தமிழக கைவினைஞர்கள், அவர்களது திறமை ஆகிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தை தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரித்து தனி வலைதளம் உருவாக்க புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் தமிழக அரசு 2015-16ல் ரூ.1 கோடி நிதியை தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்துக்கு அளித்தது.
இந்த வலைதளத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்திறக் கைவினைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் கைவினைஞர்கள் மற்றும் அவர்கள் திறமைகள் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 2 லட்சம் கைவினைஞர்கள் இந்த தொகுப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 500 பேர் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல்கள் அடங்கிய ‘www.tnartisaan.com’ என்ற வலைதளத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் முதல்வர் கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். மேலும், கடந்த 2016-17ம் நிதியாண்டுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்ட 9 திறன் மிகு கைவினைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், 1 கிராம் தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும், பூம்புகார் மாநில விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட 12 கைவினைஞர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை 4 கிராம் தங்கப்பதக்கம், 1 தாமிரப்பத்திரம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.