News
Loading...

என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை...

என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை...

நிதானமாக பேசுகிறார் இயக்குநர் ராதாமோகன்

‘‘ஒவ்வொரு மனுஷனும் ஒரு கதைதான். அவனோட கனவு, ஆசை, நிராசை, கொண்டாட்டம் எல்லாத்தையும் பொத்தி வச்சிருக்கிற அனுபவமும், அழகுமே சொல்லி மாளாது. சினிமாவாக எடுத்தும் தீராது. நிறைய படிச்சிட்டோம் என்பதோ, நிறைய சினிமா எடுத்திட்டோம் என்பதோ விஷயமே இல்லை. எழுதுவதோ, படிப்பதோ, படம் எடுப்பதோ நமக்குள் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தணும். அந்த உள்மாற்றம்தான் மன விசாலம். என் ‘பிருந்தாவனம்’ அப்படிப்பட்டது. 

என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை. ‘பிருந்தாவனம்’ மெல்லிய உணர்வுகளைப் பேசும். சொல்ற விஷயத்தை அழகா, ஜாலியா, சந்தோஷமா, நெகிழ்ச்சியா, உணர்த்திட்டுப் போற மாதிரி சொல்லும்...’’ அமைதியின் முழு வடிவில் பேசுகிறார் இயக்குநர் ராதாமோகன், ‘மொழி’யின் வழி ஆழப் பதிந்தவர்.

‘பிருந்தாவனம்’ - உங்கள் இயல்புக்கேற்ப மென்மையாக இருக்கு...
எனக்கு உணர்வுகள் பேசப்படணும். பெயருக்கேற்ற மாதிரி ஒரு சந்தோஷம், மன உணர்வு கிளரும். வேகமாகிவிட்ட வாழ்க்கையில் நமக்கான ஆறுதலுக்கும், புரிதலுக்கும் ஏங்கி நிற்குது நமது இருப்பு. இதிலும் அப்படித்தான். அருள்நிதி முடிதிருத்தும் கலைஞராக வருகிறார். வாய் பேச, காது கேட்க முடியாதவர். 

என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை...

எளியவர்களிடம் ததும்பும் ஒரு பிரியம் இருக்கும் இல்லையா, அது இருக்கிற ஆள். நாடோடி மாதிரி, தாயும் தகப்பனும் இல்லாமலேயே சந்தோஷமாக வாழ முடிகிற அற்புதன். அவர் நடிகர் விவேக்கோட ரசிகர். உணர முடியாமலேயே அவர் சினிமா சேட்டைகளில் மயங்கின ஆள். ஊட்டியில் விவேக்கோட ஓர் எதிர்பாராத சந்திப்பு நடக்குது. 

தனக்கு இப்படியொரு ரசிகரான்னு விவேக் ஆச்சர்யத்தில் மூழ்க, நட்பு அடுத்த கட்டத்திற்கு போகுது. அருள்நிதிக்கு இருக்கிற மாற்றுக் குறைவினால் கைவசப்படாத பிரியங்கள், அவரோட பெண் நட்புன்னு கதை போகுது. உடனே ‘மொழி’ ஜோதிகா ஞாபகம் வரவேண்டாம். இது ஜோதிகாவின் மாற்று இல்லை. 

என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை...

அதில் ஜோ தைரியமான, படித்த, தனக்கென பிடிவாதமான கொள்கைகள் உள்ள பொண்ணு. இதில் அருள்நிதி பாமரன், பிரியம் தேடுறவர், நிராகரிக்கப்பட்டு, புறம் தள்ளப்பட்ட எளிய மனிதன். அன்புன்னா அன்பு... கோபம்னா கோபம். ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஒளிஞ்சு நின்னு குரோதம் பார்க்காத மனுஷன். இப்படியொரு மனுஷனைக் கண்டறிய தவறி  இருக்கோமேன்னு ஒவ்வொருத்தருக்கும் எண்ணம் எழும். அதற்கான இடங்கள் படத்தில் தொடர்ச்சியாக வருது.

இந்தப் படத்தில் அருள்நிதி வந்தது எப்படி..?
இரண்டு பேரும் எப்ப சந்தித்தாலும் சேர்ந்து படம் ெசய்யணும்னு பேசிக்கிட்டே இருப்போம். இந்தக் கதை மனதில் இருந்தபோதும் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எப்பவும் அருள்நிதியின் அந்த கம்பீர உயரத்திற்குப் பின்னாடி, அவரோட சிரிப்பில ஒரு இன்னொசென்ஸ் இருக்கும். பணிவும் இருக்கும். இதை யாரும் பயன்படுத்தலைன்னு தோணுச்சு. 

இந்தக் கதையை அவர்கிட்டே சொன்னதும், ‘ஆஹா’னு சம்மதிச்சார். அதோட நிற்காமல் வாய் பேச முடியாதவர்களின் பேச்சு அறிதலைத் தெரிந்துகொண்டார். விடாத ஒரு மாதப்பயிற்சி. அது கூடவே ஷூட்டின்போது அந்த மொழி தெரிந்தவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அவர் எடுத்துக்கொண்ட அக்கறையில் அந்த கேரக்டர் இன்னும் துலங்கியது. வெறும் பாவனைகளில் நடிப்பைக் கொண்டு வருவது சவால் நிரம்பியது. அதை அழகா எடுத்து செய்திருக்கார் அருள்.

ஹீரோயின்களுக்கு உங்கள் படத்தில் நல்ல இடம் இருக்கு...
அப்படித்தானே இருக்கணும்? அதெல்லாம் சிறப்பு இயல்பா என்ன... ரவிச்சந்திரனின் பேத்தி தான்யாதான் கதைநாயகி. ஆபீஸுக்கு வரவழைச்சு, ஒரு பயிற்சி மாதிரி கொடுத்து, படத்திற்குள்ளே அவங்களை கொண்டு வந்தோம். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் வெகு இயல்பாக அருமையாக பொருந்திட்டாங்க. அந்த வகையில் அவங்க  புதுமுகம்னு யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. 

அவ்வளவு சிறப்பு. ஏதோ வந்திட்டு போற மாதிரி, வெறும் பாடலுக்கான பெண் மாதிரியான படைப்பல்ல. அவங்களுக்கான நல்ல இடம் இருக்கு. எனக்கு எப்பவும் பெண்களை சித்தரிக்கும்போது அதிகம் கவனம் இருக்கும். அவங்க போகப்பொருள் அல்ல. உணர்ச்சிகளோடும், வலிகளோடும் வாழ்ந்துகொண்டு இருக்கிற சக ஜீவன்தான். அதை நான் புரிந்துகொண்ட மாதிரி, பூமியில் எல்லோரும் புரிஞ்சுக்கணும் என்பது என் ஆசை. அது என் படங்களில் ஊடாடி தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது உண்மைதான்.

விவேக் - விவேக்காகவே வருவது...
இந்தக் கதையை அவர்கிட்டே சொன்னதும் சந்தோஷமாகிட்டார். ‘எனக்கான பிரத்யேகமான இடங்கள் இருக்கு’ன்னு சொன்னார். அவருடைய நகைச்சுவை மட்டுமல்ல, பிறகான அவருடைய நல்ல பக்கங்களும் திறக்கப்படுகிறது. அவர் அனுபவித்து நடித்தார். அவரும், அருள்நிதியும் அன்பைப் பரிமாறிக் கொள்கிற இடங்கள் நல்லாயிருக்கும். 

அப்புறம் எனது ஆஸ்தான நடிகர் எம்.எஸ். பாஸ்கரும் வருகிறார். இன்னிக்கு அவருக்கு பெரும் பாராட்டுகள் வந்து சேர்கிற இடத்தில் இருக்கார். அவர்கிட்டே நீங்க எஸ்.வி.ரங்காராவ் மாதிரியான இடத்தை சுலபமாக முயற்சி இல்லாமல் கைப்பற்ற முடியும்னு சொல்லியிருக்கேன். ஒரு நல்ல படம், பார்க்கிற அனுபவத்தோட முடிஞ்சிடக்கூடாது. அது பார்க்கிறவர் மனதில் தொடர்ந்து வளரணும். மற்றவர்களை நோக்கி ஒரு புன்னகை, ஒரு கையசைப்பு, ஒரு கைபற்றுதல்கூட இல்லாமப் போயிடுச்சேன்னு ஏக்கம் சேர்ந்ததுகூட இந்தப் படம்.

மியூசிக்...
விஷால் சந்திரசேகர். இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு தெளிவான இடத்திற்கு வந்து நிற்பார் பாருங்க. மூணு பாடல்கள்தான். வகையான இடத்தில் மட்டுமே இருக்கு. பி.சி.ஸ்ரீராம் அசோசியேட் விவேகானந்தன் முதல் தடவையாக தனித்து செய்கிறார். பயின்று வந்த இடத்தின் பக்குவம், நேர்த்தி, அழகு, கச்சிதம் தெரியுது. எனக்கு சினிமா வெறும் பொழுதுபோக்கு இல்லை. இந்தப்படம் பார்க்கும்போது போகிற போக்கில் உணர்த்து கிற செய்திகள் அதைச் சொல்லும். பயன்பாடான பொழுதுபோக்குக்கு பிருந்தாவனம் நிச்சயம் கியாரண்டி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.