ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதியை நிர்ணயிக்க லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் குரல் மாதிரி சோதனைக்கு தினகரன், சுகேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா தரகர்கள் நரேஷ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து டிடிவி தினகரனும், சுகேஷும் பலமுறை செல்போனில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலை போலீஸார் பதிவு செய்து வைத்துள் ளனர். பதிவு செய்யப்பட்டுள்ள குரல்கள் இவர்களுடையதுதான் என்பதை நிரூபிக்க இருவருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்துவது அவசியமாகும். எனவே தினகரன், சுகேஷிடம் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கேட்டு, டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கொடுத்தார்.
கட்டாயப்படுத்த முடியாது
இந்நிலையில், நேற்று டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. அதில், ‘குரல் மாதிரி சோதனை நடத்துவதற்கு குற்றவியல் சட்டத்தில் இடமில்லை. குரல் மாதிரிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது அவரவர் விருப்பம். யாரையும் கட்டாயப்படுத்தி குரல் மாதிரியை பதிவு செய்ய முடியாது’ என்று தெரிவித்துள்ளார். சுகேஷ் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தினகரன், மல்லிகார்ஜுனா, சுகேஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது நாளை (22-ம் தேதி) விசாரணை நடக்கிறது.
மேலும் ஒரு வழக்கு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை நிர்ணயிக்கவும் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். தினகரனுக்கு 5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை ஏதாவது ஒரு 5-ம் தேதியில் நடத்துமாறு கூறி, லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறார். இது தொடர்பாக தினகரன் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.