கு என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அவரை உடனே விடுவிக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் மூலம் அ.தி.மு.க. என்ற மாபெரும் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு, ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்து விட்டார்’ என்றார்.
ஏற்கனவே தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் தினகரன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிகளுக்கும், சதிகளுக்கும் முடிவு கட்டும் வகையில் கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அறிவித்துள்ளனர்.
தினகரன் ஆதரவாளர்கள் நடத்தும் கூட்டத்தில் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்கிறார்கள். அ.தி.மு.க. அம்மா அணி மற்றும் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி போல் தினகரன் ஆதரவாளர்கள் 3-வது அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. பிளவுப்பட்டபோது எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக்கி ஆட்சியை கட்டிக்காத்தவர் சசிகலா. இதற்காக எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்து சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின் போது அரசை வெற்றிபெற வைத்தார்.
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால் சசிகலாவை சிறையில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவதை அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டனர். தினகரன் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தோ, எதிர்த்தோ யாரும் குரல் கொடுக்கவில்லை.
நாஞ்சில் சம்பத், புகழேந்தி வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஆகியோர் மட்டுமே தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் அவரது கணவர் மாதவனும் தனித்தனியாக கட்சி நடத்தி வருகிறார்கள். அதிலும் முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.