அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும். 3 ஆண்டுகளில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும் என்று பழனிசாமி அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் ஆரப்பாளையம் முதல் அருள்தாஸ்புரம் வரையிலான ஜெ.ஜெயலலிதா உயர் மட்ட பாலம், திருமலையார் பாடித்துறையில் இருந்து செல்லூர் வரையிலான எம்.ஜி.ஆர். உயர் மட்ட பாலம் ஆகிய இரு உயர் மட்ட பாலங்களை திறந்து வைத்தார்.
அதற்குப் பிறகு அவர் விழாவில் பேசியதாவது:
''தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சியில் 2338 சிறு மற்றும் உயர்மட்டப் பாலங்கள் கட்டி சரித்திரம் படைத்த ஆட்சி என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் தனியொரு பெண்மணியாக ஜெயலலிதா போராடி போராடிப் பெற்ற வெற்றிகள்தான் இன்று தமிழக மக்களுக்கு நலத்திட்டங்களாக கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
மதுரை மக்களின் நெஞ்சங்களில் மீனாட்சி எப்படி குடிகொண்டிருக்கிறாளோ, அப்படியேதான் ஜெயலலிதாவும் மதுரை மக்களால் நேசிக்கப்படுகிறார். அந்த நேசிப்பில் சிறிதும் குறைவு இல்லாமல் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு ஆட்சி நடத்தும், என்று இந்த நேரத்தில் உறுதி கூறிக் கொள்கிறேன்.
எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அந்த செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒருமித்த கருத்துடன் கூடிய ஒற்றுமை அவசியம். ஜெயலலிதாவின் அரசை வெற்றிகரமாக கொண்டுசெல்ல அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம்.
ஜெயலலிதாவின் சீரிய வழிகாட்டுதலின்படி, திறம்பட அமைச்சர் பணியில் பணியாற்றினேன். அவர்கள் வழிகாட்டுதலின்படியே இன்றைக்கு முதல்வர் பணியில் அமர்ந்து துரிதமாகவும், திறம்படவும் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுகின்றேன்.
பல்வேறு மாவட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கு நேரில் வந்து கலந்து கொள்கிறேன். காரணம், ஜெயலலிதாவின் விருப்பமான, தமிழக மக்களின் நலனை பேணிக்காப்பது. என்னிடம் வரும் கோப்புகளுக்கு உடனுக்குடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதனால், அரசு இயந்திரம் முழுமூச்சில் செயல்படுகிறது. பல முக்கிய தேர்வுகளில் துறைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாடு வளர்ச்சிக்குத் தீர்வு காணப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் மூலமாக பல்வேறு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகள் எல்லாம் இனிமேல் அரசே முழுமையாக எடுத்து செயல்படுத்தும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
ரோடு காண்ட்ராக்ட் அதாவது மணலை லாரியில் நிரப்புவது, அதைப்போல ஸ்டாக்யார்டு மணலை சேமித்து வைப்பது, இரண்டையும் இனிமேல் அரசினுடைய மேற்பார்வையில் எடுத்து செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை இங்கே இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் மணல் விலை கட்டுப்படுத்தப்படும். அதைப்போல பொதுமக்களும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருக்கிறவர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
அதுமட்டுமல்ல மணல் இருந்தால் தான் நிலத்தடி நீர் உயரும். ஆகவே, பொதுமக்கள் இனி தாங்கள் கட்டுகின்ற கட்டிடங்களுக்கு எம்சேண்ட் பயன்படுத்தவேண்டுமென்றும், கட்டுமானத் தொழில் ஈடுபட்டிருக்கின்றவர்களும் படிப்படியாக எம்சேண்ட்-க்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், 2, 3 ஆண்டுகளில் முழுமையாக மணல் நிறுத்தப்படும் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய தமிழகத்திலே நிலத்தடி நீர் உயர்த்தப்படவேண்டும். மழை அளவு குறைவாக உள்ளதால், மணல் இருந்தால் தான் அந்த நீரை சேமிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொண்டு, மிகச்சிறப்பான எழுச்சியான இருபெரும் தலைவர்வர்களுடைய பெயர், , எம்.ஜி.ஆர் பெயர், ஜெயலலிதா பெயர் இரண்டு பாலங்களுக்கு சூட்டப்பட்டு இன்றைக்கு திறக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்'' என்று பழனிசாமி பேசினார்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.