News
Loading...

திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக்குக்கு எதிராக வலுத்த போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக்குக்கு எதிராக வலுத்த போராட்டம்

மிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த மாதம்  1ம் தேதி மூடப்பட்டதால் மாற்று இடங்களில் இந்த கடைகளை திறப்பதற்கான முயற்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கு மாநிலம் முழுவதும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் என பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கடையை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வந்த  127 கடைகளில் நீதிமன்ற உத்தரவுபடி 81 கடைகள் மூடப்பட்டுவிட்டதால் மீதமுள்ள 46 கடைகளிலும் அளவுக்கு அதிகமான மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

 திருவாரூர் அடுத்த கிடாரங்கொண்டானில் சுடுகாடு அருகேயுள்ள கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்து பல மாதங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அந்த கடை முன்பாக போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை மற்றும் கடையின் பெயர் பலகை போன்றவற்றை சேதப்படுத்தினர்.  அந்த கடை உடனடியாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்த மதுபாட்டில்கள் சேதமின்றி தப்பின. பின்னர் திருவாரூர் தாசில்தார் சண்முகவடிவேல் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடையினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

உண்ணாவிரதம்:  கண்கொடுத்த வணிதம் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் நேற்று கண்கொடுத்தவணிதம் கடைத்தெருவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கொரடாச்சேரி போலீசார் மற்றும் குடவால் தாசில்தார் அன்பழகன் ஆகியோர் அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு மாத காலத்திற்குள் அங்கிருந்து கடையினை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மதியம் 2 மணியளவில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் பல இடங்களில் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் இன்ஸ்பெக்டர் பேச்சால் மக்கள் ஆவேசம்: முத்துப்பேட்டை அடுத்த தேவதானம் ஒட்டங்காடு மெயின் ரோட்டில்  அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையை அகற்றக்கோரி நூற்றுக்கும்  மேற்பட்ட பெண்கள் நேற்று அந்த டாஸ்மாக் கடை முன் அமர்ந்து முற்றுகை  போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர்  சுப்பிரியா, எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் ஆகியோர் பெண்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  அங்கேயே அடுப்பு வைத்து  சமையல் செய்ய தொடங்கினர். 

இதை போலீசார் தடுத்து நிறுத்தினர். 4 மணி  நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தை தொடர்ந்து மாலை 3.30 மணியளவில்  முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், மாவட்ட டாஸ்மாக் அலுவலர் ராஜகோபால்,   ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும் 31ம் தேதிக்குள்  டாஸ்மாக் கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி கூறி எழுதி கொடுத்தனர்.  இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள்  கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில்  ஈடுபட்ட பெண்களிடம்  பேச்சுவார்த்தை நடத்திய பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர்  சுப்பிரியா  “டாஸ்மாக் கடையை திடீரென்று மூடிவிட்டால் விலைவாசி ஏறிவிடும்   வெளிநாடுகளில் பெண்கள் கூட மது குடிக்கின்றனர்” என்றார். இதனால் ஆத்திரம்  அடைந்த பெண்கள் இன்ஸ்பெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு   ஏற்பட்டது.

பெண் கண்ணீர்: போராட்டத்தில்   கலந்துகொண்ட ராணி என்பவர் கண்ணீர்மல்க கூறுகையில், ‘டாஸ்மாக்  கடையால் தினமும்  எனது கணவர் குடித்துவிட்டு இரவில் வந்து  அடிக்கிறார். என்னை அடிக்காத நாளே  இல்லை. இரு கைகளும் உடைந்து  விட்டது. தற்போது அதற்கு சிகிச்சை  பெற்று வருகிறேன். குழந்தைகளை  வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே  சிரமப்படுகிறேன். இந்த டாஸ்மாக்  கடை  இங்கே தொடர்ந்து செயல்பட்டால் நான்  தீக்குளித்து சாவேன். என்னை  போன்று நிறைய பெண்களும் சாவது நிச்சயம்’ என்று  கண்ணீர் விட்டு  அழுதார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.