News
Loading...

61 வயது பேரழகி!

61 வயது பேரழகி!

யெஸ். தலைப்புதான் மேட்டர். இதற்கு சொந்தக்காரர், லியூ ஸியாஓக்விங் (Liu Xiaoquing). சீனாவின் டாப் சினிமா நாயகி. வெயிட்... வெயிட்.. வெயிட். இவை எல்லாம் பழைய புகைப்படங்கள் அல்ல. சமீபத்தில் எடுக்கப்பட்டவை! அதனால்தான் லியூவை என்றும் பேரழகி என திரையுலகம் கொண்டாடுகிறது. ‘Frozen Beauty’ என்றும் செல்லமாக அழைக்கிறது. 

1980களில் சீனத் திரையுலகில் முன்னணி நாயகியாக கலக்கிய லியூ, இப்போது பெரிய பிசினஸ் மேக்னட். உலகின் சிறந்த அழகியாக சீன தொலைக்காட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். பிறந்து வளர்ந்ததெல்லாம் சான்க்விங் கிராமத்தில்தான். சிறுவயதில் வயலில் கூலி வேலை பார்த்திருக்கிறார். மக்கள் ராணுவ இயக்கத்தில் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டிருக்கிறார். 

அரசியலிலும் கால் பதித்திருக்கிறார். சீன ராணுவ மேடை நாடகக் குழுவான ‘செங்குடு’வில் நடிகையாக மாறிய லியூ, தனது 30 வயதில் ‘The Great Wall of the South China Sea’ (1976) படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். ‘What a Family’, ‘The Little Flower’, ‘The Burning of the Imperial Palace’ என தொடர் வெற்றி, லியூவுக்கு க்யூ கட்டியது. 

61 வயது பேரழகி!

1990களில் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு தொழிலில் கவனம் செலுத்தியவர், 2004ம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். சினிமா, பிசினஸ் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார். ‘I did my way in 1983’ என்னும் இவரது சுயசரிதை பரவலாக கவனம் பெற்றது. ‘உலகின் டாப் 50 பணக்காரர்களில்’ இவருக்கு 45வது இடத்தை அளித்து 1999ம் ஆண்டு ‘Forbes’ பத்திரிகை இவரை கவுரவப்படுத்தியது.

இதனையடுத்து வெளியான ‘From A Movie Star to A Billionaire’ புத்தகம் டாப் செல்லராக வெளுத்து வாங்கியது. யார் கண் பட்டதோ... 2002ம் ஆண்டு யானைக்கு அடிசறுக்கியது. வரி ஏய்ப்புப் பிரச்னையில் லியூவின் நிறுவனம் சிக்கியது. கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். தவிர, 7.1 மில்லியன் அபராதம் வேறு. 

விடுதலைக்குப் பின் 2004ல் மீண்டும் நடிக்கத் தொடங்கி, பிசினஸிலும் வெற்றி பெற்று, இன்று உலகப் பேரழகிகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். சர்ச்சை? அது இல்லாமலா..?! பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர், உடல் தோலையே மாற்றிக் கொண்டவர்... என ஏகப்பட்ட வதந்திகள். ‘‘முப்பது வயது வரை எந்த க்ரீமையும் நான் பயன்படுத்தியதில்லை. இப்போதும் எந்த சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை. 

மற்றபடி என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஐ டோன்ட் கேர்...’’ என தோளைக் குலுக்குகிறார். இதுவரை நான்கு முறை திருமணம் செய்து கொண்டிருக்கும் லியூவின் ‘For a Few Bullets’ திரைப்படம், 2016ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீசை அதிர வைத்திருக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் சாட்சாத் இவர்தான்! 

அழகின் ரகசியம்? அஸ்கு புஸ்கு என்கிறார். அந்த சீக்ரெட்டை மட்டும் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். 30 வயதிலேயே வயதாகி விட்ட தாகக் கருதும் பெண்கள் - மீண்டும் ஒருமுறை இந்தப் பக்கங்களில் அச்சாகியிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள்!

லியூவின் ‘For a Few Bullets’ திரைப்படம், 2016ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீசை அதிர வைத்திருக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் சாட்சாத் இவர்தான்! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.